விமர்சனங்களை முறியடித்து பாக். டெஸ்ட் குழாமில் இணைந்த இன்ஸமாமின் மருமகன்

2102

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக முன்னாள் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக் இடம்பிடித்துள்ளார்.

இந்த டெஸ்ட் குழாமில் பகார் சமான், சாத் அலி மற்றும் உஸ்மான் சலாஹுத்தின் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத கடைசியில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் அயர்லாந்து அணியுடனான கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருக்கும் இன்ஸமாம் உல் ஹக் தனது மருமகனை பாகிஸ்தான் அணியில் இணைத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியபோதும் இமாம் உல் ஹக் கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த தனது கன்னி ஒருநாள் போட்டியிலேயே சதம் பெற்று அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

ஜனநாயக முறையில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பைஸர்

அப்போது அவர் கூறியதாவது, ”நான் அவரது (இன்ஸமாம் உல் ஹக்) மருமகனாக இருப்பது எனது தவறல்ல. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது துடுப்பாட்டத்தால் தான் அதற்கு நான் பதில் கூற முடியும். அதனை நான் செய்துவிட்டேன்” என்று கூறினார்.

சலிம் இலாஹிக்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்காக தனது கன்னி ஒருநாள் போட்டியில் சதம் பெற்றவராக சாதனை படைத்த 22 வயதுடைய இடது கைது துடுப்பாட்ட வீரரான இமாம் உல் ஹக் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து பயணமாகி இருக்கும் பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் கடந்த வாரம் விளையாடிய கென்ட் அணியுடனான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அரைச்சதம் (61) பெற்ற ஒரே வீரர் இமாம் உல் ஹக் ஆவார். எனினும் போட்டியின் இரண்டு நாட்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதால் அந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குழாமில் இருந்து 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நீக்கப்பட்டதோடு, சுழல் பந்து வீச்சாளர் யாஸிர் ஷாஹ் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இதில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருக்கும் பகார் சமான் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். கடந்த பருவத்தில் ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் அவர் 106 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

24 வயதுடைய சாத் அலி பாகிஸ்தான் உள்ளூர் முதல் தர தொடரான குவைத் அஸாம் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவராவார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், இங்கிலாந்துக்கு எதிராக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் அவரது ஒழுக்க செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் விமர்சித்திருந்தார்.

31 வயதான யாசிர் ஷாஹ் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் உட்பட 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் நிலையில் இடுப்பு பகுதியில் எற்பட்ட உபாதை காரணமாக அணியில் இடம்பிடிக்கத் தவறினார்.

டெஸ்ட் குழாமில் இடம்பிடித்திருக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஹம்மட் ஆமிர் வழமைபோல் இழுபறிக்கு பின்னரே இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் குறித்த நேரத்தில் விசா (Visa) வழங்கப்படாததால் பாகிஸ்தான் குழாமுடன் இங்கிலாந்துக்கு செல்ல முடியாமல் போன ஆமிர் தமதித்து விசா கிடைத்ததை அடுத்து ஒருநாள் கழித்து இங்கிலாந்து புறப்பட்டார்.

டி20 போட்டிகளின் தரவரிசையில் இலங்கையை பின்தள்ளிய ஆப்கான்

2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணத்தின் போதும் இதே போன்று ஆமிருக்கு விசா கிடைக்க தாமதம் ஏற்பட்டது. இங்கிலாந்து அவருக்கு விசா வழங்க ஏன் தாமதிக்கிறது என்பது இன்னும் தெரியாத விடயாமாக உள்ளது.

அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பதால் விசா நடைமுறையில் தாமதம் ஏற்படுவதாக பொதுவாக கூறப்பட்டபோதும் முஹம்மட் ஆமிர் இங்கிலாந்தில் சிறை அனுபவித்தவர் என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு சுற்றுப் பயணத்தில் ஸ்பொட் பிக்சிங் (Spot Fixing) ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றங்காணப்பட்டதை அடுத்து ஆமிர் இங்கிலாந்தில் சிறை அனுபவிக்கவேண்டி ஏற்பட்டது.

பாகிஸ்தான் குழாம்: சப்ராஸ் அஹமது (தலைவர் மற்றும் விக்கெட் காப்பாளர்), அசார் அலி, இமாம் உல் ஹக், சமி அஸ்லம், ஹாரிஸ் சொஹைல், பாபர் அஸாம், பகார் சமான், சாத் அலி, அஸாத் ஷபீக், உஸ்மான் சலாஹுத்தீன், ஷதாப் கான், முஹம்மட் ஆமிர், முஹம்மட் அப்பாஸ், ஹஸன் அலி, ரஹத் அலி, பாஹிம் அஷ்ரப்