ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு தொடர் வெற்றி

213
Asianvolleyball.net

ஈரானின் தெப்ரிஸ் நகரில் நடைபெற்று வருகின்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பன்னிரண்டாவது ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் சி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, ஹொங்கொங் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் நடைபெற்ற குழு நிலைப் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடருக்காக இலங்கை அணி ஈரான் பயணம்

ஈரானின் தெப்ரிஸ் நகரில் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான …

கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டித் தொடரில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா, சீன தாய்ப்பே, கஸகஸ்தான், இந்தியா, ஈரான், அவுஸ்திரேலியா, ஹொங்கொங், உஸ்பெகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 18 ஆசிய நாடுகள் பங்குபற்றியுள்ளன.  

இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹொங்கொங் அணியுடனான முதல் லீக் போட்டியில் முதலிரண்டு செட்களிலும் 25-17, 25-14 என முன்னிலை பெற்ற இலங்கை அணி, மூன்றாவது செட்டை 22-25 என இழந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டை 25-18 என கைப்பற்றிய இலங்கை அணி, 31 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டியது.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி நேற்று (01) அவுஸ்திரேலிய அணியை சந்தித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 25-20, 25-21, 26-24 என கைப்பற்றி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற இலங்கை அணி குறித்த பிரிவில் முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது.  

இவ்விரண்டு போட்டிகளிலும் அணித் தலைவர் யூ.என் மிலிந்த நிர்மால், நவோத் கௌஷல்ய, துலான் சந்தீப, தெஹான் ரிசித், அசேல மலின்த, தரூஷ சமத், ருக்ஷான் துலங்க இலங்கை அணிக்காக விளையாடியிருந்தனர்.

இந்நிலையில், இலங்கை மற்றும் கட்டார் அணிகளுக்கிடையிலான மற்றுமொரு போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது.   

எனினும், முன்னதாக நடைபெற்ற மலேசியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய அணிகளுடனான லீக் போட்டிகளில் கட்டார் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.