பிரதமரினால் முதல்முறை 50 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு நிதியம்

266

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதற்தடவையாக, 50 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டுத்துறை நிதியமொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற மற்றும் கிராமப்புறங்களில் இருந்து திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற இளம் வீர, வீராங்கனைகளுக்கு உதவி செய்யும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தந்தையருக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் கொழும்பில் ஆரம்பம்

பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட்..

இதன்படி, குறித்த நிதியத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் முகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்றைய தினம் (07) விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் அதன் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோரிடம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு நிதியம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், எதிர்வரும் 18ஆம் திகதி இந்தோனேஷியாவில் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள 178 வீர, வீராங்கனைகளும், 81 அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில்,

”பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் விளையாட்டு வீரர்களினால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற வெற்றிகளுக்கு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது நாட்டில் உள்ள வீரர்களிடம் அதீத திறமைகள் உள்ளன. ஆனால், சர்வதேச பதக்கங்களை வெல்வதற்கான வசதகிள் இன்னும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்றைய விளையாட்டுக்களுக்கான வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதனால் அதற்கான வழிமுறைகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் கட்டாயம் அவதானம் செலுத்த வேண்டும்.

அதிலும் பல்வேறு கஷ்டங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் வெற்றிகளைப் பெற்றுக்கொள்கின்ற வீரர்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் காரணமாகவே இந்த நிதியத்தை ஆரம்பித்தேன். எதிர்வரும் காலங்களில் வெற்றிகளைப் பெற்றுக்கொள்கின்ற விளையாட்டுக்களை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டமொன்று அவசியமாகும்” என்றார்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் பாடசாலை கல்வித் திட்டத்தில் விளையாட்டை ஒரு கட்டாய பாடமாக இணைத்துக்கொண்டு விளையாட்டை இன்னும் இன்னும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதிலும், அரசாங்கமாக விளையட்டுத்துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பிரதமரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் இதன்போது தெரிவித்தார்.

கனிஷ்ட அதிவேக வீரர் மொஹமட் சபானுக்கு 200 மீற்றரில் தங்கப் பதக்கம்

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் இந்த மாதம்…

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் இவ்வாறான மிகப் பெரிய பணத்தை விளையாட்டு நிதியமொன்றுக்காக ஒதுக்கிய முதல் அரசியல் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார்.

தான் ஒலிம்பிக் பதக்கமொன்றை பெற்றுக்கொள்ளும் போது கிடைக்காத வசதிகள், தற்போதுள்ள வீர, வீராங்கனைகளுக்குப் பெற்றுக்கொடுக்க முன்வந்த பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள வீர, வீராங்கனைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 10 பேருக்கும், ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் பிரதானி மேஜர் ஜெனரால் தம்பத் பெர்னாண்டோவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்வினால் விசேட வர்ணமும் கையளிக்கப்பட்டது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<