ஜப்பானின் கிபு நகரில் எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் இலங்கையிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன், இம்முறை போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் 4 x 400 அஞ்சலோட்டத்திற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என வெவ்வேறு அணிகள் பெயரிடப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனினும், 1994ஆம் ஆண்டு சுசந்திகா ஜயசிங்க, தமயந்தி தர்ஷா உள்ளிட்ட அணியினரால் பெண்களுக்கான 4 x 100 அஞ்சல் ஓட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 24 வருடங்களுக்குப் பிறகு முறியடித்த அமாஷா டி சில்வா உள்ளிட்ட அணியினருக்கு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி ஆசிய மற்றும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டங்களை பூர்த்தி செய்த மற்றும் தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு மாத்திரம் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு வீரர்கள்
இதன்படி, இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக மூன்றுக்கு மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்று தனிநபர் போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்திய இலங்கை அணியின் ஒட்டுமொத்த அணித் தலைவர் அருண தர்ஷன, இலங்கை பெண்கள் அணியின் தலைவி அமாஷா டி சில்வா மற்றும் பெண்களுக்கான மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் புதிய சாதனை படைத்த டிலிஷி ஷியாமலி குமாரசிங்க ஆகியோர் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பதக்கங்களை வெல்லலாம் என எதிர்பார்க்கின்ற முதன்மை வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, இம்மூவரும் எதிர்வரும் ஜுலை மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான அடைவு மட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராகத் தெரிவாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த வீரராக மாத்தளை, அங்குரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷன இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் (46.66 செக்.) தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றரிலும் தங்கப் பதக்கத்தை வென்ற அருண தர்ஷன, ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் பங்குபற்றி ஹெட்ரிக் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இதேநேரம், இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றரில் தங்கப் பதக்கங்களை வென்ற கண்டி, சுவர்ணமாலி மகளிர் கல்லூரி மாணவி அமாஷா டி சில்வா, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரிலும் இலங்கைக்காக பதக்கமொன்றை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெண்களுக்கான 4 x 100 மற்றும் 4 x 400 அஞ்சலோட்டங்களிலும் இலங்கை அணியில் இடம்பெற்று புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த அவர், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கை 4 x 400 அஞ்லோட்ட அணியிலும் இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனை படைத்த வலல ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி டிலிஷி குமாரசிங்கவும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கு ஏற்கனவே தகுதியைப் பெற்றுக்கொண்டுள்ள டிலிஷி, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட அணியிலும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹர்ஷ கருணாரத்ன, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற தரிந்து தசுன் மற்றும் பெண்களுக்கான நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரித்மா நிஷாதி ஆகியோரும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
எனினும், இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டத்தில் 11 வருடங்களுக்குப் பிறகு புதிய தெற்காசிய சாதனையும், 24 வருடங்களுக்குப் பிறகு இலங்கை கனிஷ்ட சாதனையையும் முறியடித்த இலங்கை அஞ்சலோட்ட அணி, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிற்காக பெயரிப்படவில்லை.
ஆனால், பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் தலைவி அமாஷா டி சில்வா, ஏற்கனவே ஆசிய கனிஷ்ட குழாமில் இடம்பெற்றிருந்தாலும், அவருடன் 4 x 100 அஞ்சலோட்டத்தில் ஓடியிருந்த ஷெலிண்டா ஜென்சன் (நீர்கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை), ஷெர்மிலா ஜேன் (நீர்கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை), மற்றும் சபியா யாமிக் (கண்டி விஹாரமஹா தேவி மகளிர் கல்லூரி) ஆகியோருக்கு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதேவேளை, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கு 6 வீரர்களுக்கு மாத்திரம் பங்குபற்ற வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், விகிதாசார முறைப்படி 8 வீரர்களை மாத்திரமே அணியில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
எனினும், மேலதிகமாக அணியில் இணைத்துக்கொள்கின்ற ஒவ்வொரு வீரருக்கும் நாளாந்தம் தலா 200 அமெரிக்க டொலர்களை செலவழிக்க வேண்டி ஏற்படும். அதனைக் கருத்திற் கொண்டு 4 x 100 பெண்கள் அணியை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பங்குபற்றச் செய்யாமல் விடுவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே, புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பைஸர் முஸ்தபா பதவியேற்ற பிறகு இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில், பதக்கங்களை வெல்கின்ற வீரர்களுக்கு மாத்திரமே சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2016 (வியட்நாம்) மற்றும் 2014ஆம் (சீன தாய்ப்பே) ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணியால் எந்தவொரு பதக்கத்தையும் வெல்ல முடியாது போனது. எனினும், 2012ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணி, ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது.
இதேநேரம், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளுக்கான சாதனையை இலங்கையின் முன்னாள் வீராங்கனைகளான சுசந்திகா ஜயசிங்க, தமயன்தி தர்ஷா ஆகியோர் தக்கவைத்துக் கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான இலங்கை குழாம்
பெயர் | போட்டி | பாடசாலை |
அருண தர்ஷன | 200,400, 4×400 | அங்குரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரி |
பசிந்து கொடிகார | 4×400 | மலியதேவ கல்லூரி – குருநாகல் |
ரவிஷ்க இந்திரஜித் | 4×400 | புனித பெனெடிக்ட் கல்லூரி – கொட்டாஞ்சேனை |
பபசர நிக்கு | 4×400 | நாலந்த கல்லூரி – கொழும்பு |
ஹர்ஷ கருணாரத்ன | 800, 4×400 | வலல்ல ஏ ரத்னாயக்க கல்லூரி |
தரிந்து தசுன் | உயரம் பாய்தல் | மஹிந்த கல்லூரி – காலி |
அமாஷா டி சில்வா | 100, 200, 4X400 | சுவர்ணமாலி மகளிர் கல்லூரி – கண்டி |
டில்ஷி குமாரசிங்க | 800, 4×400 | வலல்ல ஏ ரத்னாயக்க கல்லூரி |
ருமேஷி அத்திடிய | 4×400 | லைசியம் சர்வதேச பாடசாலை – நுகேகொடை |
சச்சினி திவ்யான்ஞலி | 4×400 | லைசியம் சர்வதேச பாடசாலை – வத்தளை |
சதுமினி பண்டார | 4×400 | கேகாலை புனித ஜோசப் கல்லூரி |
ரித்மா நிஷாதி | நீளம் பாய்தல் | தர்மாசோக கல்லூரி – அம்பலாங்கொடை |
பயிற்றுவிப்பாளர்கள்
சன்ஜீவ வீரக்கொடி
அசங்க ராஜகருணா
பெண்கள் அணி பொறுப்பாளர்
யமுனா ரத்னாயக்க