பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு இறுதிவரை ஆட்டம் காட்டிய ஜிம்பாப்வே

171

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று (06) ஹராரே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு T-20 தொடரின் ஆறாவது போட்டியில், போராடிய அவுஸ்திரேலிய அணி ஒரு பந்து எஞ்சியிருக்க, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மயிரிழையில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.

முத்தரப்பு T-20 தொடரின் தங்களுடைய இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் விளையாடிய அவுஸ்திரேலிய அணி பல சாதனைகளுடன் வெற்றிக் கனியை எட்டிப்பிடித்திருந்தது. முக்கியமாக அவுஸ்திரேலிய அணியின் தலைவராக பணியேற்று விளையாடி வரும் ஆரோன் பின்ச், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சாதனையையும் நிகழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் 172 ஓட்டங்களை விளாசிய ஆரோன் பின்ச், சர்வதேச T-20  அரங்கில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். இதனால் இன்றைய போட்டியில், அணித் தலைவர் என்ற ரீதியிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியிலும் ஆரோன் பின்ச்சின் துடுப்பாட்டம் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

முதல் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்

இவ்வாறு பல எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற, அணித் தலைவர் ஹெமில்டன் மசகட்ஸா துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார். ஜிம்பாப்வே அணி 21 வயதான இடதுகை சுழல் பந்துவீச்சு சகலதுறை ஆட்டக்காரர் பிரெண்டன் மாவுடாவுடன்,  பந்து வீச்சாளர் டொனால்ட் டிரிபனோவையும் களமிறக்கியதுடன், கிரிஸ் எம்போஃபு மற்றும் டெண்டாய் சிசாரோ ஆகிய வீரர்களை வெளியேற்றியது. அவுஸ்திரேலிய அணியானது, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி தடுமாறிவந்த ஆர்சி ஷோர்ட்டுக்கு பதிலாக, 24 வயதான குயின்ஸ்லாந்து வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் ஜெக் வில்டர்முத்தை களமிறக்கியது.

இதன்படி, தொடரின் ஆறுதல் வெற்றியை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஜிம்பாப்வே அணியும், பந்தை சேதப்படுத்திய கரையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி வந்த அவுஸ்திரேலிய அணியும், வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

இந்த போட்டியில் எப்போதும் போன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சொலமன் மிர் களமிறங்கியதுடன், அவருடன் செப்ஹஸ் ஜிவேயோ (Cephas Zhuwao) களம் புகுந்தார். அவுஸ்திரேலிய அணியின் சார்பில் முதல் பந்து ஓவரை பில்லி ஸ்டென்லெக் வீச, ஜிம்பாப்வெ அணியின் செப்ஹஸ் ஜிவேயோ ஓட்டங்கள் இன்றி, விக்கட் காப்பாளர் அலெக்ஸ் கெரியிடம் பிடிகொடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினார். முதல் பந்திலேயே விக்கட்டை பறிகொடுத்த ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் ஆரம்பித்தது. தொடர்ந்து ஜெய் ரிச்சட்சன் வீசிய நான்காவது ஓவரில் அணித் தலைவர் ஹெமில்டன் மசகட்ஸா (13) போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் பந்து வீச்சில் எதிரணிக்கு சவால் கொடுத்த ஸ்டென்லேக், தான் வீசிய மூன்றாவது ஓவரில் டரிசாய் முசகண்டாவை (12) ஆட்டமிழக்கச்செய்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 5.5 ஓவர்கள் நிறைவில், 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த பீட்டர் மூர் மற்றும் சொலமன் மிர் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை சீரான இடைவெளிகளில் எல்லைக் கோட்டுக்கு திருப்பி ஓட்டங்களை சேர்த்தனர். 16 ஆவது ஓவர் வரை இணைந்திருந்த இவர்கள் 68 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், பீட்டர் மூர் 30 ஓட்டங்களுடன் ரிச்சட்சனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பீட்டர் மூர்  ஆட்டமிழந்தும், தனது நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மிர் தனது இரண்டாவது அரைச்சதத்தை கடந்தார். ஜிம்பாப்வே அணிக்காக போராடி ஓட்டங்களை குவித்த சொலமன் மிர் 52 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை சேர்த்தார்.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில், என்ரு டை 4 பந்து ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, ஸ்டென்லேக் மற்றும் ரிச்சட்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் சவால் நிறைந்த ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அணித்தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் இன்றைய போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆர்சி ஷோர்ட்டுக்கு பதிலாக அலெக்ஸ் கெரி ஆகியோர் களமிறங்கினர்.

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பின்ச் விலிங்டன் மசகட்ஸாவின் பந்து வீச்சில் வெறும் மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் வலுவிழந்த மத்திய வரிசை துடுப்பாட்டம் அவுஸ்திரேலிய அணிக்கு எவ்வாறு உதவப்போகின்றது என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. மறுமுனையில் துடுப்பாடி வந்த அலெக்ஸ் கெரி 16 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்ப, ஜிம்பாப்வே அணியின் ஆதிக்கம் போட்டியில் அதிகரித்தது.

இந்த விக்கெட்டை அடுத்து ஜோடி சேர்ந்த கிளேன் மெக்ஸ்வேல் மற்றும் டிராவிஸ் ஹெட் 17 ஆவது ஓவர் வரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காது அருமையாக ஓட்டங்களை குவித்தனர். 38 பந்துகளை எதிர்கொண்ட மெக்ஸ்வேல் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 56 ஓட்டங்களை விளாசி முஷரபானியின் பந்து வீச்சில் சிகும்புராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மெக்ஸ்வேலுக்கு பதிலாக களமிறங்கிய மெடின்சன் 2 ஓட்டங்களுடன் டிரிபனோவின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, 48 ஓட்டங்களை பெற்றிருந்த டிராவிஸ் ஹெட், முஷரபானியின் பந்து வீச்சில் ஆட்டமிந்தார். டிராவிஷ் ஹெட் 3 பௌண்டரிகளை மாத்திரம் விளாசி 42 பந்துகளுக்கு 48 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்தில் கலக்கப்போகும் திஸர பெரேரா

இறுதியில் அவுஸ்திரேலிய அணி ஒரு பந்து மீதமிருக்க 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பாக நான்கு ஓவர்கள் பந்து வீசிய முஷரபானி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். ஜிம்பாப்வே அணியுடன் போரடி வென்ற அவுஸ்திரேலிய அணி, முத்தரப்பு T-20 தொடரின் இறுதிப் போட்டியில், ஐசிசி T-20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பலம் மிக்க பாகிஸ்தானை எதிர்வரும் 13 ஆம் திகதி ஹராரே மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 151/9 (20) – சொலமன் மிர் 63(52), பீட்டர் மூர் 30(29), என்ரு டை 28/3(4)

அவுஸ்திரேலியா – 154/5 (19.5) – கிளேன் மெக்ஸ்வேல் 56(38), டிராவிஸ் ஹெட் 48(42), முஷரபானி 21/3(4)

முடிவு – அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க