தோல்வியிலிருந்து மீண்டு வரும் இலங்கை அணிக்கு T-20 தொடர் எவ்வாறு அமையும்?

2668

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்களுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் என்பன முடிவுக்கு வந்துள்ள நிலையில், அனைவரினது கவனமும், கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (14) நடைபெறவுள்ள ஒரு போட்டிக்கொண்ட T-20 தொடர் பக்கம் திரும்பியுள்ளது.

தனஞ்சயவின் மிரட்டும் பந்துவீச்சால் இலங்கைக்கு இமாலய வெற்றி

பந்துவீச்சில் அகில தனஞ்சயவும் துடுப்பாட்டத்தில் அஞ்செலோ மெதிவ்ஸும் மிரட்ட…

டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியை 2-0 என சுருட்டியிருந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரை 2-3 என இழந்திருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பிரகாசிக்க தவறிவருகின்ற இலங்கை அணி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்று, மீண்டும் முன்னேறத் தொடங்கியுள்ளோம் என்பதற்கான சமிக்ஞையை காட்டியுள்ளது.

முக்கியமாக நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்குத் திரும்பியுள்ள அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ், குசல் பெரேரா ஆகியோரின் துடுப்பாட்டம், திசர பெரேரா, தசுன் சானக மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் சகலதுறை பிரகாசிப்பு என்பன அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

இதனால், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இருக்கும் இலங்கை அணிக்கு, T-20 தொடரில் சாதிக்க கிடைக்குமா? என்பதுதான் தற்போது கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணி திடீரென சிறப்பான வெற்றியொன்றை பெற்று, எழுச்சிபெறும் வரலாற்றை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் தடுமாறியதுதான் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகின்றது.

எனினும், தற்போது இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள இலங்கை அணி அதே உத்வேகத்துடன் T-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

இலங்கைதென்னாபிரிக்க T-20 வரலாறு

இரண்டு  அணிகளும் 2012ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தொடர்கள் உட்பட மொத்தமாக ஒன்பது T-20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் தென்னாபிரிக்க அணி 5 போட்டிகளிலும், இலங்கை அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.  2013ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியிருந்ததுடன், இறுதியாக கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2-1 என தொடரை கைப்பற்றியிருந்தது.

தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியுடனான ஒரு போட்டியைக் …

தென்னாபிரிக்க அணியை பொருத்தவரையில் இலங்கையில் அவர்களது ஆதிக்கம் அதிகமாக இருந்ததை நாம் காணக்கூடியதாக உள்ளது. மொத்தமாக இலங்கையில் நான்கு T-20 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றயீட்டியுள்ளது.

அத்துடன் இரண்டு அணிகளுக்கும் இடையில் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டியிலும், தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது. அதிலும், தென்னாபிரிக்க அணிக்கு தலைமை தாங்கவுள்ள ஜே.பி.டுமினி 51 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி குறித்த போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்.பிரேமதாஸ மைதானமும், இலங்கை அணியும்

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு மிகவும் அதிக சாதகத் தன்மையை கொண்ட மைதானம் ஆர்.பிரேமதாஸ மைதானம்.

இதுவரையில் இலங்கை அணி இந்த மைதானத்தில் 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளதுடன், 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடி அதில் ஒன்றில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது.

எனினும், T-20 போட்டிகளில் இலங்கை அணிக்கு மிக துரதிஷ்டமான மைதானமாக இந்த மைதானம் பார்க்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற T-20  உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் இலங்கை அணி இந்த மைதானத்தில் தோல்வியடைந்திருந்தது. அதுமாத்திரமின்றி, மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 15 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன், மூன்று போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.

அத்துடன், இறுதியாக நடைபெற்ற சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளிடமும் இலங்கை தோல்வியை சந்தித்திருந்தமையும் நினைவுகூறத்தக்கது.

2017ஆம் ஆண்டு முதல்

T-20 போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக தடுமாறி வரும் இலங்கை அணி மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் 21 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 13 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய தொடர்களை முறையே 2-1 என வெற்றிகொண்ட இலங்கை அணி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷ் தொடரை சமப்படுத்திய போதும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோல்வியடைந்தது. எனினும் இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியது. மொத்தமாக இந்த காலப்பகுதியில் 7 தொடர்களில் பங்கேற்று மூன்றில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

(image courtesy – hindustan times)

இதேவேளை, தென்னாபிரிக்க அணி 2017ஆம் ஆண்டு முதல் 5 தொடர்களில் பங்கேற்று, அதில் இலங்கை தொடர் உட்பட மூன்றில் தோல்வியடைந்துள்ளது. இதில், இறுதியாக இந்தியாவிடம் தங்களது சொந்த மைதானத்தில தென்னாபிரிக்க அணி தொடரை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பயணம்: ரஷ்யாவில் இருந்து கண்டிக்கு, கண்டியில் இருந்து கொழும்புக்கு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நிறைவுக்கு வந்த ஒரு நாள் போட்டித் தொடரில் இறுதியாக நடைபெற்ற…

இலங்கைதென்னாபிரிக்க சாதனைகள்

  • ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் (இலங்கை) – 170/5  (கேப்டவுன் மைதானம், 2017)
  • அதிக ஓட்டங்கள் (தென்னாபிரிக்கா) – 169/5 (கேப்டவுன்)
  • குறைந்த ஓட்டங்கள் (இலங்கை) – 103/9 (ஆர்.பிரேமதாஸ மைதானம்)
  • குறைந்த ஓட்டங்கள் (தென்னாபிரிக்கா) – 113/10 (ஜொஹனஸ்பேர்க்)

துடுப்பாட்ட சாதனைகள்

  • அதிக ஓட்டங்கள் (தென்னாபிரிக்கா) – ஜே.பி.டுமினி (இன்னிங்ஸ் 5 – ஓட்டங்கள் – 183) (சராசரி – 61.00)
  • அதிக ஓட்டங்கள் (இலங்கை) – நிரோஷன் டிக்வெல்ல – (இன்னிங்ஸ் 3 – ஓட்டங்கள் 133) (சராசரி – 44.33)
  • ஒரு இன்னிங்ஸில் வீரரொருவரின் அதிக ஓட்டங்கள் (தென்னாபிரிக்கா) – பெப் டு ப்ளெசிஸ் (85 ஓட்டங்கள், ஹம்பாந்தோட்டை, 2013)
  • ஒரு இன்னிங்ஸில் வீரரொருவரின் அதிக ஓட்டங்கள் (இலங்கை) – திலகரட்ன டில்ஷான் (74* ஓட்டங்கள், ஹம்பாந்தோட்டை, 2013)

பந்து வீச்சு சாதனைகள்

  • அதிக விக்கெட்டுகள் (தென்னாபிரிக்கா) – இம்ரான் தாஹீர் (இன்னிங்ஸ் 8 – விக்கெட்டுகள் 13) (சராசரி – 12.46)
  • அதிக விக்கெட்டுகள் (இலங்கை) – நுவான் குலசேகர (இன்னிங்ஸ் 7 – விக்கெட்டுகள் 10) (சராசரி– 15.80)
  • ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிக விக்கெட்டுகள் (தென்னாபிரிக்கா) – லுங்கி என்கிடி (19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள், ஜொஹன்னர்ஸ்பேக், 2017)
  • ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிக விக்கெட்டுகள் (இலங்கை) – லக்ஷான் சந்தகன் (23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள், ஜொஹன்னர்ஸ்பேக் 2017)

T-20 தொடருக்கான அணிக்குழாம் விபரம்

இலங்கை

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), தினேஷ் சந்திமால், உபுல் தரங்க, திசர பெரேரா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தனன்ஜய டி சில்வா, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக, ஷெஹான் மதுசங்க, லக்ஷான் சந்தகன், அகில தனன்ஜய, ஜெஃப்ரி வெண்டர்செய், பினுர பெர்னாண்டோ, லலிரு குமார

தென்னாபிரிக்கா

ஜே.பி.டுமினி (தலைவர்), ஹசிம் அம்லா, டேவிட் மில்லர், ரீஷா ஹென்ரிக், எய்டன் மர்க்ரம், லுங்கி என்கிடி, காகிஸோ றபாடா, டெப்ரைஷ் சம்ஷி, ஜுனியர் டலா, என்டில் பெஹலுக்வாயோ, வியாம் முல்டர், கேஷவ் மஹாராஜ், குயின்டன் டி கொக், ஹென்ரிச் கிளாசன்

கடந்த கால முடிவுகள் எவ்வாறிருப்பினும், இந்தப் போட்டிக்கான இரு அணிக் குழாம்களையும் ஒப்பிடும்பொழுது, இரு தரப்பும் சற்று சம அளவிலான பலம் கொண்டவையாகவே உள்ளன. எனினும், பெப் டு ப்ளெஸில் இல்லாமை தென்னாபிரிக்க அணிக்கு பெரிய ஒரு இழப்பாகப் பார்க்கப்படுகின்றது.

உலகக் கிண்ண இலங்கை அணியில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் …

எனினும், மத்திய வரிசையை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு அனுபவம் மிக்க டுமினி மற்றும் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் ஆகியோர் இருப்பது இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாகவே அமையும். மறுமுனையில், ஒரு நாள் தொடரில் சுழற்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்திய அகில தனஞ்சய, தென்னாபிரிக்காவின் அதிரடியைக் கட்டுப்படுத்த இலங்கை அணிக்கு பங்காற்றவுள்ள முக்கிய வீரராகவே பார்க்கப்படுகின்றார்.

அது போன்றே, சகலதுறையில் பிரகாசிக்க இருக்கின்ற மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான திசர பெரேரா மற்றும் தசுன் சானக ஆகியோர் தென்னாபிரிக்க அணியினரால் முக்கியமாக இலக்கு வைக்கப்படவுள்ள வீரர்களாக இருப்பர். இவர்கள் அனைவரை விடவும் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்கவுள்ள முக்கிய வீரர்களாக குசல் ஜனித் பேரேரா மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு எதிரான, தென்னாபிரிக்காவின் பந்து வீச்சைப் பார்க்கும்பொழுது உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ றபாடா மிரட்டவுள்ள ஒருவராக இருப்பார். ஆரம்ப விக்கெட்டுக்களை இவர் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் அது இலங்கை அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த சிறந்த உதவியாக இருக்கும்.

வீரர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்குமோ, அதை விடவும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் நாளைய போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.