வன்னிச் சமரில் சம்பியனாகிய வவுனியா இந்துக் கல்லூரி

413

வட மாகாணத்தில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் வவுனியா இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றது.  

வவுனியா இந்துக் கல்லூரி அணியும் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணியும் மோதியவன்னிச் சமர்என வர்ணிக்கப்படும் பெண்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவந்த நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. எனினும், முதல் இன்னிங்ஸ் வெற்றி மூலம் வவுனியா மங்கைகள் போட்டியில் வெற்றி பெற்றனர்.

வடக்கு, கிழக்கிலும் பெண்களுக்கான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்

வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் எம்.எப் ஜெஸ்லா 40 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் மிரட்டிய வவுனியா இந்துக் கல்லூரி அணி வீராங்கனை தினோஷியா ஸ்டீவ் மெல்கம் 30 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வவுனியா இந்துக் கல்லூரி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் 73 உதிரி ஓட்டங்கள் எதிரணி பந்துவீச்சாளர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம்.

இதனையடுத்து 27 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மன்னார் சித்தி விநாயகர் அணி, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற வவுனியா இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்து நடத்தும் போட்டிகளில் முதல் போட்டியில் வவுனியா வீராங்கனைகள் வெற்றி பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம், இந்தப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் ஜஸ்லா தெரிவாகியதுடன், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் திவ்யா தெரிவானார்.

இந்நிலையில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வவுனியா இந்துக் கல்லூரி வீராங்கனை தினோஷியா சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் போட்டியின் ஆட்ட நாயகி என்பவற்றுக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

போட்டியின் சுருக்கம்

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 99/10 (17)

வவுனியா இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 126/10 (29.4)

மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/5 (15)

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க