இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை சட்டமா அதிபரிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பிறகு அமைச்சில் நேற்று (04) இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”அண்மைக்காலங்களில் தேர்தலை பிற்போடுகின்ற அமைச்சர் என்று பரவலாகப் பேசப்பட்டேன். தற்போது அந்த குற்றச்சாட்டை விளையாட்டிலும் கொண்டு வருவதற்கு ஒரு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனவே மீண்டும் அவ்வாறானதொரு குற்றச்சாட்டிற்கு ஆளாவதற்கு நான் விரும்பவில்லை.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தேர்தலில் சிறிது தாமதம்
எனவே, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளையும் முன்னெடுக்கவுள்ளேன். அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளேன். அதேநேரம், இடைக்கால நிர்வாக சபையை நியமிக்க ஒருபோதும் இடமாளிக்க மாட்டேன். நான் எப்போதும் ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பேன். அதிலும் குறிப்பாக, எவ்வாறு பாராளுமன்றத்தில் ஜனநாயகம் பின்பற்றப்படுகின்றனவோ, விளையாட்டிலும் ஜனநாயகத்தை ஏற்படுத்த முன் நின்று செயற்படுவதற்கு தயாராக உள்ளேன்.
எனவே சிறிய சங்கங்களின் வாக்குகளினால் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தெரிவாகிய நிர்வாகம்தான் அடுத்த தேர்தல் நடைபெறும் வரை பதவியில் இருக்கவேண்டும். அதற்காகத்தான் தற்போதுள்ள நிர்வாகத்துக்கே தேர்தல் நடைபெறும் வரை கிரிக்கெட் நிறுவன வேலைகளை முன்னெடுத்துச் செல்ல அனுமதி அளித்தேன். ஆனால் இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிக்க வேண்டி ஏற்படின், அதையும் தயங்கமால் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு பொதுக்கூட்டத்தை நடத்தாமல் ஐவர் கொண்ட தேர்தல் குழுவை நியமித்த காரணத்தால் மே மாதம் 19 ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த 27 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்ததுடன், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதித் தினமாகவும் அன்றைய தினம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலுக்காக மீண்டும் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதா அல்லது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டு தேர்தலை நடத்துவதா என்பது குறித்து அமைச்சரிடம் கேள்விய எழுப்பிய போது, குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் பதவிக்கு பொருத்தமான ஒரே நபர் நான் – திலங்க
இதேநேரம், புதிய விளையாட்டுத்துறை சட்டத்தின்படி, நாட்டிலுள்ள அனைத்து சங்கங்களினதும் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு விளையாட்டில் மிகப் பெரிய நன்மதிப்பும், அபிப்பிராயமும் உண்டு. இந்நாட்டிலுள்ள தேசிய அணியொன்று உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பங்குபற்றுவதற்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோன்று விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அவ்வாறு அனுமதியை வழங்குவதற்கு அறிவு உள்ளதா? அல்லது தேர்வாளர்களுக்கு போதிய தெளிவு உள்ளதா என்பதுதான் தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் பதக்கங்களை அல்லது வெற்றிகளை பெற்றுக்கொள்கின்ற வீரர்களுக்கு மாத்திரம் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
உண்மையில், விளையாட்டு தொடர்பில் எனக்கு எந்தவொரு அடிப்படை அறிவோ அல்லது தெளிவோ கிடையாது. இதை நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன். எனவே, ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் திறமைகளை வெளிப்படுத்திய அனுபவமிக்க, முன்னாள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை ஆலோசனைக் குழுக்களாக நியமித்து எனது தனிப்பட்ட கருத்துக்களை ஒன்றிணைத்து முடிவுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன். அது மாத்திரமின்றி, முடியுமான வரை அரசியல் தலையீடுகளில் இருந்து இந்த அமைச்சை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
இதேநேரம், கடந்த வருடம் உள்ளுர் கிரிக்கெட் போட்டியொன்றில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் மற்றும் அதற்காக விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிறகு வெளியான அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
புதிய தொடர்களில் விளையாடவுள்ள இலங்கையின் ஏனைய கிரிக்கெட் அணிகள்
”குறித்த விடயம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. எனவே அந்த விசாரணை அறிக்கை குறித்து உரிய கவனம் செலுத்துமாறு செயலாளரிடம் கேட்டுக் கொள்கின்றேன். அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார உள்ளிட்ட மூவரடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டங்களை ஒருபோதும் புறக்கணிக்கப் போவதில்லை எனவும், அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாகவும்” அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.