டி வில்லியர்ஸ் நான் பார்த்த வீரர்களில் சிறந்த ஒருவர் – மஹேல ஜயவர்தன

1405

கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர்களான அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகிய இருவரும் பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி ஒரு வருட போட்டித் தடையைப் பெற்றுக் கொண்டது இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முதல் சம்பவமாக மாறியிருந்தது. இதனையடுத்து இரண்டாவது அதிர்ச்சி சம்பவமாக தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபி.டி. வில்லியர்சின் ஓய்வு அமைகின்றது.

தனது வித்தியாசமான துடுப்பாட்ட பாணியை கருத்திற் கொண்டு டி வில்லியர்ஸ் Mr. 360 என செல்லமாக அனைவரினாலும் அழைக்கப்படுகின்றார். 34 வயதான டி வில்லியர்சின் ஓய்வு குறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் (Twitter) பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் நட்சத்திரங்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

இப்படியாக டி வில்லியர்சின் ஓய்வு பற்றி ட்விட்டரில் சில கிரிக்கெட் பிரபலங்கள் கூறிய விடயங்கள் பற்றி பார்ப்போம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த ஏபி.டி.வில்லியர்ஸ்

டி வில்லியர்சின் துடுப்பாட்டத்திற்கு உலகம் பூராகவும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு எமது தாய் நாடான இலங்கையும் விதிவிலக்கல்ல.

எதிரணி பந்துவீச்சாளர்கள் யாராக இருந்த போதிலும் அவர்களை துவம்சம் செய்யும் ஆற்றல் கொண்ட டி வில்லியர்ஸ் பற்றி  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன “நான் பார்த்த சிறந்த வீரர்களில் ஒருவர்“ என்று கூறியிருக்கின்றார். மறுமுனையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், ”டி வில்லியர்ஸ் சிறந்த பொழுதுபோக்கைத் தரக்கூடியவர் என்றும் அழகிய உள்ளம் கொண்ட மனிதர்” எனவும் தெரிவித்திருக்கின்றார்.

குமார் சங்கக்கார டி வில்லியர்ஸ் பற்றி குறிப்படும் போது, கிரிக்கெட் ஆற்றலும் தடகள வீரர் ஒருவருக்குரிய ஆற்றலும் உயர்தரமான அளவில் ஒன்று சேர்வதை டி வில்லியர்சின் துடுப்பாட்டத்தில் பார்க்க முடியும் எனக் கூறியிருந்தார்.

இவர்கள் தவிர இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன, உபுல் தரங்க, லஹிரு திரிமான்ன போன்றோரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதில் திரிமான்ன  நவீன கிரிக்கெட் உலகில் இருக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் எனக் கூறியிருந்தார்.

கிரிக்கெட் உலகில் பிரபலமான துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாடும் முறையைப் பார்த்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே ஓட்டங்கள் பெறுவதில் வலிமையாக இருப்பார்கள். ஆனால், டி வில்லியர்ஸ் தான் எதிர்கொள்ளும் பந்துகளை ஆடுகளத்தின் எந்த திசையிலும் பெளண்டரிகளாக மாற்றும் ஆற்றலை தன்னகத்தே வைத்திருக்கின்றார். இதனாலேயே கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு Mr.360 என புனைப்பெயர் ஒன்றை வைத்திருக்கின்றனர். இந்த புனைப்பெயரோடு தொடர்புபடுத்தி இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் டி வில்லியர்சின் ஓய்வு பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கின்றார்.

“டி வில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிகள் போன்று 360 பாகை வெற்றியை கிரிக்கெட்டுக்கு வெளியிலும் பெற வேண்டும்“

சச்சினின் கருத்தோடு கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேலான கிரிக்கெட் ரசிகர்களை கொண்டிருக்கும் இந்தியாவின், கிரிக்கெட் நிபுணரும் வர்ணனையாளர்களில் ஒருவருமான ஹர்ஷ போக்லே, டி வில்லியர்சின் ஓய்வு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அடுத்த உலகக் கிண்ணம் வரை அவர் தென்னாபிரிக்க அணிக்கு விளையாட எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்ட மஹேல ஜயவர்தன

மறுமுனையில், டி வில்லியர்ஸ் போன்று அதிரடியாக துடுப்பாடும் இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான விரேந்திர ஷேவாக் டி வில்லியர்சின் ஓய்வுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் வறுமை அடைந்துவிட்டது என்றார்.

ஒரு நாள் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் (16) விளாசிய உலக சாதனை ஏபி. டி. வில்லயர்சிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. இந்த சாதனையை டி வில்லியர்ஸ் உடன் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயிலும், இந்திய அணியின் ரோஹித் சர்மாவும் சமநிலை செய்திருக்கின்றனர். இதில் டி வில்லியர்சின் ஓய்வு பற்றி கருத்து வெளியிட்டிருந்த ரோஹித் சர்மா டி வில்லியர்சின் கிரிக்கெட் விளையாட்டு போன்று அவரது வாழ்க்கையும் சிறப்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவரான மைக்கல் வோகன் டி வில்லியர்ஸ் ஓய்வு பெறுவது, கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த அவமானங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.   மறுமுனையில், இங்கிலாந்து அணியில் தற்போது சகலதுறை வீரராக ஆடி வரும் மொயின் அலி, டி வில்லியர்ஸ் கிரிக்கெட் விளையாட்டில் உருவான சிறந்த ஒருவர் என வாழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து அணியுடன் ஆஷஸ் போட்டிகளில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கிரிஸ் லின், பிக் பாஸ் லீக் போட்டிகளில் தனது அணியான பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு மூன்றாவது துடுப்பாட்ட வீரராக விளையாட டி வில்லியர்சை அழைத்திருந்தார்.  எனினும், டி வில்லியர்ஸ் தனது ஓய்வுச் செய்தியை அறிவிக்கின்ற போது வெளிநாட்டு போட்டிகள் எவற்றிலும் விளையாட திட்டம் வைத்திருக்கவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் லின் தவிர டேவிட் வோர்னர், மைக் ஹஸ்ஸி போன்ற வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை டி வில்லியர்ஸிற்கு தெரிவித்திருந்தனர்.

T20 சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ப்ரென்டன் மெக்கலம், டி வில்லியர்ஸின் அடுத்த கட்டமும் அவரது இறுதிக்கட்டம் போன்று சிறப்பாக அமையும் என எதிர்வு கூறியிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான மொஹமட் ஹபீஸ், கிரிக்கெட் விளையாட்டில் இருக்கின்ற கடினமான போட்டியாளர்களில் டி வில்லியர்சும் ஒருவர் எனக் கூறியிருந்ததோடு டி வில்லியர்ஸ் உடைய எதிர்காலத் திட்டங்களும் சிறப்பாக அமைய வாழ்த்தியிருந்தார்.

டி வில்லியர்சின் ஓய்வு பற்றி அவரது சக அணி உறுப்பினர்களும் கருத்துக்களை கூறியிருந்தனர். இதில்  முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மார்க் பெளச்சர் “எனக்கு இந்த இளம் நபர் தென்னாபிரிக்க அணிக்கு விளையாடிய முதல் நாளிலிருந்து தெரியும். இன்று அவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்குமாறு மாறியிருக்கின்றார்.  அவர் இந்த நாட்டுக்காகவும், அவரது சக அணி வீரர்களுக்காகவும், கிரிக்கெட் ரசிகர்களுக்காகவும் செய்த விடயங்களுக்கு நன்றி“ என வாழ்த்தியிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான அல்பி மோர்க்கல், கிரிக்கெட் விளையாட்டில் சாதித்து முடித்திருக்கும் அவர் இதைவிட கடினமான ஒன்றை தேடிப்போய் அதிலும் சாதிக்க வாழ்த்தியிருந்தார்.

அத்துடன் ஹஷிம் அம்லாவும் டி வில்லியர்சின் எதிர்காலத் திட்டங்கள் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

டி வில்லியர்ஸ் உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் தனது ஓய்வை அறிவித்திருப்பது அவர் இலங்கை அணியுடன் இந்த ஆண்டு இடம்பெறும் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் விளையாடமாட்டார் என்பதை உறுதி செய்கின்றது. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தமான விடயங்களில் ஒன்றாக இருக்கின்றது.

கிரிக்கெட் உலகில் கடந்த 14 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய டி வில்லியர்ஸிற்கு நாமும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<