பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேல, வெத்தமுனி ஆகியோரால் அங்குரார்ப்பணம்

345

இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்டைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்ற பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பது தொடர்பான மூன்றாண்டு தேசிய திட்டத்தின் இரண்டாவது கருத்தரங்கு இலங்கையின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் பங்குபற்றலுடன் நேற்று (10) இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடற்கல்வி பிரிவு மற்றும் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ்வருடம் நடைபெறுகின்ற 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.

>> தனிப்பட்ட இலக்குக்காக விளையாட விருப்பமில்லை : திசர பெரேரா

இந்த விசேட கருத்தரங்களில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரான சிதத் வெத்தமுனியால் பாடசாலை கிரிக்கெட் முதல், முதல்தரப் போட்டிகள் வரை எவ்வாறான பாணியில் துடுப்பாட்டத்தை வீரர்கள் பின்பற்ற வேண்டும், அதுதொடர்பில் பயிற்றுவிப்பாளர்கள் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என தெளிவுபடுத்தினார்.

இதேநேரம், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவினால், கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்களின் அபிவிருத்தி மற்றும் ஆளுமை தொடர்பில் உதாரணங்களுடனான செயன்முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களில் ஒருவராக செயற்படுகின்ற ருச்சிர பல்லியகுருவினால் கிரிக்கெட் வீரர்களின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் தொடர்பாகவும், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளரான ஜயந்த செனவிரத்னவினால் பாடசாலை கிரிக்கெட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் தொடர்பிலும் வீரர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.

இவ்விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கருத்து வெளியிடுகையில், ”கிரிக்கெட் விளையாட்டுக்கு இன, மத, மொழி வேறுபாடு கிடையாது. இலங்கையின் நான்கு மத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற பல வீரர்கள் எம்மிடம் உள்ளனர். அவர்களது சேவை இலங்கையில் உள்ள ஒரு சிலருக்கு பெறுமதி வாய்ந்ததாக இருக்காவிட்டாலும், சர்வதேச அரங்கில் இவர்களது பெறுமதி இன்றுவரை இருந்துகொண்டு வருகின்றது. எனவே எமது கிரிக்கெட் விளையாட்டை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் பாடசாலை மட்டத்தில் உள்ள வீரர்களை தயார்படுத்த வேண்டும். இதற்காகத் தான் நாங்கள் மூன்றாண்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தோம்.

எனவே, இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் உள்ள திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களை உலக தரம் வாய்ந்த வீரர்களாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்” என தெரிவித்தார்.

”கிரிக்கெட் விளையாட்டில் அனுபவமுள்ள, திறமையான முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளேன். இதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் தொடர்ந்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அவர்கள் இந்த பொறுப்பை வெற்றிகரமாக செய்து கொடுப்பார்கள் என நம்புகிறேன். அதேபோன்று இதற்கான தமது நேரங்களை ஒதுக்கிவிட்டு தன்னார்வத்துடன் உதவுவதற்கு முன்வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக” அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மஹேல ஜயவர்தன தனது உரையில் கருத்து தெரிவிக்கையில், ”இலங்கை மக்களின் உயிர்நாடி கிரிக்கெட் என்பது போல இலங்கையில் பாடசாலை கிரிக்கெட் என்பது எல்லாவற்றுக்கும் அடித்தளம் என அனைவரும் அறிவர். இலங்கை அணி தற்போது எதிர்நோக்கியுள்ள பின்னடைவுக்கு பாடசாலை கிரிக்கெட்டை குறைகூறுவதை நான் முற்றாக மறுக்கிறேன். இதற்கு அதனைவிட பல பிரச்சினைகள் உள்ளன.

இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் முறைதான் உலகில் மிகச் சிறந்த கட்டமைப்புடன் நடைபெறுகின்ற போட்டித் தொடராகும். இதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். நான் இதுவரை சென்ற எந்தவொரு நாட்டிலும் அங்குள்ள பாடசாலைகளில் இவ்வாறான திட்டங்கள் இல்லை.

>> SLC டி-20 லீக் இம்மாத இறுதியில் ஆரம்பம்

ஆனால் நாம் இதுவரை எந்தவொரு இளையோர் உலகக் கிண்ணத்தையும் வெற்றி கொள்ளவில்லை. அதேபோல, தேர்வாளர்களின் தவறினால் உலகக் கிண்ணத்தை கோட்டை விட்டோம் என இங்கு வந்து விட்ட தவறுகளைப் பற்றி பேசுவதில் எந்தப் பயனும் கிடையாது. அதிலும் குறிப்பாக, தேவையான முடிவுகளை உரிய நேரத்தில எடுக்க முடியாவிட்டால் அதற்குப் பிறகு கவலைப்படுவதில் எந்த பயனும் இல்லை.

சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும், களத்தடுப்பாளர்களையும், பந்துவீச்சாளர்களையும் இலங்கை அணி நிறையவே கொண்டுள்ளன. எமது திட்டங்கள் சிறப்பானவை. எனினும், ஏன் எங்களால் இளையோர் உலகக் கிண்ணமொன்றை வெற்றிகொள்ள முடியாது உள்ளது. நாங்கள் விளையாடுகின்ற காலகட்டத்தில் முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், ரங்கன ஹேரத் மற்றும் லசித் மாலிங்க உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தார்கள். அவர்களிடம் திறமை இருந்தது. எதிரணி துடுப்பாட்ட வீரரை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள். அது எமக்கு இலகுவானதாக அமைந்தது. தற்போதைய இலங்கை அணியின் தோல்விக்கு இலங்கை தேசிய அணியில் அவ்வாறான பந்துவீச்சாளர்கள் இல்லாமையே பிரதான காரணமாகும். ஆகவே முதலில் பாடசாலை மட்டத்திலிருந்து சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி, எமது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்களுக்கு சர்வதேச மட்டத்தில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் முதலில் இலங்கை அணிக்காக விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான வீரர்களுக்கு இளம் வயதில் அவ்வாறான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே பாடசாலை வீரர்களுக்காவது அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

”இதேவேளை, கல்வி அமைச்சினால் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மிகப் பெரிய ஒத்துழைப்புகள் கிடைக்கின்றன. இது தொடர்பில் நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோன்று, பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான இந்த மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் ஊடாக பிற மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பந்துகள், துடுப்பு மட்டைகள், கிரிக்கெட் உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் தற்போது பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பிற மாவட்டங்களில் உள்ள 6 முக்கிய மைதானங்களை அபிவிருத்தி செய்து பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை மாத்திரம் நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக” அவர் இதன்போது தெரிவித்தார்.

பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நீக்கி பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த செப்டெம்பர் மாதம் நியமிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இது தொடர்பில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதுடன், இதன்போது பாடசாலை கிரிக்கெட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு 15 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு ஒன்றும் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

இதனையடுத்து இலங்கையின் முன்னாள் வீரர்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹானாம, ஜயந்த செசெனவிரத்ன, கால்டன் பேர்னார்ட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன், பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவொன்று கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டது.

>> உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை

இதனையடுத்து, இவ்விசேட ஆலோசனைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி திட்டவரைபு கடந்த டிசம்பர் மாதம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இதன்போது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தன, முன்னாள் டெஸ்ட் அணி வீரரும், ஐ.சி.சி இன் முன்னாள் போட்டி நடுவருமான ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<