காலி கிரிக்கெட் மைதானம் தக்கவைக்கப்படுமா? அகற்றப்படுமா? – தொடரும் சர்ச்சை

350

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அகற்றப்படாது எனவும், காலி கோட்டையை அண்மித்து நிர்மானிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பார்வையாளர் கட்டிடம் மட்டுமே அகற்றப்படும் எனவும் தெற்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (20) அறிவித்தார்.

மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து காலி மைதானத்தில் நடைபெறும் எனவும், அதேநேரம் காலி மாவட்டத்தில் மற்றுமொரு புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்படுவது குறித்து முன்னாள் வீரர்கள் கவலை

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையை அண்மித்த பகுதியை யுனெஸ்கோ நிறுவனம் மரபுரிமைப்..

இதேவேளை, காலி கோட்டைக்கு அண்மித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இறுதி அறிக்கை எதிர்வரும் இரு வாரங்களில் அமைச்சரவைக்கு கிடைத்தவுடன் காலி கிரிக்கெட் மைதானம் குறித்த இறுதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ இந்த விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இலங்கையின் 7ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானமும், இலங்கை கிரிக்கெட்டின் டெஸ்ட் போட்டிகளுக்கான கோட்டையாகவும் விளங்குகின்ற காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் முழுவதும் அரசியல் வட்டாரங்கள் ஊடாக பரவலாக செய்திகள் வெளிவந்தன.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு இலங்கை ரசிகர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான ஒரு நிலையில், யுனெஸ்கோ அமைப்பின் கவனத்தை ஈர்த்துள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (20) வாத விவாதங்கள் இடம்பெற்றன.

இலங்கையின் 12 வருட உலக சாதனையை முறியடித்த பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று (20) புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற நான்காவது…

இதில் பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கேள்வி எழுப்பிய காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, 150 வருட கால பழைமை வாய்ந்த காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதுதொடர்பில் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில்,

”காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என யுனெஸ்கோ கூறவில்லை. ஆனால் காலி மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் நீக்கப்பட்டு, அவை திறந்த வெளியாக இருக்க வேண்டும் என்பதே யுனெஸ்கோவின் சட்டம். தற்போது அது மீறப்பட்டுள்ளது. சுனாமிக்குப் பிறகு அதாவது 2006ஆம் ஆண்டில் இந்த மைதானத்தில் மஹிந்த ராஜபக்ஷ பார்வையாளர் அரங்கு அநாவசியமான முறையில் நிர்மானிக்கப்பட்டது. அந்த அநாவசிய நிர்மானத்தை அகற்றுமாறு யுனெஸ்கோ அமைப்பு இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ பார்வையாளர் அரங்கை வைத்துக்கொண்டு உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து காலி கோட்டையை இழப்பதா அல்லது மஹிந்த ராஜபக்ஷ பார்வையாளர் அரங்கை அகற்றி காலி கோட்டையை தொடர்ந்து மரபுரிமைப் பட்டியலில் வைத்திருப்பதா என்பதுதான் தற்போதுள்ள பிரச்சினை ஆகும்” என்றார்.

இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அழைப்பாரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன பதில் குறிப்பிடுகையில், நான் அப்போது நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தேன். இந்தப் பிரச்சினையை ஏற்கனவே யுனெஸ்கோ கொண்டுவந்த போது நாம் கலந்துரையாடினோம். அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கு அல்ல. வேறு ஒரு குழுவினரே அந்த கட்டிடத்தை நிர்மானித்தனர். அதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு அமைய உலக மரபுரிமையில் காலி கோட்டையைப் பாதுகாப்பதுடன், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மைதானத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிறிதொரு இடத்தில் பார்வையாளர் அரங்கை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ரசிகர்களிடம் முதன்முறையாக வெறுப்பை சம்பாதித்த ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் உலகளாவிய ரீதியில்…

பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் கருத்தை வரவேற்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, மைதானத்தில் உள்ள பார்வையாளர் அரங்கின் பெயரில் எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடம் என்பதே இங்கு பிரச்சினையாக உள்ளது. எனவே, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு எனது அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, தெற்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கப் பெறும்” என்றார்.

இதேநேரம், குறித்த காலப்பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காமினி லொக்குகே இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், அந்த காலப்பகுதயில் நகர அபிவிருந்தி அதிகார சபை, யுனெஸ்கோ மற்றும் கிரிக்கெட் நிறுவனம் என சகலரும் இணைந்து இதன்பிறகு இங்கு நிர்மானப் பணிகள் மேற்கொள்வதில்லை என்ற இணக்கப்பாட்டுக்கு வந்தனர். இதுவே கடைசி நிர்மானம் என அன்றே இந்தப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், அன்றும் அந்த மைதானத்தை அகற்றி வேறு ஒரு இடத்துக்கு கொண்டு போக வேண்டிய தேவை இருந்த பாராளுமன்ற உறுப்பினரே இன்றும் அதற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குவேவின் உரைக்கு மீண்டும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்த கருத்து எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு அனைவராலும் எடுக்கப்படவில்லை. யுனெஸ்கோவின் நிலைப்பாடு மாறவில்லை. யுனெஸ்கோ அமைப்பு என்பது காலி மாநகர சபை அல்ல” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து வெளியிடுகையில், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமே யுனெஸ்கோவுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னர் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைககள் குறித்து தற்போது யோசிப்போம். இந்த மைதானத்தில் இலங்கை அணி பல டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. எனவே, நாட்டின் நலனை மனதில் வைத்துக்கொண்டு நல்லதொரு முடிவொன்றை அரசாங்கம் எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

எனினும், காலியில் உள்ள ஒருசில அரசியல்வாதிகள் காலி கிரிக்கெட் மைதான விவகாரத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது குற்றம் சுமத்தினார்.

இதற்கு காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி பதிலளிக்கையில், ”காலி மைதான விவகாரத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து கவலையளிக்கிறது. இந்த மைதானத்துக்கு யுனெஸ்கோ அமைப்பினால் தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வந்தன. அதற்காக இந்த மைதானத்தை இன்றோ, நாளையோ அகற்றிவிடாமல் அனைத்து வசதிகளையும் கொண்ட மற்றுமொரு மைதானத்தை நிர்மானித்துவிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.  

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியின் உரைக்கு தெற்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்க பதிலளிக்கையில், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்றுவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், காலி கோட்டையை அண்மித்து நிர்மானிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பார்வையாளர் கட்டிடம் மட்டுமே அகற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பெற்றோலிய வளங்கள் அமைச்சரும், 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க கருத்து வெளியிடுகையில், இந்த மைதானத்தை நிர்மானிக்கும் போது நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த பார்வையாளர் அரங்கை நிர்மானிக்க வேண்டாம் என தெரிவித்தோம். எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், காலியில் உள்ள கிரிக்கெட் அதிகாரிகளும் இதனை அமைக்க முன்நின்று செயற்பட்டார்கள். ஏனெனில், இந்த அரங்கை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியை தங்களது சட்டைப் பைகளில் போட்டுக் கொண்டார்கள். இதுதான் இலங்கையின் கிரிக்கெட்டுக்கு தற்போது நடந்துள்ளது” என்றார்.

இந்த பார்வையாளர் அரங்கை கட்டிய பிறகு மீண்டும் உடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு சொன்னபிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் அந்த பார்வையாளர் அரங்கிற்கு வைக்கப்பட்டது. அதன்காரணமாக அந்த கட்டிடம் அகற்றப்படவில்லை. காலியில் பொதுவாக வருடமொன்றுக்கு 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே விளையாடப்படுகின்றன. குறைந்த பட்சம் 10 நாட்கள் தான் கிரிக்கெட் இடம்பெறுகின்றது. எனவே, உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து காலி கோட்டையைப் பாதுகாத்து, காலி கிரிக்கெட் மைதானத்தையும் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இளம் தனன்ஜயவின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள்

இலங்கை அணிக்காக பந்துவீச்சு மற்றும் துப்பாட்டாம் இரண்டிலும் சோபித்த அகில தனன்ஜய…

இதேநேரம், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்ற வேண்டும் என 2007 முதல் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருமான வஜிர அபேகுணவர்தன, இந்த மைதானத்தை அகற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என நேற்று (21) வெளியிட்டிருந்த ஊடக அறிவிப்பில் தெரிவித்திருந்தார். பெய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன் இதுதொடர்பில் விசேட அறிவிப்பை நாட்டு மக்களுக்காக தெரிவிக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

காலியில் ஆர்ப்பாட்டம்

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காலி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் காலி மாவட்ட அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் பங்குபற்றலுடன் நேற்று (21) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் காலி மைதானத்தை ஒருபோதும் அகற்றுவதற்கோ, அங்குள்ள மஹிந்த ராஜபக்ஷ பார்வையாளர் அரங்கை அகற்றவோ இடமளிக்கப் போவதில்லை எனவும், அவ்வாறு இடம்பெற்றால் அரசாங்கத்திற்கு எதிராக நாடுமுழுவதும் ஆர்பாட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கௌரவம் காலி கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. இலங்கை அணிக்கு மிகவும் ராசியான மைதானமும் இதுவாகும். அதுமட்டுமன்றி இலங்கையில் நடைபெறும் எந்தவொரு டெஸ்ட் தொடரினதும், முதல் போட்டி இங்கேயே நடைபெறுகின்றது. எனவே, காலி கோட்டையுடன், காலி கிரிக்கெட் மைதானத்தையும் பாதுகாத்து உரிய தீர்வொன்றை அரசாங்கம் விரைவில் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமல்லாது, கிரிக்கெட்டை விரும்புகின்ற ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க