இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகள் மற்றும் ஒப்பந்த பொறுப்புக்களை மீறிய குற்றச்சாட்டுக்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்கவிற்கு ஆறு சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடைவிதித்துள்ளது.
தென்னாபிரிக்காவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இரவு (21) அணி முகாமைத்துவத்துக்கு அறிவிக்காமல் 10 மணிக்குப் பிறகு வெளியே சென்றமை மற்றும் வெளிநபர்களை அறையில் தங்கவைத்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனுஷ்க குணதிலக்க குற்றம் இழைக்கவில்லை – பொலிஸார் அறிவிப்பு
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இரவு இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அறையில் வைத்து அவரது நெருங்கிய நண்பரொருவர் நோர்வேயைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக தனுஷ்க குணதிலக்கவின் நண்பரான சந்தீப் ஜூட் செல்லையா என்ற நபரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்திருந்தனர்.
எனினும், குறித்த சம்வம் இடம்பெற்றதை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.
இது இவ்வாறிருக்க, நோர்வே நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட்டினால் போட்டித் தடைக்குள்ளாகியிருந்த தனுஷ்க குணதிலக்கவிடம் கொள்ளுப்பிட்டி பொலிஸார் கடந்த 25ஆம் திகதி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொண்டனர்.
எனினும், அவர் குற்றமற்றவர் என அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளின் இறுதியில் ஆறு சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடை விதிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் மூன்று போட்டிகளுக்கான தடைகள் அண்மையில் இடம்பெற்ற தனுஷ்கவின் நண்பரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, இதற்கு முன்னரும் பல தடவைகள் ஒழுக்க விதிமுறைகளை மீறியமை காரணமாக தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட தடைக்கு அமைவாக மேலும் மூன்று போட்டிகளிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான எந்தவொரு கட்டணத்தையும் அவருக்கு வழங்காமல் இருக்கவும் இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
எனவே, தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்தப் போட்டித் தடையால் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் மற்றும் ஒற்றை டி-20 போட்டிகளில் அவருக்கு விளையாட முடியாது.
முன்னதாகவும், தனுஷ்க குணதிலக்கவின் மீது பல்வேறு நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இறுதியாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவருக்கு 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. குறித்த காலப்பகுதியில் இந்திய தொடருக்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இரவு விடுதியொன்றுக்கு சென்ற குணதிலக, அடுத்தநாள் பயிற்சியை புறக்கணித்த குற்றச்சாட்டுக்காக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த 6 போட்டிகள் கொண்ட தடை பின்னர் மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்டிருந்து.
இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது, ஐசிசி இன் ஒன்றாம் நிலை சட்ட விதியினை மீறிய குற்றச்சாட்டுக்காக, அவரது நடத்தை புள்ளி ஒன்று குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க