ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு இலங்கை தகுதி

201

மியன்மாரின் நே – பெய் – தோ (Nay Pyi Taw) நகரில் நகரில் நடைபெற்று வருகின்ற ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பதிவுசெய்த இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி, இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.

இம்முறை போட்டிகளில் C பிரிவில் இடம்பெற்ற லங்கா லயன்ஸ் அணி, நேற்று (30) நடைபெற்ற அவுஸ்திரேலியாவின் கென்பரா ஹீட் அணியுடனான முதலாவது லீக் போட்டியில் 3 – 0 என்ற நேர் செட் கணக்கில் (20-25, 21-25, 9-25) அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட அணியொன்று அண்மைக்காலத்தில் சர்வதேச மட்டத்தில் பெற்றுக்கொண்ட சிறந்த வெற்றியாகவும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட முதல் வெற்றியாகவும் இது பதிவாகியது.

இராணுவப்படை அணிக்கு மற்றுமொரு சம்பியன் பட்டம்

இதனைத்தொடர்ந்து இன்று (31) ஹொங்கொங் யான்சாய் அணியுடன் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் 12-25, 12-25, 17-25 என 3 – 0 என்ற நேர் செட் கணக்கில் லங்கா லயன்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது. இதன்படி, C குழுவில் முதலிடத்தைப் பெற்ற லங்கா லயன்ஸ் அணி அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.

இதேநேரம், தாய்லாந்தின் நாக்கொன்ரட்சிமா அணியை இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி, நாளை (01) எதிர்த்தாடவுள்ளது. எனினும், பிரேசில் நாட்டு வீரர்களை உள்ளடக்கிய தாய்லாந்து அணி, முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் அவுஸ்திரேலிய மற்றும் ஹொங்கொங் அணிகளை வீழ்த்தியுள்ளதால், இலங்கைக்கு பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லங்கா லயன்ஸ் மற்றும் கென்பரா ஹீட் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டு வருகின்ற செர்பிய நாட்டைச் சேர்ந்த கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரான டெஜான் டுலிசிவிக்கின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது சர்வதேச வெற்றி இதுவாகும்.

அதுமாத்திரமின்றி, இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை கரப்பந்தாட்ட குழாமில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் லங்கா லயன்ஸ் அணியில் பங்கேற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க