கோஹ்லியின் ஓய்வினால் இந்திய அணியின் தலைவராக ரஹானே

489

ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்த பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஜுன் மாதம் முழுவதும் இங்கிலாந்து உள்ளூர் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடவுள்ளதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்ரே அணியுடன் இணையும் விராட் கோஹ்லி

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் கழகமான சர்ரே அணியுடன் விளையாட இந்திய……

எதிர்வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒற்றை டெஸ்ட், அயர்லாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என்பவற்றில் இந்திய அணி விளையாடவுள்ளது. இத் தொடர்களுக்கான இந்திய குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்றுமுன்தினம் (08) அறிவித்தது.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் நோக்கில் விராத் கோஹ்லி, சர்ரே அணிக்காக அடுத்த மாதம் முழுவதும் விளையாடுவதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கெதிரான இந்திய டெஸ்ட் குழாமுக்கு அஜின்கியா ரஹானே தலைமை தாங்குகிறார்.

விராத் கோஹ்லிக்குப் பதிலாக கருண் நாயர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதுடன், புவ்னேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், ரோஹித் ஷர்மாவும் இந்திய டெஸ்ட் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அதிக அளவில் ஆதரவு அளித்து வரும் இந்திய கிரிக்கெட் சபை (பிசிசிஐ), வரலாற்று சிறப்புமிக்க ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி விளையாடும் என முடிவு செய்தது.

இதுகுறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ அடுத்த மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பெங்ளுரு சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும் எனவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்பம் எப்படி இருந்தது?

கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த வகைப்……

அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் மற்றும் T20 தொடர்களுக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்துக்கெதிரான T20 போட்டிகள் அடுத்த மாதம் 27ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

எனினும், ஸ்கார்பொரோவில் அடுத்த மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள யோர்க்ஷெயார் அணிக்கெதிரான போட்டி வரை, அதாவது ஜூன் மாதம் முழுவதும் சர்ரே அணிக்காக விராத் கோஹ்லி விளையாடுவார் என சர்ரே அணியின் இணையத்தளம் தெரிவிக்கின்றது. எனவே, விராத் கோஹ்லி, அடுத்த மாதம் 27ஆம் திகதி ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான T20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் அஷ்வின், ஜடேஜா மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.பி.எல் போட்டித் தொடரில் பிரகாசித்து வருகின்ற அம்பத்தி ராயுடு, ஷ்ரேயாஸ் ஐயர், குருனால் பாண்டியா, றிஷப் பாண்ட் ஆகியோர் T20 அணியில் இடம்பெறவில்லை.

இதேவேளை, தென்னாபிரிக்க மற்றும் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு T20 தொடர்களில் விளையாடிய அக்ஷர் பட்டேல், ஜெயதேவ் உனாட்கட் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களின் இடத்துக்கு வொஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இந்திய T20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இந்திய ஒரு நாள் குழாத்தில் அண்மைக்காலமாக விளையாடி வந்த அஜின்கியா ரஹானே, மனிஷ் பாண்டி, கேதார் ஜாதவ் (உபாதை) மொஹமட் சமி, சர்துல் தாகூர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களின் இடத்துக்கு கே.எல்.ராஹுல், அம்பத்தி ராயுடு, வொஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் குழாம்

அஜின்கே ரஹானே (தலைவர்), ஷிகர் தவான், முரளி விஜய், கே.எல் ராகுல், கருண் நாயர், விரிதிமன் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், மொஹமட் சமி, ஹர்திக் பாண்ட்யா, இஷான் சர்மா, சர்துல் தாகூர்

 கிரிக்கெட் புகைப்படங்களைப் பார்வையிட

அயர்லாந்து அணிக்கெதிரான T20 குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டி, மகேந்திர சிங் டோனி, தினேஸ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து அணிக்கெதிரான T20 குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டி, மகேந்திர சிங் டோனி, தினேஸ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), சிக்கர் தவான், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் டோனி, தினேஸ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார்