ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை தகுதி

228
இலங்கை மற்றும் மியன்மார் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது

மியன்மாரின் நே – பெய் – தோ (Nay Pyi Taw) நகரில் நகரில் நடைபெற்று வருகின்ற ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் நேற்று (03) நடைபெற்ற காலிறுதிக்கு முன்னைய ஆட்டத்தில் 3-2 என்ற செட் கணக்கில் வரவேற்பு நாடான மியன்மாரை தோல்வியடையச் செய்த இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி சுப்பர் 8 சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, இன்று (04) கஸகஸ்தானின் அடிராவு வி.சி அணியுடன் நடைபெறவுள்ள இறுதி 8 அணிகள் பங்குபற்றும் காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிகொண்டால் ஆசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டித் தொடரொன்றில் முதல் தடவையாக அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளும்.

ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு இலங்கை தகுதி

எனினும், இலங்கை அணி இன்றைய போட்டியில் தோல்வியைத் தழுவினால் 5 முதல் 8 வரையிலான அணிகளுக்காக நடைபெறவுள்ள நிரல்படுத்தல் போட்டியில் களமிறங்க வேண்டி ஏற்படும்.

இம்முறை போட்டிகளில் C பிரிவில் இடம்பெற்ற லங்கா லயன்ஸ் அணி, முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் அவுஸ்திரேலியாவின் கென்பரா ஹீட் (3-0), ஹொங்கொங்கின் யான்சாய் (3-0) மற்றும் தாய்லாந்தின் நாக்கொன்ரட்சிமா (3-2) ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பதிவுசெய்து குழு நிலைப் போட்டிகளில் தோல்வி அடையாத அணியாக இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்த நிலையில், மியன்மாரின் ஏசியா வேர்ல்ட் கப் அணியுடன் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முன்னைய போட்டியில் முதல் செட்டை 25-15 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி இலகுவாக வெற்றி கொண்டது.

தொடர்ந்து இரண்டாவது செட்டை 21-25 என்ற புள்ளிகள் அடிப்படையில் மியன்மார் அணி கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

  • இலங்கை மற்றும் மியன்மார் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது

இதனையடுத்து, மூன்றாவது செட்டை 25-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணியும், நான்காவது செட்டை 23-25 என்ற புள்ளிகள் அடிப்படையில் மியன்மார் அணியும் கைப்பற்றியது.

இதன்போது, இலங்கை அணிக்கு பக்கச்சார்பான முடிவுகளை நடுவர்கள் வழங்கியிருந்ததுடன், அந்நாட்டு ரசிகர்களின் ஆதரவும், பலத்த கோஷங்களும் இலங்கை அணி வீரர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தைக் கொடுத்திருந்ததைக் காணமுடிந்தது.

அதுமாத்திரமின்றி, இலங்கை அணிக்கு வழங்கப்பட்ட தவறான முடிவுகளுக்கு எதிராக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளருக்கு மஞ்சள் அட்டையும் இதன்போது காண்பிக்கப்பட்டது.

எனினும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானமிக்க இறுதி செட்டை 15-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிய இலங்கை அணி, 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றது.

இதில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களான ரொமேஷ் தீப்தி 26 புள்ளிகளையும், ஜனித் சுரத் 16 புள்ளிகளையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய விளையாட்டு விழா கூடைப்பந்தாட்டத்தில் மேல் மாகாணம் சம்பியன்

16 ஆசிய நாடுகளின் பிரபல கழகங்கள் பங்குகொள்ளும் இம்முறை ஆடவருக்கான ஆசிய கழக மட்ட கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக பங்குகொண்ட லங்கா லயன்ஸ் அணி, இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றிகொண்டு, சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக அதிசிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுத்த அணியாகவும் இடம்பிடித்தது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<