இலங்கை மகளிர் கபடி அணியின் பதக்க கனவு குறித்து மனம் திறக்கும் இந்திய பயிற்சியாளர்

259

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் மகளிருக்கான கபடி போட்டியில் இலங்கை அணிக்கு பதக்கமொன்றை வெற்றி கொள்ள முடியும் என இலங்கை மகளிர் கபடி அணியின் பயிற்சியாளராகச் செயற்படுகின்ற இந்தியாவின் ஜே. உதயகுமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் கபடி அணியின் ஆயத்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதமரினால் முதல்முறை 50 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு நிதியம்

இலங்கையின் விளையாட்டுத்துறை..

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் கபடி அணியினால் பதக்கமொன்றை வெல்ல முடியும் என நம்புகின்றேன். அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீராங்கனைகளும் கடுமையாகவும், மனஉறுதியுடனும் விளையாடுகின்ற ஆற்றலைக் கொண்டவர்கள். எனவே, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் குறைந்தது இலங்கை மகளிர் அணியினர் வெண்கலப் பதக்கத்தையாவது வென்றெடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

ஆசிய விளையாட்டு விழாவுக்காக பயிற்சிகளில் ஈடுபடும் இலங்கை மகளிர் கபடி அணி

2002, 2006 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா கபடி போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய ஆடவர் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய உதயகுமார், தற்போது இலங்கை மகளிர் கபடி அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை மகளிர் கபடி அணி தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட உதயகுமார், ”இலங்கை வீராங்கனைகளிடம் காணப்படும் அர்ப்பணிப்புத் தன்மை, பலம், சக்தி, சுறுசுறுப்பு என்பன என்னை பிரம்மிக்கவைக்கின்றன. அதிலும் குறிப்பாக, இலங்கை அணித் தலைவி மதுஷிகா சத்துரிகா அணியை சிறப்பாக வழிநடத்துகின்றார். ந்த வீராங்கனைகளிடம் கபடி போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தேவையான சகல விதமான பண்புகளும் இருக்கின்றன. அவர்களுக்கு நான் மிகக் குறுகிய காலமாகவே பயிற்சி அளித்து வருகின்றேன். அவர்களது உடற்தகுதியை மேம்படுத்துவதுதான் எனது அடுத்த கட்ட நடவடிக்கையாகும். உடலையும், உள்ளத்தையும் திடகாத்திரமாக வைத்திருப்பது அவர்களது கைகளிலேயே இருக்கின்றது. நாங்கள் தற்போது ஆசியாவில் நான்காவது இடத்தில் உள்ளோம். இறுதியாக நடைபெற்ற ஆசிய கபடி சம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை விட நாங்கள் 3 படிமுறைகள் பின்தங்கிய நிலையில் தான் இருந்தோம். எனவே, இவர்களுக்கான உரிய பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு உலகக் கிண்ணங்கள் உட்பட 100 சர்வதேச கபடி போட்டிகளுக்கு மேல் இந்திய அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ள உதயகுமார், இலங்கை மகளிர் கபடி அணிக்கு இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான வழிகாட்டலையும், ஆலோசனைகளையும் வழங்குவார் என பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<