கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக விளையாடும் அசார் அலி

221

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அசார் அலி கவுண்டி (உள்ளூர்) சம்பியன்ஷிப் அணியான சமரெஷ்ட் அணிக்காக 7 போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்ஹர் சமானின் அசத்தல் சதத்துடன் இலகு வெற்றிபெற்ற பாகிஸ்தான்

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் …

பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அசார் அலி முதன்முறையாக கவுண்டி சம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 33 வயதாகும் அசார் அலி இதுவரையில் கவுண்டி போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. எனினும், இந்த பருவகாலத்தில் சமரெஷ்ட் அணிக்காக மிகுதி உள்ள 7 போட்டிகளிலும் விளையாடுவார் என சமரெஷ்ட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அசார் அலி கடந்த மே மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர், கவுண்டி அணிகளான சர்ரே அல்லது சமரெஷ்ட் அணிகளில், ஏதாவது ஒரு அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியாகியிருக்கவில்லை. இந்நிலையில், தற்போது அவுஸ்திரேலிய அணியின் மெட் ரென்ஷோவுக்கு பதிலாக அசார் அலி இணைக்கப்பட்டுள்ளார்.

மெட் ரென்ஷோவ், அவுஸ்திரேலிய அணியின் கெமரொன் பென்கிரொப்ட்டுக்குப் பதிலாக சமரெஷ்ட் அணிக்காக இணைக்கப்பட்டார். தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக 9 மாத தடைக்கு முகங்கொடுத்த பென்கிரொப்ட், கவுண்டி சம்பியன்ஷிப்பில் இருந்து வெளியேறினார். இவருக்குப் பதிலாக இந்த பருவகாலத்தின் முதல் சுற்றில் விளையாடிய ரென்ஷோவ், 51.30 என்ற ஓட்ட சராசரியுடன் மூன்று சதங்களை விளாசியிருந்தார். தற்போது விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தொடரிலிருந்து இவர் விலகியுள்ளார்.

இந்திய அணியில் விரிதிமன் சஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்?

இங்கிலாந்து அணிக்கெதிராக அடுத்த மாதம் முதலாம் திகதி …

இந்த நிலையில் அசார் அலி இணைக்கப்பட்டமை தொடர்பில் சமரெஷ்ட் அணியின் பணிப்பாளர் ஹெண்டி ஹரி குறிப்பிடுகையில், அசார் அலி போன்ற வீரர் ஒருவரை சமரெஷ்ட் அணியில் தக்கவைத்துக்கொண்டது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அவரது அனுபவம் எங்களது அணிக்கு மேலும் பலத்தை அளிக்கும். கடந்த சில வாரங்களாக அவருடன் தொடர்புக்கொண்டு பேசி வருகிறேன். அவருடைய அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்கு தயாராக  இருக்கிறார். சக வீரர்களுடன் சமரெஷ்ட் அணியின் உடைமாற்றும் அறையில் அவரின் அனுபவங்கள் பகிரப்படும் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணி இவ்வருட ஆரம்பத்தில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதி்ல் விளையாடிய அசார் அலி, கிரிக்கெட்டின் தாயகம் என வர்ணிக்கப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் அரைச்சதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார். எனினும், ஏனைய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் மொத்தமாக 6 இன்னிங்ஸ்களில் 73 ஓட்டங்களை  பெற்றிருந்தார்.

எனினும், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர், இங்கிலாந்து தொடருக்கு பின்னர் அசார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோரை கவுண்டி சம்பியன்ஷிப் தொடரில் இணைப்பதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தார். சர்ரே அணியில் அசார் அலி இணையவிருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், அதற்கு மிக்கி ஆதர் தனது பூரண ஆதரவை தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் குறிப்பிட்ட தருணத்தில் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்போது அசார் அலி சமரெஷ்ட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…