இந்திய கிரிக்கெட் சபையின் அழைப்பை நிராகரித்த சங்கக்கார

1481

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மன்சூர் அலி கான் பட்டௌடி (MAK Pataudi) வருடாந்த சொற்பொழிவை தன்னால் ஆற்ற முடியாதென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் போட்டிகளுக்கு தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

இந்த ஆண்டின் கோடைகாலத்தில் …

இந்தியாவின் பெங்களூரில் எதிர்வரும் ஜுன் மாதம் 2ஆவது வாரத்தில் பட்டௌடி சொற்பொழிவு நடைபெறவுள்ளது. குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இதில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேவையில் நேர்முக வர்ணனைக்காக சங்கக்கார ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே, குறித்த சொற்பொழிவை ஆற்றுவதற்கு தன்னால் முடியாதென சங்கக்கார இந்திய கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக, பட்டௌடி சொற்பொழிவாற்றுவதற்கு சங்கக்காரவைத் தவிர, நஸார் ஹுசைன், கெவின் பீட்டர்சன் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோரது பெயர்களையும் இந்திய கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது. எனினும், நஸார் ஹுசைனும் குறித்த காலப்பகுதியில் நேர்முக வர்ணனையில் ஈடுபடவுள்ளதால், அவரும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பட்டௌடி சொற்பொழிவுக்கு யாரை அழைப்பது என்பது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது குமார் சங்கக்கார, நஸார் ஹுசைன் ஆகியோரது பெயர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என இந்திய கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் அமிதாப் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இம்முறை பட்டௌடி சொற்பொழிவுக்கு மூன்று தலைப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் ஊடாக சமாதானம் மற்றும் நிலைத்திருந்தல், தற்கால சர்வதேச வீரர்களின் நடத்தையும் ஒழுக்கமும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக சேர்ப்பது உள்ளிட்டவை முக்கிய விடயங்களாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இம்முறை பட்டௌடி வருடாந்த சொற்பொழிவுக்கு யாரை அழைப்பது என்பது குறித்து தற்பொழுது இந்திய கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த தலைவர்களுள் ஒருவரான மன்சூர் அலி கான் பட்டௌடி, 1961ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்று இந்தியாவுக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதேநேரம், தனது 21ஆவது வயதில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற அவர், அவ்வணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி 9 வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அது மாத்திரமின்றி வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த (1967 நியூஸிலாந்துக்கு எதிராக) தலைவராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்திருந்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…