நெய்மாரின் அபார கோலுடன் பிரேசில் அணிக்கு இலகு வெற்றி

1416
Neymar shines on Brazil
Image Courtesy - AFP

காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய நெய்மாரின் ஆபார கோலின் மூலம் பிரேசில் அணி பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் குரோசிய அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

உலகக் கிண்ணத்திற்காக பயிற்சிக்கு திரும்பியுள்ள நெய்மார்

உலகக் கிண்ணத்தை முன்னிட்டு பிரேசில் அணிக்கு..

மறுபுறம் ஸ்பெயின் அணி கோல்காப்பாளர் டேவிட் டி கீ செய்த மிக அரிதான தவறால் சுவிட்சர்லாந்துடனான நட்புறவுப் போட்டியை அந்த அணிக்கு சமநிலையில் முடித்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

வரும் ஜுன் 14 ஆம் திகதி ரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் 32 அணிகளும் கடைசி கட்ட தயார்படுத்தலாக நட்புறவு பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன. இதில் இங்கிலாந்து லிவர்பூல் நகரில் இருக்கும் அன்பீல்ட் அரங்கில் பிரேசில் அணி ஞாயிற்றுக்கிழமை (03) குரோசியாவை எதிர்கொண்டது.

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் நட்சத்திரமான 26 வயதுடைய நெய்மார் கடந்த பெப்ரவரியில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு அதற்காக சத்திர சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அவர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் நிச்சமற்ற சூழல் நீடித்து வந்தது.

எனினும் குரோசியாவுடனான போட்டியில் களமிறங்கிய நெய்மார், 69 ஆவது நிமிடத்தில் எதிரணியின் இரு பின்கள வீரர்களை முறியடித்து முன்னேறி கோல் கம்பத்தின் குறுக்காக இருந்து பந்தை வேகமாக வலைக்குள் புகுத்தி அபார கோல் ஒன்றை பெற்றார்.   

பின்னர் லிவர்பூல் முன்கள வீரர் ரொபர்டோ பிர்மினோ மேலதிக நேரத்தில் மற்றொரு கோலை புகுத்தி பிரேசில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகக் கிண்ணத்திற்கு முதல் அணியாக தகுதி பெற்ற பிரேசில், உலகக் கிண்ணத்திற்கு முன் வரும் ஞாயிற்றுக்கிழமை (10) கடைசி பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரியாவை எதிர்கொள்ளவுள்ளது. E குழுவில் இடம்பெற்றிருக்கும் பிரேசில் வரும் ஜுன் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்துடனான போட்டியுடன் உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

நெய்மார் பெற்ற இந்த கோலானது அவர் சர்வதேச போட்டிகளில் பெறும் 54 ஆவது கோலாகும். இதன்மூலம் அவர் ரொமாரியோவை விடவும் ஒரு கோல் குறைவாக பெற்று, பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் பீலே 77 கோல்களுடன் முதலிடத்திலும் ரொனால்டோ 62 கோல்களுடன் இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் நெய்மாரின் ஆட்டம் அதிர்ச்சி தருவதாக இருந்ததென பிரேசில் பயிற்சியாளர் டிடே குறிப்பிட்டுள்ளார். அணிக்கு திரும்பிய போட்டி என்பதால் நான் அவரிடம் இதனை விடவும் குறைவாகவே எதிர்பார்த்தேன். அமைதியான திறமையை வெளிப்படுத்தி இருந்தாலே மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் செய்தது உண்மையில் அபாரமானது என்றார்.

இதேவேளை, கடந்த 2014 உலகக் கிண்ண போட்டியில் நடப்புச் சம்பியனாக களமிறங்கி ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறிய ஸ்பெயின் இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்த எதிர்பார்த்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்துடனான பயிற்சிப் போட்டி அந்த அணிக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

ஆஸ்திரியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி

பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகி …

ரியல் சொசிடோ வீரர் அல்வாரோ ஒட்ரியோசோலா 29 ஆவது நிமிடத்தில் கோல் போட்டு ஞாயிறு நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

எனினும் 62 ஆவது நிமிடத்தில் ஸ்டெபன் லிச்ஸ்டைனர் கோல் கம்பத்தை நோக்கி மந்தமாக உதைத்த பந்தை டி கீயால் சரியாக தடுக்க முடியாமல் போக, அவரது கையில் இருந்து நழுவிச் செல்ல ரிகார்டோ ரொட்ரிகஸ் சுவிட்சர்லாந்து அணிக்கு அதனை இலகுவாக கோலாக மாற்றினார். இதனால் போட்டி 1-1 என சமநிலையானது.   

எனினும், ஒரு வாரத்திற்கு முன் சம்பியன்ஸ் லீக் வென்ற ரியெல் மெட்ரிட் அணியைச் சேர்ந்த எந்த வீரரும் உள்ளடக்கப்படாமல் ஒரு சோதனை முயற்சியாகவே ஸ்பெயின் இந்த போட்டியில் களமிறங்கி இருந்தது. ஸ்பெயின் அணி கடந்த 19 போட்டிகளில் தோல்வியுறாத அணியாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.    

ஊக்கமருந்து தடையில் இருந்து விடுதலை பெற்று அணிக்குத் திரும்பிய பெரு அணித்தலைவர் போலோ குவெரேரோ சவூதி அரேபியாவுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இரட்டை கோல்களை பெற, அந்த அணி 3-0 என வெற்றி பெற்றது. பெரு 1982க்கு பின்னரே முதல் முறை உலகக் கிண்ணத்தில் ஆடவிருக்கின்றது. அதோடு சவூதி அரேபியா ஜுன் 14 ஆம் திகதி உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் ரஷ்யாவுடன் விளையாட தயாராகி வருகிறது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<