சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி பகலிரவு ஆட்டமாக பர்படோஸில் நடைபெற்று வருகின்றது. இதில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லஹிரு குமார புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியிருக்கின்றார்.
இலங்கையின் இக்கட்டான நிலையில் உபாதைக்குள்ளாகிய குசல் பெரேரா
இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் லஹிரு குமார, அதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மொத்தமாக 17 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக மாறியிருக்கின்றார். லஹிரு குமார இந்த டெஸ்ட் தொடரில் கைப்பற்றிய மொத்த விக்கெட்டுக்கள், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரினால் வெளிநாடு ஒன்றில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய விக்கெட்டுக்களாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர், 1995 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த சமிந்த வாஸ் மொத்தமாக கைப்பற்றிய 16 விக்கெட்டுக்களே இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் கைப்பற்றிய அதிக விக்கெட்டுக்களாக இருந்தது.
தற்போது சமிந்த வாஸின் பதிவினை முறியடித்திருக்கும் 21 வயதேயான லஹிரு குமார, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுக்களையும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்ததோடு, கடந்த சனிக்கிழமை (23) ஆரம்பான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருக்கின்றார்.
மணிக்கு 145 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்தில் பந்துவீசும் ஆற்றலைக் கொண்டிருக்கும் லஹிரு குமார 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடனான சுற்றுப் பயணம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அறிமுகமாகியிருந்தார்.
இதன் பின்னர் லஹிரு குமார 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும் சிறப்பான பதிவுகளை காட்டியிருந்தார். எனினும், குமார கடந்த ஆண்டு பங்களாதேஷ், இந்திய அணிகளுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடர்களில் நல்ல முறையில் செயற்படாத காரணத்தினால் தேசிய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து, இந்த ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியில் மீண்டும் உள்வாங்கப்பட்ட லஹிரு குமார இரண்டு போட்டிகள் கொண்ட அந்த தொடரில் குறிப்பிடும்படியான ஆட்டத்தினை வெளிக்காட்ட தவறியிருப்பினும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறி, இலங்கை அணி சார்பாக இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் வலம் வருகின்றார்.
போராட்டத்துடன் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடும் இலங்கை அணி
லஹிரு குமாரவோடு சேர்த்து ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களான சுரங்க லக்மால் மற்றும் கசுன் ராஜித ஆகியோரின் இணைந்த செயற்பாட்டினால் மேற்கிந்திய தீவுகளட அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி பெற சவால் குறைந்த 144 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வருகின்ற இலங்கை அணி போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
இன்று நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளுக்கான ஆட்டத்தில், போட்டியில் வெற்றி பெற தேவையாக இருக்கும் 63 ஓட்டங்களை பெற்றால் மாத்திரமே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை இலங்கை அணியினால் 1-1 என சமநிலைப்படுத்த முடியும். இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற களத்தில் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நிற்கும் குசல் மெண்டிஸையும், ஒரு ஓட்டத்துடன் நிற்கும் தில்ருவான் பெரேராவினையும் நம்பியிருக்கின்றது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க