விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத ஆட்டங்கள், எதிர்பாராத போட்டி முடிவுகள், தனிப்பட்ட சாதனைகள், வீரர்களின் மோசமான நடத்தை, நடுவர்களின் பக்கச்சார்பான முடிவுகள் என கடந்த இரண்டு வாரங்களாக கால்பந்து உலகை தலைகீழாக மாற்றிய 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ள நிலையில், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நொக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்ற 32 அணிகளில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு (நொக்-அவுட்) முன்னேறியுள்ளன. அதிலும் குறிப்பாக, அதிர்ச்சிகரமாக நடப்பு சம்பியன் ஜேர்மனி அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.
முதல் சுற்றுடன் வெளியேறிய நடப்பு உலகக் கிண்ண சம்பியன்கள்
லீக் போட்டிகளின் முடிவில், A குழுவில் இருந்து ரஷ்யா, உருகுவே, B பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்த்துக்கல், C பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், D பிரிவில் இருந்து குரோஷியா, ஆர்ஜென்டீனா, E பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, F பிரிவில் இருந்து சுவீடன், மெக்சிகோ, G பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, H பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதன் மூலம் முன்னாள் உலக சம்பியன்களான பிரேசில், ஆர்ஜெண்டீனா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேநேரம், இம்முறை உலகக் கிண்ணத்தில் F பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சம்பியனான ஜேர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன், பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அறிமுக அணியான ஐஸ்லாந்து, செர்பியா, போலந்து ஆகிய அணிகளும், நட்சத்திர வீரர் முஹமது சலாஹ்வின் எகிப்து மீது தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த அணியும் ஏமாற்றியது.
இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் நடைபெற்ற தகுதிச்சுற்றில் நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்றிருந்த பிரபல இத்தாலி அணியும் இம்முறை உலகக்கிண்ணத்திற்கு தகுதிபெறவில்லை.
தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை
பிபாவின் சார்பில் 5 கால்பந்து கூட்டமைப்புகள் உலகெங்கும் நடத்திய தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற அணிகளே உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்றன. இதன்படி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து உலகக் கிண்ணத்திற்கு நுழைந்த 14 அணிகளில் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், ரஷ்யா, குரோஷியா, டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய 10 அணிகள் 2ஆவது சுற்றை எட்டியுள்ளன.
தென்அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவே, கொலம்பியா ஆகிய அணிகளும், வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து மெக்சிகோவும் 2 ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
ஆசிய கண்டத்தில் இருந்து பங்கேற்ற 5 அணிகளில் ஜப்பான் மட்டுமே நொக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆபிரிக்க கண்டத்தில் இருந்து அடியெடுத்து வைத்த 5 அணிகளும் கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் முதல் சுற்றை தாண்டவில்லை.
இந்த நிலையில், லீக் போட்டிகள் அனைத்தும் கடந்த 28 ஆம் திகதி முடிந்த நிலையில், 2 ஆவது சுற்று ஆட்டங்கள் இன்று (30) தொடங்குகின்றன. இதில் இருந்து ‘தோற்கும் அணிகள்’ வெளியேறும் என்பதால் இனிதான் ஒவ்வொரு அணிக்கும் களத்தில் உண்மையான சோதனை காத்திருக்கிறது.
அதாவது இனி வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் சமநிலை வகித்தால் முடிவை அறிய கூடுதல் நேரம் (Extra time) ஒதுக்கப்படும். அதிலும் சமநிலை நீடித்தால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்படும். அதுமாத்திரமின்றி, நொக்-அவுட் சுற்றில் இருந்து புதிய வகை பந்தும் பயன்படுத்தப்படுகிறது.
மிரட்டுவாரா மெஸ்சி?
C குழுவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் அணி, D குழுவில் 2 ஆவது இடத்தைப் பெற்ற ஆர்ஜென்டீனாவுடன் இன்று கசான் நகரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
1978, 1986 ஆம் ஆண்டுகளில் உலக சம்பியனான ஆர்ஜென்டீனா அணி லீக் சுற்றில் மிகப் பெரிய போராட்டத்துக்கு மத்தியில் வெற்றிபெற்று நொக்-அவுட்டில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. இதில் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதன் மூலம் ஐஸ்லாந்துடனான போட்டியை சமநிலையில் முடிக்க நேரிட்ட ஆர்ஜென்டீனா 2 ஆவது லீக் ஆட்டத்தில் 0-3 என்ற கோல்கள் கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியைத் கவ்வியது. ஒரு வழியாக கடைசி லீக்கில் நைஜீரியாவை (2-1) வீழ்த்திய பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இங்கிலாந்திடம் பலத்தை நிரூபித்த பெல்ஜியம்: டியூனீசியாவுக்கு ஆறுதல் வெற்றி
எனவே இறுதி லீக் ஆட்டத்தில் மெஸ்சி கோல் அடித்தது ஆர்ஜென்டீனாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதன்படி, மெஸ்சி, ஏஞ்சல் டி மரியா, மார்கஸ் ரோஜோ ஆகிய மும்மூர்த்திகள் கலக்கினால், பிரான்ஸின் கோட்டையை சுலபமாக உடைத்து விட முடியும்.
1998 ஆம் ஆண்டு சம்பியனான பிரான்ஸ் அணி தனது லீக் சுற்றில் அவுஸ்திரேலியா (2-1), பேரு (1-0) அணிகளை தோற்கடித்து, டென்மார்க்குடன் (0-0) சமநிலையில் முடித்துக் கொண்டது.
லீக் பிரிவில் பிரான்ஸ் அணி பாரிய அளவில் நெருக்கடியை சந்திக்கவில்லை. ஐரோப்பிய கால்பந்து தொடரில் 6 கோல்கள் அடித்து பிரமாதப்படுத்திய கிரிஸ்மன் (Antoine GRIEZMANN) இம்முறை உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. அவரும், போல் போக்பா, பாப்பே, ஒலிவர் ஜீருட்டும் இந்த ஆட்டத்தில் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும்.
இளமையும், அனுபவமும் கலந்த பிரான்ஸ் மனஉறுதி மிக்க அணியாகும். அதனால் ஆர்ஜென்டீனாவுக்கு எல்லா வகையிலும் திறமையைக் காட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். பிரான்ஸ் அணி கடந்த 40 ஆண்டுகளில் தென்அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணிக்கு எதிராக உலகக் கிண்ணப் போட்டியில் தோற்றதில்லை. அந்த பெருமையை தக்கவைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுஎவ்வாறாயினும், முதல் நொக்-அவுட் போட்டியில் ஒரு சம்பியன் அணி வெளியேறுவது உறுதி என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பிரான்ஸ் 2 ஆட்டத்திலும், ஆர்ஜென்டீனா 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் சமநிலையில் முடிந்துள்ளது.
அசத்துவாரா ரொனால்டோ?
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் 2 ஆவது சுற்றில் இரண்டு தடவைகள் உலக சம்பியனான உருகுவே அணி, ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் அணியை எதிர்த்து சோச்சி நகரில் போட்டியிடவுள்ளது.
நடப்பு தொடரில் லீக் சுற்றில் (A பிரிவு) மூன்று ஆட்டங்களிலும் (எகிப்து, சவுதிஅரேபியா, ரஷ்யாவுக்கு எதிராக) ஹெட்ரிக் வெற்றியை ருசித்து ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காத ஒரே அணி உருகுவே தான். லூயிஸ் சுவாரஸும், எடின்சன் கவானியும் அந்த அணியின் இரட்டை தூண்களாக விளங்குகிறார்கள். இந்த வெற்றிப்பயணத்தை நொக்-அவுட் சுற்றிலும் தொடரும் முனைப்புடன் உருகுவே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி லீக் சுற்றில் ஸ்பெயின், ஈரானுடன் சமநிலை கண்டு, மொராக்கோவை தோற்கடித்து B பிரிவில் 2 ஆவது இடத்தை பெற்றது.
இதுவரை காலமும் உலகக் கிண்ணத்தில் அரைஇறுதியை தாண்டாத போர்த்துக்கல் அணி வரலாறு படைக்க வேண்டும் என்றால் ரொனால்டோவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை கட்டாயம் இந்தப் போட்டியில் வெளிப்படுத்த வேண்டும். அவரைத்தான் அந்த அணி முழுமையாக நம்பி இருக்கிறது. அதிலும், லீக் சுற்றில் முடிவில் ரொனால்டோ இதுவரை 4 கோல்கள் அடித்திருப்பது கவனிக்கத்தக்கது.
ரசிகர்களின் தனிப்பட்ட விமர்சனங்களால் ஈரான் கால்பந்து வீரர் சர்தார் ஓய்வு
இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது. இன்னொரு ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது. ஆனால் உலகக் கிண்ணத்தில் இவ்விரு அணிகளும் மோதிக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
லீக் ஆட்டங்களின் முக்கிய பதிவுகள்
நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 48 ஆட்டங்களின் முடிவில், அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஹெரி கேன் (5, இங்கிலாந்து), ரொமேலு லூகாகு (4, பெல்ஜியம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (4, போர்த்துக்கல்) முன்னிலை வகிக்கின்றனர்.
* மொத்தம் 122 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2014 உலகக் கிண்ண லீக் சுற்றில் 136 கோல்கள் அடிக்கப்பட்டது.
* ஹெட்ரிக் கோல் அடித்தவர்கள் ரொனால்டோ (போர்த்துக்கல்), ஹெரி கேன் (இங்கிலாந்து)
* 158 மஞ்சள் அட்டைகளும், 3 சிவப்பு அட்டைகளும் காட்டப்பட்டுள்ளன.
*9 சுய கோல்கள் (ஓன் கோல்)
* 24 பெனால்டி வாய்ப்புக்கள்
* வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட பாஸ்களின் எண்ணிக்கை 36349.
*ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 2.5 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளது.
*நடப்பு சம்பியன் ஜெர்மனி 1938க்குப் பிறகு (80 வருடங்களுக்குப் பிறகு) முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளது.
*H பிரிவில் ஜப்பான், செனகல் அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்ததுடன் தலா 4 கோல் அடித்தும், 4 கோல் விட்டுக்கொடுத்தும் இருந்ததால் மஞ்சள் அட்டைகளின் எண்ணிக்கையில் செனகலை (6) விட குறைவான தவறுகள் செய்திருந்த ஜப்பான் (4) நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது, உலகக் கிண்ண வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க