கால்பந்து உலகின் அடுத்த பீலேவாக உருவெடுத்துள்ள எம்பாப்வே

403

கடந்த 1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி முற்தடவையாக கால்பந்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி ஆறு மாதங்களுக்குப் பிறகு, பரிஸ் நகரிலிருந்து சுமார் பதினொரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள போண்டி என்ற சிறிய கிராமத்தில் குழந்தை கிலியன் எம்பாப்பே பிறந்தது.

சுமார் 19 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் அணிக்கு இரண்டாவது தடவையாக பிஃபா உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்த வீரர்களுள் ஒருவராக விளங்கிய இந்த கிலியன் எம்பாப்பே, இம்முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இளம் வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.  

பிரான்ஸின் உலகக் கிண்ண வெற்றியில் குடியேறிய சமூகத்தின் பங்களிப்பு

பிறந்து வளர்ந்த நாட்டுக்காக உலகக் கிண்ணத்தை வென்று …

அதிலும் குறிப்பாக, இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் அபரிமிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரபல ஆர்ஜென்டீன அணிக்கெதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுக்கொண்ட கறுப்பின வீரரான எம்பாப்பே, உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகினார்.  

அது மாத்திரமின்றி, வயதில் சிறியவராக ஏற்கெனவே உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ள கிலியன் எம்பாப்பே, உலகக் கிண்ணம் நிறைவடைந்து ஒருசில தினங்கள் செல்ல முன் தனது தாராள மனதால் ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.  

இந்த உலகக் கிண்ணத்தில் பங்கேற்றதன் மூலம் தனக்கு கிடைத்த வருமானம் அனைத்தையும் எம்பாப்பே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார். ”பிரீமியர்ஸ் டி கோர்டே” என்ற அந்த தொண்டு நிறுவனம், காயமடைந்த மற்றும் ஊனமடைந்த குழந்தைகளுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, தனக்கு கிடைத்த, 3.5 கோடி ரூபாயையும் எம்பாப்பே நன்கொடையாக அளித்து சமூகசேவை செய்வதற்கு பெயரும், புகழும் தேவையில்லை என்பதையும் நிரூபித்துக்காட்டியுள்ளார்.

அவரை தற்பொழுது பிரான்ஸ் நாடே கொண்டாடிக்கொண்டு இருந்தாலும் அவரது வாழ்க்கை வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்றாக உள்ளது. ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின் பெரிய கதை இருக்கிறது. காலம் காலமாக கருப்பின மக்கள் விளையாட்டு துறைகளில் முகங்கொடுத்து வந்த கஷ்டங்களை எல்லாம் இவரும் அனுபவித்து இருக்கிறார்.

பிரான்ஸின் போதை தேசமாக வர்ணிக்கப்படுகின்ற போண்டி என்ற சிறிய கிராமம் தான் இவர் பிறந்து வளர்ந்தது. போதைப் பொருள் பயன்பாடு தொடங்கி ஆயுத கலாச்சாரம் வரை, பிரச்சனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற பகுதியாகவே போண்டி கிராமம் இருந்தது. வறுமையில் வாழ்ந்தார் அவர். அவர் வாழ்ந்த பகுதியின் சூழ்நிலைதான் சரியில்லை என்றாலும், அவருடைய குடும்ப சூழ்நிலையும் இவருக்கு சரியில்லை. ஒரு வறுமையான விளையாட்டு வீரன் வாழ்க்கையில் வெற்றி பெற்று பெரியாளாகும் ஏதாவது ஒரு படத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த கதைதான் இவருடையதும். இந்த நூற்றாண்டில் சொந்த காலில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த கால்பந்து வீரர்தான் சிறந்த எடுத்துக்காட்டே என்று சொல்லலாம்.

கிலியனின் சிறுபராயம்

கால்பந்து பயிற்றுவிப்பாளரான கிலியனின் தந்தையின் பெயர் வில்பிரட். கெமரூன் நாட்டைச் சேர்ந்த இவர் கிலியன் எம்பாப்வே பிறப்பதற்கு முன்பு இருந்தே போண்டியிலுள்ள இளம் வீரர்களுக்கு கால்பந்து பயிற்சிகளை அளித்து வருகின்றார். போண்டி கிராமத்திலிருந்து பல நட்சத்திர கால்பந்து வீரர்களை உருவாக்கிய அவர், கிலியனுக்கும் கால்பந்தை கற்றுக்கொடுத்து இன்று உலகம் பேசும் வீரராக அவரை மாற்றியுள்ளார்.

அதேபோல, அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த கிலியனின் தாயாரின் பெயர் பாயிஸா எம்பாப்பே லமாரி. இவர் பிரான்ஸ் நாட்டின் உள்ளூர் கழக கைப்பந்து அணியின் முன்னாள் வீராங்கனையும் ஆவார்.

தனது மகனின் வெற்றிப் பயணம் தொடர்பில் கிலியனின் தந்தை கருத்து வெளியிடுகையில், நான் கிலியனுக்கு 6 வயதில் கால்பந்து விளையாட்டை சொல்லிக் கொடுத்தேன். மற்றைய சிறுவர்களைக் காட்டிலும் அவரிடம் அசாத்திய திறமை ஒன்று இருப்பதனை நான் உணர்ந்தேன். உண்மையைச் சொன்னால் எனது 20 வருடத்திற்கும் மேற்பட்ட கால்பந்து பயிற்றுவிப்பாளர் வாழ்க்கையில் நான் கண்ட அதிசிறந்த கால்பந்து வீரர் எனது மகன்தான். பிரான்ஸ் என்பது கால்பந்து விளையாட்டுக்குப் பெயர் போன நாடாகும். ஆனால், எனது மகனைவிட திறமையான வீரர் ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை. எனது நண்பர்கள் கிலியனைதி பெஸ்ட்” என்று சொல்லி அழைப்பார்கள்” என தனது மகனின் திறமைகள் குறித்து ஆனந்தத்துடன் கருத்து தெரிவித்தார்.

ரொமெலு லுகாகுவின் வீட்டில் இப்போது எலிகள் இல்லை

‘எனது தாய் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்து …

இதேநேரம் கிலியனுக்கு தொடர்ந்து ஊக்கத்தை அளித்து வந்த அவருடைய தாயார் கருத்து வெளியிடுகையில், கிலியனுக்கு கால்பந்து விளையாட்டைத் தவிர வேறெதுவும் பெரிதாக தெரியவில்லை. அவர் எந்தளவுக்கு கால்பந்தை விரும்பினார் என்றால், நானே கிலியனுக்கு பைத்தியம் என்று நினைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. 24 மணிநேரமும் கால்பந்துதான் வாழ்க்கை என்று இருந்தார். தூங்கும் போதும் கால்பந்தை கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குவார். அதிலும், ஒரு கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு வெளியிட்டால் குறைந்தது ஐந்து போட்டிகளையாவது பார்த்துவிட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பார்” என தெரிவித்தார்.

கால்பந்து வாழ்க்கையின் ஆரம்பம்

இவர் கருப்பின வீரர் என்பதாலேயே பல முறை சக வெள்ளை வீரர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் கழகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக புகழைப் பெற்ற எம்பாப்பே, தன்னுடைய ஆக்ரோஷமான விளையாட்டால், நாளடைவில் பெரிய நட்சத்திரமாக மாறினார். அதிலும் குறிப்பாக பிரான்ஸில் பல நட்சத்திர வீரர்களை உருவாக்கிய கிளெயார்பொன்டேன் கால்பந்து அகடமியில் இணைந்துகொள்வதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது. அந்தக் கனவையும் அவருடைய தந்தை நிறைவேற்றிக் கொடுத்தார்.

தனது 15ஆவது வயதில் கிளெயார்பொன்டேன் கால்பந்து அகடமியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட கிலியனை பிரான்ஸ் நாட்டின் பல முன்னணி கழகங்கள் ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்தன. அதுமாத்திரமின்றி தனது 17ஆவது வயதில் பிரான்ஸ் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் அவர் பெற்றுக்கொண்டார்.

களத்தில் பந்தை யாருக்கும் விட்டு கொடுக்கக் கூடாது, தன்னுடைய காலில் இருந்து பந்து வெளியேறினால் அது சக அணி வீரருக்கு செல்ல வேண்டும், இல்லை கோல் கம்பத்திற்குள் செல்ல வேண்டும் என்ற ஆக்ரோஷத்துடன் விளையாடக் கூடிய திறமை கொண்டவர் கிலியன் எம்பாப்பே.

அதுமாத்திரமின்றி, பரிஸ் செயின்ட்ஜெர்மெய்ன் கழகத்துடன் இணைந்த அடுத்த வருடமே பிரான்ஸ் கால்பந்து கிண்ணத்தை தமது கழகத்துக்குப் பெற்றுக்கொடுக்கவும் கிலியன் காரணமாக இருந்தார். அந்த தொடர் முழுவதும் கிலியன் 16 கோல்களைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதனையடுத்தே அவருக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரான்ஸ் அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிட்டியது. 2017இல் பிரான்ஸ் அணிக்காக முதல்முறை விளையாடிய அவர், இதுவரை 22 போட்டிகளில் பங்குபற்றி 08 கோல்களை அடித்துள்ளார்.

புகைப்படங்களைப் பார்வையிட  

அவர் விளையாடி வருகின்ற பரிஸ் செயின்ட்ஜெர்மெய்ன் கழகம் அவருடைய திறமையை தற்போது கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த கழகம்தான் இந்த இளம் நட்சத்திரத்தை உருவாக்கியது. தற்போது இவரை எவ்வளவு காசு கொடுத்தாவது தக்கவைத்துக்கொள்ள அந்த கழகம் முடிவு செய்துள்ளது.   

கால்பந்து உலகிலேயே இரண்டாவது பிரபலமான வீரர் இவர்தான். போதையில் சுற்றித் திரிந்த போண்டி மக்களுக்கு, தற்போது புதிய புத்துணர்ச்சி கிடைத்து இருக்கிறது. அந்தப் பகுதி மக்களை தவறாக பார்த்தவர்களுக்கு, தற்போது எம்பாப்பே புதியதொரு அடையாளத்தை கொடுத்திருக்கிறார். இதுவரை தவறாக சுற்றி திரிந்தவர்களுக்கு, சூழ்நிலை உங்கள் வாழ்க்கை போக்கை மாற்றாது என்பதை இவர் நிரூபித்துவிட்டார்.  

பீலேவுடன் இணைந்த கிலியன்

சிறுசிறு அணிகள், பாடசாலை அணியில் விளையாடியது, தேர்வில் இல்லாமல், சப்பாத்து வாங்க வழியில்லாமல் விளையாடியது, பின் கல்லூரி அணியில் சில நாட்கள் விளையாடியது, சிறு சிறு கழகங்களில் விளையாடியது என்று இவரது வாழ்க்கையும், ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

கால்பந்து உலகின் சாதனை நாயகன் பீலே போலவே வாழ்க்கை வரலாற்றை கொண்டுள்ள இவர், பீலே போலவே சாதனையும் படைத்து விட்டார். 60 வருடத்திற்கு முன்பு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பீலே கோல் அடித்தார். அப்போது அவர்தான் இளம் வீரர். தற்போது அந்த சாதனையை 19 வயதே நிரம்பிய எம்பாப்பே முறியடித்துள்ளார். அதேபோல், இந்த தொடரில் சிறந்த வீரர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டார்.

அதுமாத்திரமன்றி, இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இளம் பிரான்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றாலும், அந்த அணியின் கடந்த கால கதாநாயகர்களை இளம் வீரர் கிலியன் எம்பாப்பே விஞ்சியுள்ளனர். ஆனால் தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் அணியின் வெற்றிகளில் துடிப்பாக செயல்பட்ட 19 வயதான கிலியன் எம்பாப்பே, இதே திறனுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதுதான்.  

அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள்

கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு …

தற்போதைக்கு இதுகுறித்தெல்லாம் பிரான்ஸ் அணியோ அல்லது அதன் பயிற்சியாளர் டெஸ் சாம்ப்ஸோ சிந்திக்கும் கணத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்துக்கான மனநிலையில் திளைத்துள்ளனர்.

லெஸ் பிளஸ் என செல்லப் பெயருடன் வர்ணிக்கப்படும் பிரான்ஸ் அணி தங்களது அணிக்கான ஜேர்சியில் 2ஆவது நட்சத்திரமாக பதித்துக்கொள்ள வேண்டிய வீரராக 19 வயதிலேயே உருவெடுத்துள்ளார் கிலியன் எம்பாப்பே. இந்த சிறுவயதிலேயே அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்து தங்கப்பதக்கத்தை அவர் அணிந்துகொண்டுள்ளது கால்பந்து உலகை சற்று திரும்பி பார்க்கவே வைத்துள்ளது.  

மூன்று முறை பாலோன் டி ஓர் விருதை வென்ற பிளாட்னிக்கூட, உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தை கம்பீரமாக சுமப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் விளையாடிய காலக்கட்டத்தில் பிரான்ஸ் அணி இரு முறை அரை இறுதி ஆட்டங்களில் ஜேர்மனி அணியால் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இளம் வயதில் கோல் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்ற கிலியன் எம்பாப்பே, அடுத்த 10 வருடங்களுக்கு உலக கால்பந்து அரங்கையே கட்டிப்போடக்கூடும் நட்சத்திரமாக இருப்பார் என விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆர்ஜென்டீனாவின் லியொனல் மெஸ்ஸி, போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் 30 வயதை கடந்துவிட்டதால், உலகக் கால்பந்து அரங்கை ஆளும் அடுத்த தலைமுறை வீரராக கிலியன் எம்பாப்பே உருவெடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…