தென்னாபிரிக்க ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2870

சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இலங்கை அணி, அடுத்ததாக தமது விருந்தினர்களுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை வீரர்கள் குழாம் இன்று (24) இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

உபாதைகளின் பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ள அசேல குணரத்ன

இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2-0 என..

இந்த ஒரு நாள் தொடரின் மூலம் இடதுகை சுழல் வீரரான பிரபாத் ஜயசூரியவுக்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் முதற்தடவையாக கிடைத்திருக்கின்றது. 26 வயதாகும் ஜயசூரிய அண்மைய இலங்கை A அணியின் பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற போட்டிகளில் 8 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். அதோடு, இலங்கையின் மாகாண ரீதியிலான ஒரு நாள் தொடரிலும் கண்டி அணிக்காக ஆடி சிறப்பான பதிவுகளை காட்டியிருந்தார்.

இதேநேரம், இலங்கை A அணியின் பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின் போது திறமையை வெளிக்கொணர்ந்த மற்றுமொரு வீரரான ஷெஹான் ஜயசூரியவும் இலங்கையின் ஒரு நாள் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய இறுதியாக 2016ஆம் ஆண்டிலேயே இலங்கை அணிக்காக ஒரு நாள் போட்டியொன்றில் ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமாலுக்கும் சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் பேரவை (ICC) மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை தாமதித்த குற்றச்சாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட முன்னதாக தடைவிதித்திருந்தது.

மாய சுழலினால் தென்னாபிரிக்காவை வைட் வொஷ் செய்த இலங்கை

கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

இப்படியான போட்டித் தடைகளினால் இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய இந்த துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை முழுமையாக இழக்கின்றனர்.

இந்த வீரர்களின் இடத்தினை இலங்கை அணியில் தசுன் சானக்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் நிவர்த்தி செய்கின்றனர். இதன்படி இறுதியாக கடந்த ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போது இலங்கை அணிக்காக  ஒரு நாள் போட்டிகளில் ஆடிய தனன்ஜய டி சில்வாவுக்கு ஒரு நாள் அணியில் நிரந்தர இடம் ஒன்றினை பெற்றுக் கொள்ள தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடர் சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கி கொடுத்திருக்கின்றது.

மறுமுனையில், இலங்கை T20 அணியின் அங்கத்தவராக இருக்கும் அதிரடி சகலதுறை வீரரான தசுன் சானக்க, உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டியமைக்காக இலங்கையின் ஒரு நாள் அணியில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

இவர்களோடு இந்த ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை, அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோருடன் பலம் பெறுகின்றது.

தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்….

இதேவேளை, தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் “தொடர் நாயகன்” விருதினை வென்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன இந்த ஒரு நாள் தொடரில் மேலதிக இலங்கை வீரராக சேர்க்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

நீண்ட காலமாக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை இனம் கண்டு கொள்வதற்காக பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் இலங்கை அணி, அண்மைய மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் அதிசிறந்த முறையில் செயற்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, கசுன்  ராஜித ஆகியோருக்கு தென்னாபிரிக்க அணியுடனான இந்த ஒரு நாள் தொடரில் வாய்ப்புத்தந்து பரிசோதனை ஒன்றினை செய்து பார்க்கவுள்ளது இலங்கை கிரிக்கெட்.

இவர்களில், இலங்கை அணிக்கு முன்னதாக நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் 21 வயதேயான லஹிரு குமார, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் போது 17 விக்கெட்டுக்களை சாய்த்து வெளிநாட்டு டெஸ்ட் சுற்றுப் பயணம் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கை வீரர் என்கிற சாதனையினை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவராக கெளசால் சில்வா

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…

இதேநேரம், மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே ஆடி  14.54 என்கிற சராசரியோடு 11 விக்கெட்டுக்களை சாய்த்த வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித தனது கன்னி ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க தொடர் மூலம் விளையாடவுள்ளார்.  

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுத்துறை இந்த ஒரு நாள் தொடரில் சைனமன் சுழல் வீரரான லக்ஷான் சந்தகனுடன் இன்னும் வலுப்பெறுகின்றது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜூலை மாதம் 29ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

இலங்கை குழாம்

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), தசுன் சானக்க, குசல் ஜனித பெரேரா, தனன்ஜய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய

மேலதிக வீரர்கள் – திமுத் கருணாரத்ன, இசுரு உதான, நிஷான் பெரேரா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<