காயத்திலிருந்து மீண்டு வரும் நெய்மார் பிரேசில் உலகக் கிண்ண குழாமில்

950

காயத்தில் இருந்து மீண்டு வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழக அணியின் முன்னணி முன்கள வீரர் நெய்மார், அடுத்த மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான பிரேசிலின் 23 பேர் கொண்ட குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.  

நேற்று (14) அறிவிக்கப்பட்ட பிரேசில் உலகக் கிண்ண குழாமில், காயம் காரணமாக உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாமல் போன பின்கள வீரர் டானி அல்வேஸுக்கு பதில் டனிலோ மற்றும் பக்னர் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த குழாத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன.

அல்வேஸின் இழப்பால் உலகக் கிண்ண பிரேசில் அணிக்கு மற்றொரு நெருக்கடி

பிரேசில் கால்பந்து அணியின் பின்கள வீரரான டானி அல்வேஸ் பிரான்ஸ் சம்பியன் பாரிஸ் …

ரஷ்யா செல்லும் பிரேசில் அணியில் எதிர்பாராத முடிவுகளாக உக்ரைனின் ஷக்டர் டொனெட்ஸ் கழகத்திற்கு ஆடும் மத்தியகள வீரர் பிரெட் மற்றும் முன்கள வீரர் டைசன் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.    

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் வலது காலில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட நெய்மார், அடுத்த வாரம் டெரெசோபெலிஸில் ஆரம்பமாகவிருக்கும் பிரேசில் அணியின் பயிற்சி முகாமுக்கு உடல் தகுதி பெறுவார் என பிரேசில் கால்பந்து சம்மேளனத்தின் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரேசில் அணி இந்த பயிற்சி முகாமுடன் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ண தயார்படுத்தல்களை தொடங்கவிருப்பதோடு அந்த அணி லிவர்பூலில் ஜுன் 3 ஆம் திகதி குரோசியாவுடன் நட்புறவு போட்டி ஒன்றில் ஆடவுள்ளது.  

ரியோ டி ஜெனிரோ நகரில் செய்தியாளர்களை சந்தித்த பிரேசில் மருத்துவர் ரொட்ரிகோ லஸ்மார், நெய்மார் மீது இடம்பெற்ற வார இறுதி மருத்துவ சோதனையில் அவர் நல்ல நிலையில் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மீண்டும் வருவதற்கான இறுதிக்கட்டமாக இது உள்ளது. அவரால் விரைவில் பயிற்சி முகாமுக்கு செல்ல முடியும் என்பதோடு நட்புறவு போட்டியிலும் ஆட முடியும் என்று லஸ்மார் கூறினார்.   

நெய்மார் உலகின் மூன்று முன்னணி வீரர்களில் ஒருவர் என்றபோதும் பிரேசில் அணி அவரில் மாத்திரம் தங்கியில்லை என்று பயிற்சியாளர் டைடே தெரிவித்தார்.    நெய்மார் சிறப்பாக செயற்பட்டால் நாம் மேலும் நன்றாக ஆடுவோம். என்றாலும் அணியின் ஏனைய வீரர்களும் நன்றாக ஆட வேண்டும் என்றார்.

காயமடைந்துள்ள நெய்மார் உலகக் கிண்ணத்தில் ஆடுவதில் நெருக்கடி

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மார் JR இற்கு …

வரும் ஜுன் 14ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பிரேசில் அணி, கொஸ்டாரிக்கா, செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் இடம்பெற்றிருக்கும் E குழுவில் ஆரம்ப சுற்றில் மோதவுள்ளது. அந்த அணி தனது முதல் போட்டியில் ஜுன் 17ஆம் திகதி சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தும்.

பிரேசில் குழாம்

கோல் காப்பாளர்கள்:

அலிசன் (ரோமா), எடர்சன் (மன்செஸ்டர் சிட்டி) , கசியோ (கொரின்தியன்ஸ்).

பின்கள வீரர்கள்:

டானிலோ (மன்செஸ்டர் சிட்டி), பக்னர் (கொரின்தியன்ஸ்), மார்சலோ (ரியெல் மெட்ரிட்), பிலிப்பே லுயிஸ் (அட்லெடிகோ மெட்ரிட்), தியாகோ சில்வா, மார்கின்ஹோஸ் (இருவரும் PSG), மிரண்டா (இன்டர் மிலான்), பெட்ரோ ஜெரோமல் (க்ரெமியோ).

மத்தியகள வீரர்கள்:

கசெமிரோ (ரியெல் மெட்ரிட்), பெர்னான்டின்ஹோ (மன்செஸ்டர் சிட்டி), போலின்ஹோ (பார்சிலோனா), பிரெட் (ஷக்டர் டொனெட்ஸ்), ரெனாடோ அகஸ்டோ (பீஜிங் குவான்), பிலிப்பே கொடின்ஹோ (பார்சிலோனா), வில்லியன் (செல்சி), டக்லஸ் கொஸ்டா (ஜுவென்டஸ்).   

முன்கள வீரர்கள்:

நெய்மார் (PSG), டய்சோன் (ஷக்டர் டொனெட்ஸ்), கப்ரியல் ஜேசுஸ் (மன்செஸ்டர் சிட்டி), ரொபர்டோ பெர்மினோ (லிவர்பூல்).

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…