மாகாண ஒருநாள் தொடரில் மேல் மாகாண மத்திய அணி சம்பியன்

265

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் மேல் மாகாண வடக்கு அணியை வீழ்த்தி மேல் மாகாணம் மத்திய அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் தோல்வியுறாத அணிகளான இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக இருந்தது. எனினும் கமில் மிஷாரா மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் சொனால் தினுஷவின் அதிரடி பந்துவீச்சு மூலம் மேல் மாகாணம் மத்திய அணிக்கு சம்பியன் கிண்ணத்தை வெல்ல முடிந்தது.

சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு; அணித்தலைவராக சுரங்க லக்மால்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இன்று (23) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேல் மாகாணம் வடக்கு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மேல் மாகாணம் மத்திய அணி 53 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் 3 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மிஷார மற்றும் சூரியபண்டார 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர்.

இதில் பாணந்துறை மகாநாம கல்லூரியின் கமில் மிஷாரா 72 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் கொழும்பு றோயல் கல்லூரியின் பசிந்து சூரியபண்டார 56 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் மேல் மாகாணம் மத்திய அணி 48.4 ஓவர்களில் 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மேல் மாகாண வடக்கு அணி சார்பாக பந்துவீச்சில் அவிஷ்க தரிந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மஹேஷ் தீக்ஷன மற்றும் ரவிந்து பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண வடக்கு அணி ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஷெஹான் பெர்னாண்டோ கலன பெரேராவின் பந்துக்கு டக் அவுட் ஆனார். இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த அஷான் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சமாஸ் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டு நம்பிக்கை தந்தனர். எனினும் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சமாஸ் 49 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனதோடு, அஷான் பெர்னாண்டோ 34 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இலங்கை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய ரங்கன ஹேரத்தின் காயம்

இதனைத் தொடர்ந்து வந்த மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நின்றுபிடித்து ஆடத் தவறினர். இதனால் மேல் மாகாணம் வடக்கு அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது மேல் மாகாணம் மத்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசிய சொனால் தினுஷ 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்  

மேல் மாகாணம் மத்திய – 224 (48.4) – கமில் மிஷாரா 72, பசிந்து சூரியபண்டார 56, அவிஷ்க பெரேரா 30, அவிஷ்க தரிந்து 3/39, ரவிந்து பெர்னாண்டோ 2/36, மஹேஷ் தீக்ஷன 2/47  

மேல் மாகாணம் வடக்கு – 209/9 (50) – மொஹமட் சமாஸ் 49, அஷான் பெர்னாண்டோ 34, அவிஷ்க தரிந்து 32, ரவிந்து பெர்னாண்டோ 28, சொனால் தினுஷ 4/22, துனித் வெல்லாலகே 2/40

முடிவு – மேல் மாகாணம் மத்திய அணி 16 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<