டயலொக் தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

184

இலங்கையின் கரப்பந்தாட்ட விளையாட்டுத்துறை வரலாற்றில் அதிகளவான உள்ளூர் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றும் டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளன.

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகளுக்கு 13 ஆவது வருடமாக டயலொக் ஆசியாட்ட நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.

அதன்படி, கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்த இம்முறை போட்டிகள் 22 வயதுக்கு உட்ப்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நடைபெறுவதுடன், பகிரங்க பிரிவிலும் இருபாலாருக்கும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதன்படி, இவ்வருடத்துக்கான தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த 48000 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இம்முறை மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கண்டியில்

அத்துடன், அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ள மாவட்டப் போட்டிகளில் சம்பியனாகும் நான்கு அணிகள், தேசிய மட்ட இரண்டாம் சுற்றில் விளையாடத் தகுதிபெறும். இப்போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 2, 3, 4 ஆம் திகதிகளில் காலியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் 4 அணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் மஹரகம, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்.

இந்நிலையில், டயலொக் தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (25) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, டயலொக்கின் ஊடக பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் சி. ரத்னமுதலி, பொதுச் செயலாளர் ஏ.எஸ் நாலக்க, உதவி தலைவர் காஞ்சன ஜயரட்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், இம்முறை போட்டித் தொடருக்கான டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் குறியீட்டு நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் மாவட்டப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதால், இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<