இலங்கை கிரிக்கெட் தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள அதன் யாப்பை மாற்ற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நேர்மையானவர்கள் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு வரமுடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தேர்தலை ஆறு மாதத்திற்குள் நடத்தவும் – ஐ.சி.சி உத்தரவு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும்..
இலங்கை கிரிக்கெட்டில் சட்டத்தை நிலைநாட்டி, அதன் யாப்பை மாற்றுவது உள்ளிட்ட பல முக்கியமான விடயங்களை வலியுறுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் ஐவர் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவை நேற்று (04) சந்தித்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர்களான ஆனா புஞ்சிஹேவா, சிதத் வெத்தமுனி, அர்ஜூன ரணதுங்க, ஜயந்த தர்மதாஸ, உபாலி தர்மதாச ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். எனினும், விஜய மலலசேகர மற்றும் ரியென்சி விஜேதிலக ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணங்களால் இதில் கலந்துகொள்ளவில்லை.
இலங்கை கிரிக்கெட்டின் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதன் யாப்பினை மாற்றியமைத்து புதிய யாப்பொன்றை உருவாக்குவதற்கு தற்காலிக குழுவொன்றை நியமிக்கும்படி குறித்த எழுவரும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடந்த வாரம் கடிதமொன்றை அனுப்பியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் புதிய யாப்பொன்றை விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும், இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பதில் எந்தவொரு பலனும் கிடையாது எனவும் அனைவரும் ஏகோபித்த முடிவாக தெரிவித்துள்ளனர். அத்துடன், யாப்பு தொடர்பிலான வரைபினை தயாரிப்பதற்கு நம்பிக்கையான நபர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமிக்கும்படியும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனினும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹானாம, மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரை மீண்டும் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் ஆகியோரின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சருடனான சந்திப்பினை அடுத்து ஊடகங்களுக்கு முன்னாள் அணித் தலைவரும், இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க கருத்து வெளியிடுகையில்,
”இதுவரை காலமும் நம்பிக்கை இழந்திருந்தேன். ஆனால், இன்றைய இந்த சந்திப்பின் பிறகு விரைவில் அதற்கான மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தகுதியற்றவர்கள் இருப்பதன் காரணமாகத்தான் இங்குள்ள அனைவரும் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.
ஓய்வை அறிவித்தார் டேவிட் ரிச்சட்சன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தலைமை நிறைவேற்று..
ஆனால், இலங்கை கிரிக்கெட்டானது இன்னும் கீழே விழுந்துவிடவில்லை. அதை வீழ்த்துவதற்கே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை தடுப்பதற்காகவே நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அமைச்சரை சந்தித்து தெளிவுபடுத்தவும், ஆலோசனை வழங்கவும் தீர்மானித்தோம். இந்த நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்காக போட்டியிட்டாலும் இவர்களை வெல்வது மிகவும் கடினம். எனவே, நாம் அவற்றை அமைச்சருக்கு தெளிவுபடுத்தினோம். அதிலும் கிரிக்கெட் யாப்பை மாற்றுவது மாத்திரமல்லாது இலங்கை அணியின் வளர்ச்சிக்காக பல்வேறு விடயங்களை அமைச்சருக்கு எடுத்துரைத்தோம்” எனத் தெரிவித்தார்.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மற்றுமொரு முன்னாள் தலைவரான சிதத் வெத்தமுனி கருத்து வெளியிடுகையில்,
”அர்ஜுன ரணதுங்க சொன்னது போல நாங்களும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். இலங்கை கிரிக்கெட்டின் யாப்புதான் இங்குள்ள மிகப் பெரிய பிரச்சினை. அவ்வாறு யாப்பை மாற்றியமைத்தால் மாத்திரமே இலங்கை கிரிக்கெட் முன்னேற்றப் பாதையில் செல்லும்” என்றார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரிகள் ஐவர் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்குமான விஷேட சந்திப்பொன்றும் இன்றைய தினம் (05) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<