ஐசிசியின் துடுப்பாட்ட தரவரிசையில் வாழ்நாள் சிறந்த நிலையில் திமுத்

945

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற, இலங்கை அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நிறைவில் வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன 720 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்திருந்தார். இந்தநிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டு அரைச்சதங்களை விளாசிய இவர், தனது வாழ்நாள் அதிசிறந்த தரப்படுத்தல் நிலையாக 754 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் முன்னேறி, 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் முழுவதும், இலங்கை அணியை துடுப்பாட்டத்தில் தாங்கிப்பிடித்திருந்த திமுத் கருணாரத்ன ஒரு சதம் மற்றும் மூன்று அரைச்சதங்கள் அடங்கலாக 356 ஓட்டங்களை குவித்திருந்தார். இவர் முதல் டெஸ்டில் 158 மற்றும் 60 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், இரண்டாவது டெஸ்டில் 53 மற்றும் 85 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதன்படி, டெஸ்ட் தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ள திமுத் கருணாரத்ன இலங்கை அணி சார்பில், ஐசிசி யின் தற்போதைய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் அதிகூடிய நிலையை பிடித்துள்ள வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இலங்கை அணி சார்பில் முன்னிலை பெற்றிருந்த டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலை பின்தள்ளி, திமுத் கருணாரத்ன இந்த இடத்தை பிடித்துள்ளார். தினேஷ் சந்திமால் புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் எட்டாவது இடைத்தை பிடித்துள்ள நிலையில், தற்போது முதல் பத்து வீரர்களுக்குள், இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் உள்ளனர்.

உபாதைகளின் பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ள அசேல குணரத்ன

இதனையடுத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அஞ்செலோ மெதிவ்ஸ் புதிய துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். நான்கு இடங்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ள மெதிவ்ஸ், புதிய தரவரிசையில் 24ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இவருடன் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக 36 இடங்கள் முன்னேறி, 73ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன் இளம் வீரர் அகில தனன்ஜய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 16 இடங்கள் முன்னேறி, 39ஆவது இடத்தையும், சகலதுறை வீரர்கள் பட்டியலில் 25 இடங்கள் முன்னேறி 46ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

இதேவேளை, முழுத் தொடரிலும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி தொடரில் தோல்வியை தழுவியது. அவ்வணியின் வீரர்களும் தரப்படுத்தலில் சரிவை சந்தித்துள்ளனர். முக்கியமாக டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்திவந்த ககிஸோ றபாடா இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த றபாடா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் வீழ்த்தி ஏமாற்றினார்.  இதனால் முதலிடத்தை றபாடா தவறவிட, குறித்த இடத்தை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் பிடித்துக்கொண்டார்.

தென்னாபிரிக்காவை வீழ்த்த தந்திரோபாயங்களை கையாளுகிறதா இலங்கை?

அத்துடன் உலக வேகப்பந்து வீச்சாளர்களில், தற்போதுள்ள மிகச்சிறந்த வேகப்புயல் என வர்ணிக்கப்படும் தென்னாபிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் நான்கு இடங்கள் பின்தள்ளப்பட்டு 24ஆவது இடத்தை பிடித்துள்ளார். தென்னாபிரிக்க அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமைய  டேல் ஸ்டெயின் அடைவதற்கு ஒரு விக்கெட் மாத்திரமே தேவை என்ற நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் பெறமுடியாமல் ஏமாற்றமடைந்தார்.

இவர்களுடன் தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டீன் எல்கர் மற்றும் எய்டன் மர்க்ரம் ஆகியோர் முறையே 9ஆம் மற்றும் 10ஆம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், ஹசிம் அம்லா 14ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.  இலங்கை தொடருக்குப் பின்னர் தென்னாபிரிக்க அணி சார்பில் இரண்டு வீரர்களுக்கு மாத்திரமே முன்னேற்றங்கள் கிட்டியுள்ளன.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்து வீச்சு பிரதியை பதிவுசெய்த கேஷவ் மஹாராஜ், மொத்தமாக 12 விக்கெட்டுகளை கைப்பற்றி, பந்து வீச்சாளர்கள் வரிசையில், ஐந்து இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இவருடன் அணி சார்பில், மறக்கமுடியாத ஒரே ஒரு சதத்தை பெற்றுக்கொடுத்த தியோனிஸ் டி ப்ரெய்ன் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். முதலாவது டெஸ்ட் சதத்தை அடித்த இவர் 43 இடங்கள் முன்னேறி, 105ஆவது இடத்தை பிடித்துள்ளார்.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க