16ஆவது தடவையாகவும் களம்காணும் விஜயபாகு மோட்டார் சைக்கிள் பந்தயம்

181

இலங்கையில் இடம்பெறுகின்ற முக்கியமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் முதலிடத்தை வகிக்கின்ற விஜயபாகு மோட்டர் க்ரொஸ் – 2018 (Vijayabahu Motocross) போட்டிகள் எதிர்வரும் ஜுன் மாதம் 17ஆம் திகதி குருநாகல் விஜயபாகு படைப் பிரிவு தலைமையகத்தில் உள்ள போயகனே ஓடுபாதையில் நடைபெறவுள்ளது.

இலங்கை மோட்டார் சைக்கிள் சம்மேளனத்துடன் இணைந்து 16ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முறை போட்டித் தொடரில் 100 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளதுடன், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி மோட்டார் சைக்கிளோட்ட வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

டி வில்லியர்ஸ் நான் பார்த்த வீரர்களில் சிறந்த ஒருவர் – மஹேல ஜயவர்தன

அத்துடன், இலங்கையின் சிறந்த மோட்டார் சைக்கிளோட்டியைத் தெரிவு செய்வதற்காக இடம்பெறுகின்ற இப்போட்டிகள் கடந்த 2000ஆம் ஆண்டு முதற்தடவையாக நடைபெற்றது. இலங்கையில் நிலவிய முப்பது வருட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற விஜயபாகு படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலன்புரி மற்றும் பாடசாலை உள்ளிட்ட பொது அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தப் போட்டித் தொடர் வருடா வருடம் நடத்தப்பட்டு வருகின்றது.

இதேநேரம், இம்முறைப் போட்டித் தொடரில் 13 வகையான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், 10 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்காக 50 சீசீ முதல் 65 சீசீ பிரிவு மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி முதற்தடவையாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்த போட்டிகளுக்குப் பிறகு சிறந்த உயரத்தைப் பதிவு செய்கின்ற மோட்டர் சைக்கிளோட்டிக்கான விசேட விருதும் இம்முறை போட்டிகளில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழமைப் போன்று இவ்வருடப் போட்டிகளிலும் இஷான் தசநாயக்க, இவோன் பி குருசிங்க, சமீர பிரேமரத்ன மற்றும் நிஹால் விஜேரத்ன போன்ற வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இம்முறை போட்டித் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (25) வெள்ளவத்தையில் உள்ள மிராஜ் ஹோட்டலில் இடம்பெற்றது,

இதில் கலந்துகொண்டு விஜயபாகு படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியரவன கருத்து வெளியிடுகையில்,

”இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் விஜயபாகு மோட்டார் க்ரொஸ் முக்கிய இடத்தை வகிக்கின்றது. உள்ளுர் மற்றும் சர்வதேச வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இப்போட்டிகள் வீரர்களுக்கு மாத்திரமல்லாது உள்ளுர் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதுமாத்திரமின்றி சர்வதேச தரத்தைக் கொண்ட மிகவும் அழகான ஓடுபாதையில் நடைபெறுகின்ற இப்போட்டிகள் மூலம் எமது வீரர்களுக்கு மேலும் மேலும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும், இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு தொடர்பில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தவும் முடியும் என கருதுகிறோம்” என்றார்.

ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்ட மஹேல ஜயவர்தன

இந்நிலையில், இலங்கை மோட்டார் சைக்கிள் சம்மேளனத்தின் தலைவர் உபாலி தசநாயக்க கருத்து தெரிவிக்கையில், ”எமது சம்மேளனம் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் போட்டிகளை நடாத்தி வருகின்றோம். ஏனைய போட்டிகளுடன் ஒப்பிடும் போது வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இப்போட்டிகளின் போது மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கின்ற அதேநேரம், யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற விஜயபாகு படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலன்புரிகளுக்காக இதன் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்கனை முன்னெடுத்து வருகின்றது. உண்மையில் இதனை நாம் பாராட்டுகின்றோம். எனவே இம்முறை போட்டிகளையும் சிறப்பாக நடத்துவதற்கு எமது சம்மேளனத்தினால் அனைத்து வகையான ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயார்” என தெரிவித்தார்

இதேவேளை, விஜயபாகு மோட்டர் க்ரொஸ் – 2018 போட்டித் தொடரின் பிரதான அனுசரணையாளராக TVS லங்கா தனியார் நிறுவனம், ஹட்சன் நிறுவனம், ஏசர் மார்கடிங் நிறுவனம், இலங்கை காப்புறுதி (ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ்) நிறுவனம், சியெட் களனி இன்டெர்நெஷனல் டயர் நிறுவனம், MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல அனுசரணை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<