MCC அணியின் தலைவராக மஹேல ஜயவர்தன

2140
Jayawardene to captain

கிரிக்கெட்டின் தாயகம் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி இன் இணை உறுப்பு நாடுகளான நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு எதிரான T20 முக்கோணத் தொடருக்கான மெல்பார்ன் கிரிக்கெட் கழக (MCC) அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சரின் அழைப்பை நிராகரித்த மஹேல, முரளி, மஹநாம

இலங்கை கிரிக்கெட்டுடன் (SLC) இணைந்து பணியாற்ற..

இலங்கை அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் மஹேல ஜயவர்தன இலங்கை அணி சார்பாக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், 2002 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் லோட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக சதம் கடந்ததன் காரணமாக கௌரவ வீரர்கள் என்ற பெயர் பலகையில் இரண்டு முறை தனது பெயரை பதிவு செய்து கௌரவப் படுத்தப்பட்டுள்ளார். மேலும், மஹேல ஜயவர்தன 2015 ஆம் ஆண்டு MCC இன் உறுப்பினரானார்

இவர் இலங்கை அணி சார்பாக 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49.84 என்ற ஓட்ட சராசரியில் 11,814 ஓட்டங்களையும், 448 ஒரு நாள் போட்டிகளில் 33.37 என்ற ஓட்ட சராசரியில் 12,650 ஓட்டங்களையும், 55 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி 1,493 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். மேலும், இவர் மூன்று வகையான போட்டிகளிலும் இலங்கை அணி சார்பாக 54 சதங்கள் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் பல அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ள இவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் சமர்செட் மற்றும் சசெக்ஸ் அணிகள் சார்பாக T20 போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ளவர்

MCC அணியில், ஸ்கொட்லாந்து அணி வீரர்களான டைலன் பட்ஜ், அலஸ்டைர் இவன்ஸ் மற்றும் மார்க் வொட் ஆகிய மூவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்கள் அண்மையில் இங்கிலாந்து அணிக்கெதிராக தமது முதலாவது வெற்றியை பதிவு செய்த ஒரு நாள் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்காக விளையாடியிருந்தனர்.

மேலும், MCC அணி சார்பாக அபோரிஜினல் அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பட்ஜ் 52 மற்றும் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்

இடது கை சுழல்பந்து வீச்சாளர் வொட், இங்கிலாந்து அணிக்கெதிராக வெற்றி பெற்ற போட்டியில் முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அதேபோல், வலது கை வேகப்பந்து வீச்சாளர் இவன்சும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். மேலும், இவன்ஸ் அதே வாரத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது T20 போட்டியில் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க