இந்திய அணியின் சுழல் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் தனது 38 ஆவது பிறந்த நாளினை நேற்று (03) விமர்சையாக கொண்டாடியிருந்தார். ஹர்பஜன் சிங்கின் பிறந்த தினத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் தமிழில் வாழ்த்து தெரிவித்தது சமூக வலைதளங்களில் அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியிருக்கின்றது.
இந்தியன் பிரீமியர் லீக் T20 தொடரில் வழமையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே ஆடி வந்த ஹர்பஜன் சிங்கினை இந்தப் பருவகாலத்திற்கான தொடரில் தமிழகத்தினை மையமாகக் கொண்ட சென்னை சுபர் கிங்ஸ் அணி கொள்வனவு செய்திருந்தது.
சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வீரராக மாறியதன் பின்னர் தமிழ் மொழியில் ஆர்வம் காட்டத் தொடங்கிய பஞ்சாப் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட ஹர்பஜன் சிங் ஒரு முழுமையான தமிழராக தன்னை கருதும் அளவுக்கு தனது டுவிட்டர் கணக்கில் பல்வேறு சுவாரசியமான விடயங்களை தமிழில் பகிர்ந்து, தமிழ் பேசும் கிரிக்கெட் இரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மாறினார்.
இப்படியாக தமிழ் மீது ஆர்வம் உள்ள ஹர்பஜன் சிங்கிற்கு அவரது பிறந்த நாளில் சச்சினின் தமிழில் எழுதப்பட்ட பிறந்த நாள் வாழ்த்து இன்ப அதிர்ச்சியாக அமைந்திருந்தது.
ஹர்பஜனுக்கான தனது வாழ்த்தினை சச்சின் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு மூலமாக ”உங்களுக்கு பிறந்த வாழ்த்துக்கள், குதுகலமாக இருங்கள்” என குறிப்பிட்டிருந்தார். தமிழில் எழுதப்பட்ட சச்சினின் வாழ்த்து செய்தி “ விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, ஹர்பஜன் சிங்! ஹவ் எ ப்ளாஸ்ட்” என அமைந்திருந்தது.
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்? pic.twitter.com/UYOiCQF4mO
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2018
சச்சினின் வாழ்த்தினால் மிகவும் பூரிப்படைந்த ஹர்பஜன் சிங் சச்சினுக்கு தன்னுடைய மறு செய்தியில் “ நன்றி சொல்ல உங்களுக்கு!! வார்த்தை இல்லை எனக்கு “ எனக் கூறி தமிழில் வாழ்த்து தெரிவித்தமைக்கு தனது நன்றியினை கூறியிருந்தார்.
@sachin_rt நன்றி சொல்ல உங்களுக்கு!! வார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்குறேன் தமிழில் வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா https://t.co/qbey6mgJIr
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 3, 2018
சச்சின் தமிழில் வாழ்த்து சொன்னதை பற்றி கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் சில இரசிகர்கள் ஹர்பஜன் சிங் தனது தமிழ் ஆர்வத்தினால் தாங்கள் கிரிக்கெட்டின் சிகரமாக கருதும் சச்சினையே தமிழில் பேச வைத்துவிட்டார் என்று பாராட்டியிருந்தனர்.
இந்திய அணிக்காக 1998 ஆம் ஆண்டு அறிமுகமாயிருந்த ஹர்பஜன் சிங் இதுவரையில் 713 சர்வதேச விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.