ஜயசூரியவின் அபார சதத்தால் இலங்கை A அணி வலுவான நிலையில்

458

பங்களாதேஷுக்கு சுற்றும் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை A அணிக்கும் பங்களாதேஷ் A அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆட்டம்  நிறைவுக்கு வரும்போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் A அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

78 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளை தொடங்கிய இலங்கை A அணி இன்றைய முதல் பந்திலேயே சரித் அசலங்க ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து 5ஆவது விக்கெட்டுக்காக ஷெஹான் ஜயசூரிய மற்றும்  ஷம்மு அஷான் ஜோடி 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டதன் மூலம் இலங்கை A அணி முன்னிலை பெற்றது. ஷம்மு அஷான் 60 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

ஜயசூரியவின் சகதுறை ஆட்டத்தால் முதல் நாள் இலங்கை ஏ அணி வசம்

இன்றைய தினம் இலங்கை A அணி சார்பாக சிறப்பாக விளையாடிய ஷெஹான் ஜயசூரிய 15 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்ககள் அடங்களாக 142 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து மனோஜ் சரத்சந்திர மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் முறையே 33 மற்றும் 27 ஓட்டங்களை பெற்று இலங்கை A அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்ததினர்.

இறுதியில் இலங்கை A அணி 312 ஓட்டங்கள் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் A அணியை விட 145 ஓட்டங்கள் மேலதிகமாக பெற்று முன்னிலையில் இருந்தது. பந்துவீச்சில் பங்களாதேஷ் A அணி சார்பாக  சன்சமுல் இஸ்லாம் 4 விக்கெட்டுக்களையும் முஸ்தபிஷுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும் நயீம் ஹஸன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

145 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் A அணி இன்றைய நாள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த வகையில் பங்களாதேஷ் A அணி இரண்டாம் இன்னிங்சிற்காக இலங்கை A அணியை விட 88 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் A அணி (முதல் இன்னிங்ஸ்) – 167 (62.3) – சாகிர் ஹசன் 42, சன்சமுல் இஸ்லாம் 41, பிரபாத் ஜயசூரிய 3/12, ஷெஹான் ஜயசூரிய 3/47, மலிந்த புஷ்பகுமார 3/48

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 312 (81.1) – ஷெஹான் ஜயசூரிய 142, ஷம்மு அஷான் 60, சன்சமுல் இஸ்லாம் 4/104, முஸ்தபிஷுர் ரஹ்மான் 3/44

பங்களாதேஷ் A அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 57/1 (17) – சௌம்யா சர்க்கார் 24*, மலிந்த புஷ்பகுமார 1/22

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<