ஜப்பானிய அணியில் இணையும் பார்சிலோனா ஜாம்பவான் இனியஸ்டா

509

பார்சிலோனா கால்பந்து கழகத்தின் ஜாம்பவான் அன்ட்ரெஸ் இனியஸ்டா ஜப்பானின் முன்னணி கால்பந்து கழகமான விசெல் கோபேயின் உரிமையாளரான தனது நண்பர் ஹிரோஷி மிகிடானியுடன் தனது ‘புதிய இல்லத்தை’ நோக்கி பயணிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த பருவத்துடன் பார்சிலோனாவிலிருந்து விடைபெறும் இன்னியஸ்டா

பார்சிலோனா கால்பந்து ஜாம்பவான் அன்ட்ரெஸ்……

தனியார் விமானம் ஒன்றில் இனியஸ்டாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை மிகிடானி டுவிட்டரில் வெளியிட்டிருப்பதோடு, இனியஸ்டாவும் விமானத்திற்குள் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

34 வயதுடைய இனியஸ்டா ஸ்பெயினின் பலம்மிக்க கழகத்துடனான தனது 22 ஆண்டு கால்பந்து வாழ்வை இந்த பருவத்துடன் முடித்துக் கொண்டார். தனது 12 வயதில் பார்சிலோனாவின் கனிஷ்ட அணியுடன் இணைந்த இனியஸ்டா அந்த அணிக்காக 674 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் பார்சிலோனாவுக்காக 22 பிரதான கிண்ணங்களை வென்றுள்ள பெருமைக்குறிய வீரராவார்.

ஸ்பெயின் தேசிய அணிக்கு ஆடும் அவர் பார்சிலோனா அணிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) லா லிகா தொடரின் கடைசி போட்டியில் ரியெல் சொசிடாட் அணிக்கு எதிராக ஆடினார். அதில் பார்சிலோனா 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இனிஸ்டாவுக்கு சிறப்பான பிரியாவிடையும் அளிக்கப்பட்டது. கேம்ப் நூவில் இனியஸ்டாவுக்கு கடந்த வாரம் மிகப்பெரிய பிரியாவிடை அளிக்கப்பட்டபோது அதில் அவர் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டார்.

‘இந்த இறுதி மணி நேரங்கள் எளிதில் கடக்க முடியாத ஒன்றாக உள்ளது, இதனை ஏற்க முடியவில்லை. பார்சிலோனாவை விட்டுச் செல்லும் நாள் வரும் என்பதை நினைத்துப் பார்க்காமலேயே வாழ்ந்துள்ளதால் இந்தத் தருணம் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது’ என்று அந்த பிரியாவிடை நிகழ்வில் இனியஸ்டா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் கொபே அணியில் முன்னாள் ஆர்சனல் மற்றும் ஜெர்மனி முன்கள வீரர் லூகாஸ் பொடொல்ஸ்கியுடன் இணையவுள்ளார்.

விசெல் கோபே கழகம் ஜப்பானின் பிரதான தொழில்சார் கால்பந்து லீக்கான ஜே-லீக் தொடரில் 15 போட்டிகள் முடிவில் 6 ஆவது இடத்தில் இருப்பதோடு கடந்த பருவத்தில் அந்த அணி 9 ஆவது இடத்தையே பிடித்தது.

நெதர்லாந்துக்கு எதிரான 2010 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி கோலை பெற்ற இனியஸ்டா, அடுத்த மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத்திற்கான ஸ்பெயின் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<