விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கெரம் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மேல் மாகாணத்தின் நிஷாந்த பெர்னாண்டோவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் சப்கரமுவ மாகாணத்தைச் சேர்ந்த யஷிகா ராஹுபத்தவும் அதி சிறந்த வீரராகத் தெரிவாகினார்.
கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா கெரம் போட்டிகளில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 90 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் இலங்கையின் தேசிய கெரம் சம்பியனும், உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டிகளின் முன்னாள் சம்பியனுமான நிஷாந்த பெர்னாண்டோ, சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.
கீர்த்திகன் கூடைப்பந்து தொடரில் சம்பியன்களாக ஏஞ்சல், இந்துக் கல்லூரி அணிகள்
குறித்த போட்டியில் நிஷாந்தவுடன், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அனஸ் அஹமட் போட்டியிட்டிருந்தார். எனினும், போட்டி முழுவதும் தனது அனுபவமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிஷாந்த, எதிர் தரப்பு வீரரான அனஸுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்கமால் தொடர்ச்சியாக அனைத்து காய்களையும் ஒரே சந்தர்ப்பத்தில் நகர்த்தி வெற்றியையும் தனதாக்கிக் கொண்டார்.
இதன்படி, 09/18, 25/17, 22/21 என்ற செட் அடிப்படையில் வெற்றி பெற்ற நிஷாந்த பெர்னாண்டோ இம்முறை போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், அனஸ் அஹமட் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சப்கரமுவ மாகாணத்தைச் சேர்ந்த யஷிகா ராஹுபத்தவும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் ரொஷிடாவும் போட்டியிட்டனர். இதில் 20/24, 25/03, 24/08 என்ற செட் கணக்கில் யஷிகா ராஹுபத்த தங்கப் பதக்கம் வென்றதுடன், அதி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.
இதேநேரம், குறித்த போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த கே. கேஷஜனி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேநேரம், ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவுகளில் மேல் மாகாணம் சம்பியனாகியதுடன், ஆடவர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடத்தை வடமேல் மாகாணமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடத்தை சப்ரகமுவ மாகாணமும் பெற்றுக்கொண்டன.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஈ. திஷாந்தி, ஆர். பவதரணி ஜோடி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதேவேளை, ஆடவர் அணி நிலை பிரிவில் ஊவா மாகாணம் சம்பியனானதுடன், மேல் மாகாணம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. அத்துடன், மகளிர் அணி நிலை பிரிவில் மேல் மாகாணம் சம்பியனாகியதுடன், சப்ரகமுவ மாகாணம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், மகளிர் அணி நிலை பிரிவில் பங்கேற்ற கே. கேஷாஜனி, ஈ. திஷாந்தி, ஆர். பவதரணி, எல். துஷாஜினி மற்றும் எஸ். வோஜனா உள்ளிட்ட வட மாகாண அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
அத்துடன், இம்முறைப் போட்டித் தொடரில் மேல் மாகாணம் 4 தங்கப் பதக்கங்ளையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், ஊவா மற்றும் சப்கரமுவ மாகாணங்கள் தலா ஒவ்வொரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்ததுடன், வட மாகாண அணி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களை முன்னாள் விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஐ.ஜீ விஜேரத்ன மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நதீகா சிறிவர்தன ஆகியோர் வழங்கிவைத்தனர்.