பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம்

650

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (10) உறுதி செய்தது.

இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவரிடம் விளக்கம் கோரி குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்க மீதான ஐ.சி.சி யின் இறுதித் தீர்ப்பு நாளை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண்ண ஒரு நாள் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார். அப்போது அவரது சிறுநீர் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்படி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் முடிவு கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் அவர் மரிஜுவானா என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், கடந்த மாதம் 20 ஆம் திகதி ஊடகங்கள் வாயிலாக செய்திகளும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தனது டுவிட்டரில் இதனை உறுதி செய்திருந்தது. ஆனால் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டுள்ளார் என்பதை அந்நாட்டு ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு உறுதி செய்யும் வரை குறித்த வீரரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு பிரிவு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அந்நாட்டு ஊக்கமருந்து தடுப்பு பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் குற்றப்பத்திரகை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் அளிப்பதற்கு அஹமட் ஷேசாத்துக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளில் ஊக்கமருந்து தொடர்பான 8.1 பிரிவின்படி, வீரர் ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியது, உடற்கூற்று முகவர்களை சந்திப்பது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொள்வது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டால் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் போட்டித் தடை விதிக்கப்படும்.

T-20 தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த பின்ச் : ஷமான், ராஹுல் முன்னேற்றம்

எனவே அஹமட் ஷேசாத் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாற்றத்தை சந்தித்து வரும் அஹமட் ஷேசாத், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உள்ளுர் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் கைபர் பக்துன்க்வா அணிக்காக விளையாடியிருந்தார்.

குறித்த தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 372 ஓட்டங்களைக் குவித்த அவர், அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, கடந்த மாதம் ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற டி-20 போட்டித் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்ட ஷேசாத், முறையே 14 மற்றும் 24 ஓட்டங்களைக் குவித்து ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த ஜிம்பாப்வே, அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் உத்தேச குழாமில் அஹமட் ஷேசாத் இடம்பெற்றிருந்தார். எனினும், அவருக்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவரை குறித்தி தொடரில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இவ்வாறு தவறான காரணங்களுகாக அஹமட் ஷேசாத்துக்கு போட்டித் தடைகள் மற்றும் தண்டணைகள் விதிக்கப்படுவது இது முதற்தடவையல்ல, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கிண்ண பிரச்சார நடவடிக்கைகளின் போது அப்போதைய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய வக்கார் யூனுஸ், ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அஹமட் ஷேசாத் மற்றும் உமர் அக்மலை அணியிலிருந்து நீக்கும்படியும், உள்ளுர் போட்டிகளில் மாத்திரம் விளையாட அனுமதி வழங்கும்படியும் அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அஹமட் ஷேசாத், இதுவரை 13 டெஸ்ட், 81 ஒரு நாள் மற்றும் 57 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறை விமர்சையாக நடைபெறவுள்ள கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக்

ஊக்கமருந்து சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்கள் சிக்குவது அரிதாக இருந்தாலும், அவ்வணியின் முன்னாள் வீரர்களான சொஹைப் அக்தார், மொஹமட் ஆசிப், அப்துல் ரஹ்மான் மற்றும் ரிஸா ஹசன் போன்றோர் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கி போட்டித் தடைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான யாசிர் ஷாஹ் ஊக்கமருந்து பயன்படுத்தியமை தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு 3 மாதங்கள் போட்டித் தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…