ஹேரத், லக்மால் ஆகியோர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே

561
Suranga Lakmal, Rangana Herath

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை அணியானது அடுத்த மாதம் அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (மேற்கிந்திய தீவுகளுடன்) விளையாடவுள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணியின் நட்சத்திர சுழல் வீரரான ரங்கன ஹேரத் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி, ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பார்படோஸ் நகரில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருக்கும் இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர்களில் ஒருவரான ஹேரத்திற்கு தற்போது 40 வயதாகின்றது. மிக முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் அவரை இன்னும் சில காலத்திற்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட வைக்கும் முயற்சி ஒன்றின் அடிப்படையிலேயே இப்படியான ஒரு செயற்றிட்டம் மூலம், ஒரு போட்டியில் ஓய்வினை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்மானம் மேற்கொண்டிருக்கின்றது. அதோடு இந்த செயற்திட்டம் இலங்கை கிரிக்கெட் சபையினால் கடந்த ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

“ரங்கன ஹேரத் (இத் தொடரில்) இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார். அவர் இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் பின்னர் அடுத்ததாக எந்த டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாட வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்போம். எமது கணிப்பின்படி அவர் இத் தொடரில் இளம்சிவப்பு பந்து பயன்படும் டெஸ்ட் (பகலிரவு) போட்டியில் விளையாடமாட்டார். ஏனெனில் குறித்த போட்டிக்காக எம்மிடம் நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். டெஸ்ட் போட்டி ஒன்று நடைபெறும் போது, ஹேரத்திற்கு கிட்டத்தட்ட 30 ஓவர்களை வீச வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இது அவருக்கு உண்மையில் கடினமான விடயம். எனவே, நாங்கள் அவரை சிறப்பாக முகாமை செய்ய எதிர்பார்க்கின்றோம் என இலங்கை அணியின் சிரேஷ்ட தேர்வாளர் கிரேம் லப்ரோய் ஹேரத்திற்கு ஒரு போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட வேண்டிய அவசியத்தினை விளக்கியிருந்தார்.

ஹேரத் போன்று வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலும், இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது. இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழும் லக்மால், காயம் காரணமாக மாகாண ரீதியில் இடம்பெற்ற முதல்தர கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காமல் போயிருந்தார். இந்நிலையில், லக்மாலை மேலும் காயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனேயே அவரை இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாட வைப்பதாக இலங்கை அணியின் தேர்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

“லக்மாலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதையே எதிர்பார்க்க முடியும். இப்படியான சில விசேட சந்தர்ப்பங்களை கருதியே நாங்கள் 17 பேர் கொண்ட இலங்கை குழாத்தினை மேற்கிந்திய தீவுகளுக்கு அழைத்துச் செல்கின்றோம்  இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மேலதிகமாக உள்ளடக்கியதும் இளம்சிவப்பு பந்து பயன்படும் பகலிரவு டெஸ்ட் போட்டியினை நினைவில் வைத்தே. “ என லப்ரோய் மேலும் கூறியிருந்தார்.

பந்துவீச்சாளர்கள் தவிர இலங்கை அணி, கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 1,000  இற்கு மேற்பட்ட ஓட்டங்கள் குவித்த திமுத் கருணாரத்ன இல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இப்படியாக திமுத் கருணாரத்ன அணியில் உள்வாங்கப்படாது போனமை ஒரு கவலையான விடயம் எனவும் லப்ரோய் குறிப்பிட்டிருந்தார். இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கருணாரத்ன அண்மையில் தனது இடது சுட்டு விரலில் உபாதைக்கு உள்ளாகியமைகுறிப்பிடத்தக்கது. கருணாரத்னவினை பரிசோதித்த வைத்தியர்கள் அவரினால் சென்.லூசியா நகரில் இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாட முடியும் எனக் கூறியிருந்த போதிலும், இலங்கை அணியின் தேர்வாளர்கள் கருணாரத்னவுக்கு மேலும் அழுத்தங்கள் உருவாக வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால் அவரினை இந்த டெஸ்ட் தொடரில் உள்வாங்கவில்லை.

“திமுத் கருணாரத்னவினை அணியில் அழைப்பது ஒரு ஆபத்தான விடயம். அவரினை பரிசோதித்த மருத்துவக் குழு அவரினால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் எனக் கூறியிருந்தனர். அப்போது இரண்டாம் போட்டிக்கு ஆறு வாரங்களே எஞ்சியிருந்தன. குறிப்பிட்ட காலப்பகுதியில் அவரினால் சிறிதளவு பயிற்சியினையே பெற்றுக் கொள்ள முடியும். எனவே, நாங்கள் அவரினை போட்டு அவசரப்படுத்தவில்லை. எங்களுக்கு அவர் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கு புதிய ஒருவராக வந்தால் போதும்.“ என லப்ரோய் கருணாரத்ன பற்றிகூறியிருந்தார்.

த்ரில் ஆட்டத்தில் வெற்றிக்கு உதவிய உபுல் தரங்கவின் சதம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் மாகாண மட்ட ‘சுப்பர் ப்ரொவின்சியல்’

மறுமுனையில் இந்த டெஸ்ட் தொடரின் மூலம் அஞ்சலோ மெதிவ்ஸ் அணிக்கு திரும்பி இருந்தாலும், அவரின் உடற்தகுதியினை சுரங்க லக்மாலோடு சேர்த்து பரிசோதிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனினும், இந்த உடற்தகுதி பரிசோதனைகள் கிரமமான முறையில் இடம்பெற்று வருவதாக லப்ரோய் கூறியிருந்தார்.

“ அவர்கள் (மெதிவ்ஸ் & லக்மால்) சரியான உடற்தகுதியில் உள்ளனர். எனினும், நாங்கள் அவர்களை போட்டிகளின் நிலைமைகளுக்கு ஏற்றவாறு இருக்கின்றனரா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் சில ஒரு நாள் போட்டிகளினைத் தவிர கடந்த மாதங்களில் போட்டிகள் எதிலும் விளையாடியிருக்கவில்லை. கண்டியில் வைத்து நாங்கள் போட்டிகளுக்கான நிலைமைகளை உருவாக்கி அது வர்களுக்கு பொருத்தமாக உள்ளதாக என்பதைப் பார்க்கவிருக்கின்றோம். அதனை வெற்றிகரமாக இவர்கள் தாண்டுவார்கள் எனில், பிரச்சினைகள் எதுவும் இல்லை. “