சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் தடை

1041

கடந்த மாதம் 14 ஆம் திகதி சென். லூசியாவில் ஆரம்பமான இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தினை இரண்டு மணி நேரம் தாமதப்படுத்தியமைக்காக இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் மீது கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை பேணத்தவறினர் என ஐ.சி.சி. இன் பிரதான நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இம்மூவரும் மேற்கொண்ட இந்த செயல் ஐ.சி.சி. இன் மூன்றாம் நிலைக் குற்றம் என்பதால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்னவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம்

புதிய சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஐ.சி.சி. இன் மூன்றாம் நிலை குற்றத்தினை மேற்கொள்ளும் ஒருவருக்கு நான்கு தொடக்கம், எட்டுவரையிலான போட்டித் தடைப் புள்ளிகள் கிடைக்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் சந்திமால், ஹதுருசிங்க மற்றும் குருசிங்க ஆகியோர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக் கொண்ட நிலையில்,  கிரிக்கெட்டின் மகத்துவத்தை பேணத் தவறிய இந்த குற்றங்களுக்காக அவர்கள் மூவருக்கும் அதிகபட்ச தண்டனையாக எட்டு போட்டித்தடை புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த போட்டித்தடை புள்ளிகளின் அடிப்படையில் மூவருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள், நான்கு ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த குற்றம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜூலை மாதம் 11 ஆம் திகதி, ஐ.சி.சி. இன் நீதியாணையாளர் தலைமையில் நடைபெற்றிருந்தது. அந்த விசாரணைகளின் பின்னர் இந்த மூவருக்கும் காலியில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் ஏற்கனவே பங்கேற்க முடியாமல் போயிருந்தது.

புதிய போட்டி தடைகளின் மூலம் தற்போது தினேஷ் சந்திமால், சந்திக்க ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியிலும், தம்புள்ளை மற்றும் பல்லேகல ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

எட்டு போட்டித் தடை புள்ளிகளைப் பெறும் ஒருவருக்கு அவரது நாடு அடுத்ததாக விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகள், நான்கு ஒருநாள் போட்டிகள் அல்லது நான்கு T20 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உருவாகும். இதன் அடிப்படையிலேயே சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்க ஆகியோர் தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகளில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை இழக்கின்றனர்.

சந்திமாலுக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடாத்தி வருகின்றதோடு, இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக துடுப்பாட்ட பயிற்றுனர் திலான் சமரவீரவும், இடைக்கால அணி முகாமையாளராக சந்திம மடுபனவும்  செயற்படுவார்கள் என கூறப்படுகிறது.

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் வீரர் வியாஸ்காந்த்

அதேநேரம் இந்த மூவருக்கும் ஆறு நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தினேஷ் சந்திமால் மேற்கிந்திய தீவுகளுடனான சென். லூசியா டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட நான்கு நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளுடன் மொத்தமாக தற்போது அவர் பத்து நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளை அவரது பெயரின் கீழ் பெற்றிருக்கின்றார். இந்த பத்து நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளும் ஒரு டெஸ்ட் போட்டிக்காகவே அவருக்கு கிடைத்திருக்கின்றன.

சந்திமாலுக்கு மேற்கிந்திய தீவுகளுடன் சென். லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளோடு சேர்த்து, குறித்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்ததோடு போட்டிக் கட்டணத்தின் 100% அபராதமாகவும் செலுத்த முன்னர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<