காலி ஆட்ட நிர்ணய விவகாரம் CID விசாரணைக்கு

924

இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜெஸீரா தொலைக்காட்சி நேற்று (27) மாலை ஒளிபரப்புச் செய்தது.

இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பணத்திற்காக ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்டு இருப்பதாக அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறும் அல்-ஜெசீரா

இரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட..

இந்நிலையில், அல்ஜெஸீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய ஆவணப் படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது.  

அத்துடன் இந்த ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்ட அனைவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் எவராக இருந்தாலும், தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி பணத்துக்காக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அல்ஜெஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களை அறியக்கிடைத்தமை மிகவும் வேதனையளிக்கின்றது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேசிக்கின்ற கிரிக்கெட் விளையாட்டில் இதுபோன்ற விடயங்களுக்கு இடமளிக்கக் கூடாது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆடுகளத்தை மாற்றி ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பிலான விசாரணைகள் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று இரவு அவசரமாகக் கூடியது.  

இதன்போது, ஆட்ட நிர்ண சதி தொடர்பிலான விசாரணைகளை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் எயார் கொமடோர் ரொஷான் பியன்வல மற்றும் பிரசன்ன வீரக்கொடி ஆகியோர் அந்தக் குழுவில் அடங்குகின்றனர். இதன்படி, ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷீத் கானை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் : ஆப்கான் அதிபர்

ஏபி.டி.வில்லியர்ஸாக சில நிமிடங்கள் மாறிய ரஷீத்..

இதேவேளை, பணத்திற்காக ஆடுகளத்தின் தன்மையை மாற்றி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அல்ஜெஸீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்ப வழங்க முன்வர வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஊழல் எதிர்ப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்சல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் க்டோபர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர்கள் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தரிந்து மெண்டிஸ் ஆகியோர் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு மும்பையைச் சேர்ந்த முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரர் றொபின் மொறிஸ் என்பவரின் உதவியை இதற்காகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதில், கிரிக்கெட் வீரராகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய மாவட்ட அணிக்கு பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்ற தரிந்து மெண்டிஸ், இந்த ஆட்ட நிர்ணயத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவர் 2016/2017 பருவகாலத்தில் சோனகர் கழகத்துக்காக விளையாடியுள்ளதுடன், 2017இல் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜீவன்த குலதுங்க மற்றும் தில்ஹார லொகுஹெட்டிகே ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது போன்று கலந்துரையாடுகின்ற காணொளியையும் அல்ஜெஸீரா வெளியிட்டது.

இதில், ஜீவன்த குலதுங்க இலங்கைக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன், சகலதுறை ஆட்டக்காரரான தில்ஹார லொகுஹெட்டிகே கடந்த 2016ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

இதேவேளை, குறித்த ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்ட வீரர்கள் நால்வரும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக ஐ.பி.எல் கிண்ணத்தை வென்ற சாதனையை சமன் செய்தது சென்னை

ஷேன் வொட்சன் 57 பந்துகளில் ஆட்டமிழக்காது பெற்ற 117..

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

  1. அல்ஜெஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் படி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி பணத்துக்காக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தல்.
  2. இந்த சம்பவம் தொடர்பில் .சி.சியினால் விசாரணை செய்யப்படும் அனைவரையும் உடன் அமுலுக்கும் வரும் வகையில் பணிநீக்கம் செய்தல்.
  3. .சி.சியினால் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஆதரவை வழங்குதல்.
  4. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை வழங்குவதற்கு மொஹான் டி சில்வா, செயலாளர் எயார் கொமடோர் ரொஷான் பியன்வல மற்றும் பிரசன்ன வீரக்கொடி ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய குழு நியமித்தல்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<