ஜிம்பாப்வே உடனான தொடரை வைட்-வொஷ் செய்த பாகிஸ்தான்

193

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், பக்ஹர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோரின் மற்றுமொரு சிறப்பான இணைப்பாட்டத்தின் உதவியுடன் பாகிஸ்தான் அணி தொடரை 5-0 என கைப்பற்றியுள்ளது.

தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் சொந்த மண்ணில் மோசமான தோல்வியைக் கண்டிருந்த ஜிம்பாப்வே அணி, இன்று தங்களது ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய போதும், மீண்டும் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, பாகிஸ்தான் அணி 131 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சாதனையுடன் வென்ற பாகிஸ்தான்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்ய, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மீண்டுமொருமுறை ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பக்ஹர் சமான் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை கடந்தார். ஆறாவது ஓவரின் நிறைவில் 21 ஓட்டங்களை பெற்ற நிலையில், சமான் வெறும் 18 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளின் சேர் விவியன் ரிச்சட்சன் 21 இன்னிங்சுகளில் இந்த சாதனையை பூர்த்திசெய்தார்.

தொடர்ந்து இருவரும் விக்கட்டை விட்டுக்கொடுக்கமால் ஆட, பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு சாதனை இமாம் உல் ஹக் மற்றும் பக்ஹர் சமான் ஆகியோரால் தகர்க்கப்பட்டது. 2003/04 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இம்ரான் பர்ஹாட் மற்றும் யசீர் ஹமீட் ஆகியோர் இணைந்து 590 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தமையே ஒருநாள் தொடரொன்றில் பாகிஸ்தான் அணி பெற்றிருந்த அதிக இணைப்பாட்டமாக இருந்தது. இந்தநிலையில் ஜிம்பாப்வே தொடரில் 704 ஓட்டங்களை இமாம் உல் ஹக் மற்றும் பக்ஹர் சமான் ஆகியோர் குவித்து சாதனையை தகர்த்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த இருவரும் தங்களது அரைசச்தத்தை கடந்தனர். தொடர்ந்து  ஆடிய பக்ஹர் சமான் ஒருநாள் தொடரொன்றில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 257.50 என்ற சராசரியில் 515 ஓட்டங்களை குவித்தார். இவ்வருடம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோஹ்லி  558 ஓட்டங்களை பெற்று, முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

இவ்வாறு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, சாதனைகளை குவித்துவந்த, பக்ஹர் சமான் அடுத்த சதத்தை நெருங்கிய நிலையில் 85 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸர் மற்றும் 10 பௌண்டரிகள் விளாசி இவர் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்துவந்த பாபர் அசாமுடன் இணைந்து ஓட்டங்களை குவித்த இமாம் உல் ஹக் தனது நான்காவது ஒருநாள் சதத்தை கடந்து 105 பந்துகளில் 110 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி 245 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

இதற்கு அடுத்தப்படியாக தனது பங்கிற்கு ஓட்டங்களை குவித்த பாபர் அசாம் அதிரடியாக ஆடி, 76 பந்துகளில் 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவருடன் இணைந்து சொஹைப் மலிக் மற்றும் அஷிப் அலி தலா 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஜிம்பாப்வே அணி சார்பில் எம்பாஃபு, சடாரா, வெலிங்டன் மசகட்சா மற்றும் ரோச்சி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சவாலான வெற்றி இலக்கையும், ஆறுதல் வெற்றியையும் நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி கடந்த போட்டிகளை விடவும், இந்த போட்டியி்ல் நிதானமும், நேர்த்தியுமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப விக்கெட்டுக்காக களமிறங்கிய அணித் தலைவர் ஹெமில்டன் மசகட்சா மற்றும் கமுன்ஹுகம்வே ஆகியோர் 66 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்நிலையில் 34 ஓட்டங்களை பெற்றிருந்து கமுன்ஹுகம்வே மொஹமட் நவாசின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க,  ஜிம்பாப்வே அணி 70 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மசகட்சா 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

காலி கிரிக்கெட் மைதானம் தக்கவைக்கப்படுமா? அகற்றப்படுமா? – தொடரும் சர்ச்சை

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த முர்ரே மற்றும் மெஷ்வஹுர் மீண்டுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பினர். இருவரும் 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, மெஷ்வஹுர்  39 ஓட்டங்களுடனும், தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய முர்ரே அரைச்சதத்தை தவறவிட்டு 47 ஓட்டங்களுடன் வெளியேறி, அணிக்கு ஏமாற்றமளித்தனர்.

பின்னர் களமிறங்கிய பீட்டர் மூர் மற்றும் சிகும்புரா ஆகியோர் ஆட்டமிழக்காமல் இறுதிவரை துடுப்பெடுத்தாடிய போதிலும், பாகிஸ்தான் அணியின் ஓட்ட இலக்கை எட்டக்கூடிய அளவுக்கு ஓட்டவேகம் இல்லாததால், ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகளை  இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, தொடரை 0-5 என இழந்தது. இதன்படி இவ்வருடத்தின் முதல் ஒருநாள் தொடர் வெற்றியை பாகிஸ்தான் அணி, வைட்-வொஷ்ஷுடன் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 364/4 (50) – இமாம் உல் ஹக் 110(105), பாபர் அசாம் 106*(76), ரோச்சி 1/65

ஜிம்பாப்வே – 233/4 (50) – ரெயான் முர்ரே 47(70), பீட்டர் மூர் 44(54), ஹசன் அலி 2/55, மொஹமட் நவாஸ் 2/47

முடிவு – பாகிஸ்தான் அணி 131 ஓட்டங்களால் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – பாபர் அசாம்

தொடரின் ஆட்டநாயகன் – பக்ஹர் சமான்

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<