லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

2839
Sri Lanka vs Lithunia

இலங்கை மற்றும் லிதுவேனியா கால்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற சர்வதேச நட்பு ரீதியிலான போட்டித் தொடரின்  முதலாவது போட்டி எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் நிறைவுற்றுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மோதல் இலங்கை அணி சுமார் 20 மாதங்களின் பின்னர் ஆடும் சர்வதேசப் போட்டியாகவும், 6 வருடங்களின் பின்னர் இலங்கையில் விளையாடும் சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் இறுதிக் குழாம் அறிவிப்பு

இலங்கை தேசிய கால்பந்து அணி எதிர்வரும் காலங்களில்..

போட்டியின் ஆரம்பத்திலேயே  லிதுவேனிய அணி இலங்கை  வீரர்களை சோதித்தது. அலோசியஸ் டடஸ் உள்ளனுப்பிய பந்தை ஸ்டோன்கஸ் லோரினஸ் தலையால் தட்டி கோலாக்க முயற்சித்த போதும் அதனை இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா தட்டி எதிரணியின் வாய்ப்பைத் தடுத்தார்.

அதன் பின்பு சுதாகரித்த இலங்கை பின்கள வீரர்கள் மிகவும் சிறப்பாக செயற்படத் தொடங்கினர். எனினும், பந்தை லிதுவேனிய வீரர்களே  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இவ்விரிருக்க முறையற்ற ஆட்டத்திற்காக போட்டியின் முதலாவது மஞ்சள் அட்டை இலங்கை அணியின் அபீல் மொஹமடுக்கு வழங்கப்பட்டது.

மீண்டுமொரு வாய்ப்பு லிதுவேனியாவிற்கு கிடைக்கப்பெற்றது. இம்முறை சீர்விஸ் பிஜஸ் பந்தை உள்ளனுப்பினார். அதனை அலோசியஸ் டடஸ் தலையால்  அடிக்க மீண்டும் பந்து கோல் கம்பங்களுக்கு மேலாகப் பறந்தது.

மறுமுனையில், விமானப்படை அணி வீரர் கவிந்து இஷான் மைதானத்தின் வலது பக்க எல்லையினூடாக லாவகமாக எதிரணியின் எல்லைக்குள் எடுத்துச் சென்று உள்ளனுப்பிய பந்து இறுதித் தருவாயில் லிதுவேனிய பின்கள வீரர்களால் வெளியனுப்பப்பட்டது.

2 வருடங்களின் பிறகு மீண்டும் சர்வதேச கால்பந்தில் களமிறங்கும் இலங்கை

இலங்கையின் கால்பந்து விளையாட்டின்…

முதலாவது பாதியின் இறுதித் தருவாயில் லிதுவேனிய அணிக்கு சிறந்த ஒரு வாய்ப்புக் கிடைக்க, உர்பிஸ் சிமோனாஸ் பந்தை கம்பங்களுக்கு வெளியே உதைத்தார்.

முதல் பாதி முழுவதும் சிறந்த ஒரு தடுப்பாட்டத்தை வழங்கிய இலங்கை வீரர்களுக்கு மத்தியில், லிதுவேனிய வீரர்களுக்கு வெற்றிகரமான நிறைவுகளை மேற்கொள்ள முடியாமல் போனது.

முதல் பாதி: இலங்கை 0 – 0 லிதுவேனியா

போட்டியின் இரண்டாம் பாதியை லிதுவேனியா உத்வேகத்துடன் தொடங்க இலங்கை வீரர்கள் சற்று தடுமாற்றமான ஆரம்பத்தைக் காண்பித்தனர்.

இரண்டாம் பாதியின் முதல் முயற்சியாக, உர்பிஸ் சிமோனாஸ் பெனால்டி எல்லைக்குள் இருந்து அடித்த உதையின்போது பந்து கோல் கம்பங்களைத் தாண்டி மேலால் சென்றது.

சில நிமிடங்கள் சென்றதன் பின்பு இலங்கை வீரர்கள் தமது ஆட்டத்தை ஸ்திரப்படுத்தினர். நீண்ட நேரம் தடுப்பாட்டத்தை மேற்கொண்டு வந்த இலங்கை அணியினர் கோலுக்கான முயற்சிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதேவேளை, இளம் வீரர்களான அசேல மதுஷான் மற்றும் சசங்க தில்ஹார ஆகியோர் களத்திற்குள் மாற்று வீரர்களாக செல்ல, இலங்கை அணியின் துடிப்பும் வேகமும் மேலும் அதிகரித்தது.

விறுவிறுப்பான காலிறுதியில் ரஷ்யாவை வீழ்த்திய குரோஷியா

முடிவை தீர்மானிக்கும் இவான் ரகிடிக்கின் (Ivan RAKITIC)…

அசேல மதுஷான் இடது பக்கத்திலிருந்து பந்தை உள்ளனுப்ப கவிந்து இஷானின்  கால்களுக்குச் சென்றது. அதைப் பெற்ற இஷான் பந்தை கோலுக்குள் அடிக்க அது கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

மீண்டும் ஒருமுறை இலங்கை முன்னேறிச் செல்ல மத்திய களத்தின் ஒரு திசையில் இருந்து சசங்க உள்ளனுப்பிய பந்து சர்வான் ஜோஹாரிடம் சென்றது. இதன்போது, சர்வான் ஹெடர் மூலம் அடித்த பந்தை லிதுவேனிய கோல்காப்பாளர் இலகுவாகத் தடுத்தார்.

போட்டியின் இறுதி  நேரத்தில் இரு அணியினரும் மிகவும் சிறந்த முறையில் எதிரணியின் தாக்குதல்களைத் தடுத்தாடியது. எனவே, இரு அணிகளாலும் பெரிதாக வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் செல்ல போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இந்த சமநிலையான முடிவுடன், நிசாம் பக்கீர் அலியின் வழிநடாத்தலில் புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கை அணி, நீண்ட நாட்களின் பின்னர் இடம்பெற்ற இந்த சர்வதேசப் போட்டியை திருப்திகரமாக முடித்துள்ளது.

லிதுவேனிய மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி மாலை இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முழு நேரம்: இலங்கை 0 – 0 லிதுவேனியா

ThePapare.com இன் சிறப்பாட்டக்காரர் டக்சன் பியுஸ்லஸ் (இலங்கை)

மஞ்சள் ட்டை

இலங்கை அபீல் மொஹமட்

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க