ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் புதிய சாதனையுடன் இலங்கைக்கு 4 பதக்கங்கள்

233

ஜப்பானின் கிபு நகரின் நகரகவா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது நாளாள இன்றைய தினம் (08) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன புதிய ஆசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கதைப் பெற்றுக்கொள்ள, சக வீரரான பசிந்து கொடிகார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.  

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு 4 பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு

ஜப்பானின் கிபு நகரின் நகரகவா விளையாட்டரங்கில்….

அத்துடன், பெண்களுக்கான மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தெற்காசிய சாதனை படைத்த டிலிஷி ஷியாமலி குமாரசிங்க, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், தெற்காசியவின் அதிவேக வீராங்கனையான அமாஷா டி சில்வா பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

இதன்படி, இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இலங்கை அணி ஒரு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.

கொழும்பில் கடந்த மே மாதம் நடைபெற்ற தெற்காசிய மெய்வல்லுனர் கனிஷ்ட சம்பியன்ஷிப் தொடரில் ஹெட்ரிக் தங்கப் பதக்கங்களை வென்று தனிநபர் போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்திய இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.79 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய ஆசிய கனிஷ்ட சாதனையுடன், புதிய இலங்கை சாதனையும் படைத்து வரலாற்றில் இடம்பிடித்தார்.

முன்னதாக 1999ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற 8ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கட்டார் வீரர் சலாஹ் ஈ டின் பகரினால் (45.85செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை சுமார் 19 வருடங்களுக்குப் பிறகு அருண தர்ஷன முறியடித்தார்.

அத்துடன், குறித்த போட்டிப் பிரிவில் 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை வீரர் ஒருவர் பதிவுசெய்த அதிசிறந்த நேரப்பெறுதியாகவும் இது இடம்பெற்ற அதேநேரம், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசியாவின் 6ஆவது அதிசிறந்த நேரப்பெறுதியாகவும், உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தரவரிசையில் 8ஆவது அதிசிறந்த நேரப்பெறுதியாகவும் அருண தர்ஷனவின் இன்றைய நேரப்பெறுதி பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

  • images Courtesy - JAAF official Twitter

இலங்கையின் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களில் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள மாத்தளை, அங்குரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷன, இந்த வெற்றியின் மூலம் அடுத்த மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிக்கும் தகுதியினைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், அவருடன் போட்டியிட்ட சக வீரரான பசிந்து கொடிகார, 46.96 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பானின் ஷியுஜி மொறி 47.08 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றியை விட்டுக் கொடுக்காத போராட்ட வீரன் கிந்துஷன்

சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர்……..

இதேவேளை, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் (46.55 செக்), புதிய போட்டி சாதனையுடன் அருண தர்ஷன் தங்கப் பதக்கத்தையும், சக வீரர் பசிந்து கொடிகார, (46.99 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை சிறப்பம்சமாகும். எனவே உலக கனிஷ்ட மெய்வல்லுனருக்கான இலங்கை அணியில் பசிந்து கொடிகாரவும் தனக்கான இடத்தை ஒதுக்கிக் கெண்டார்.

இந்நிலையில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் டிலிஷி ஷியாமலி குமாரசிங்க (54.03) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

எனினும், டிலிஷியுடன் இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்த இந்தியாவின் இளம் வயது ஒலிம்பிக் வீராங்கனையான ஜிஸ்னா மெத்தியூ (53.26 செக்.) தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியுடன் தங்கப் பதக்கத்தையும், சீன தாய்ப்பேயின் ஜிய் யுசான் யாங் (54.74 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

images Courtesy – JAAF official Twitter

அண்மையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் ஹெட்ரிக் தங்கம் வென்று அசத்திய வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி டிலிஷி குமாரசிங்கவும் அடுத்த மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கு ஏற்கனவே தகுதியைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம்

வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத்……….

இதேநேரம், இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமாஷா டி சில்வா, பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். குறித்த போட்டியை 11.71 செக்கன்களில் நிறைவுசெய்த அமாஷா, தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவுசெய்தார்.

அத்துடன், 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனையொருவர் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமாகவும் இது வரலாற்றில் இடம்பிடித்தது.

images Courtesy – JAAF official Twitter

குறித்த போட்டியில் பங்குபற்றிய சீனாவின் லுலு பென்ங் (11.68 செக்.) தங்கப் பதக்கத்தையும், ஜப்பானின் மேய் கொடாமா (11.98 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

35 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 437 வீர, வீரங்கனைகள் பங்குபற்றும் 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 5 வீரர்களும், 7 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது நாளான நாளை தினமும் இலங்கை சார்பாக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் பல வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

இதில் இன்றைய தினம் பதக்கங்களை வென்ற அருண தர்ஷன ஆண்களுனக்கான 200 மீற்றர் அரையிறுதிப் போட்டியிலும், பசிந்து கொடிகார 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திலும், ஹர்ஷ கருணாரத்ன 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ள நிலையில், அருண தர்ஷன தலைமையிலான நான்கு தர 400 அஞ்சலோட்ட அணியினர் தகுதிச் சுற்றுப் போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், பெண்கள் பிரிவில் அமாஷா டி சில்வா 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், டிலிஷி குமாரசிங்க 800 மீற்றர் இறுதிப் போட்டியிலும், பாரமி வசந்தி 3000 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திலும், ரித்மா நிஷாதி நீளம் பாய்தலிலும் இலங்கை சார்பாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<