இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் நேற்றைய தினம் (28) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.
கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 20 வருடங்கள் பழைமையான தேசிய சாதனையை வர்த்தக நிறுவனங்கள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட நட்சத்திர குறுந்தூர வீரர் சுரன்ஜய டி சில்வா முறியடித்தார். அவர் குறித்த போட்டியை 20.69 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி
இதேநேரம், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், உபாதையுடன் போட்டிகளில் கலந்து கொண்டு 3.30 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், கடந்த சில தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை அனித்தா முறியடித்திருந்தார்.
- 400 மீற்றரில் காலிங்க அபாரம்
தேசிய மட்டத்தில் முதல் 5 இடங்களிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் பங்குபற்றிய ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (28) நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட காலிங்க குமாரகே, போட்டியை 46.08 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், இது காலிங்கவின் தனிப்பட்ட சிறந்த காலமாக பதிவாகியதுடன், தேசிய மட்டத்தில் பதிவாகிய 4ஆவது சிறந்த காலமாகவும் இடம்பிடித்தது.
இதற்கு முன் முன்னாள் வீரர்களான சுகத் திலகரத்ன, ரொஹான் பிரதீப் மற்றும் பிரசன்ன அமரசேகர ஆகியோர் 400 மீற்றரில் தேசிய மட்டத்தில் சிறந்த காலங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், குறித்த போட்டியின் நடப்புச் சம்பியனும், 2016 தெற்காசிய விளையாட்டு விழாவிவ் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு வீரரான திலிப் ருவன், 46.39 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தனது சிறந்த காலத்துடன் 2ஆவது இடத்தையும், 47.16 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த ஏ. பிரேமகுமார 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்
- உபமாலி, நதீஷாவின் சிறந்த காலம்
பெண்களுக்கான 400 மீற்றரில் கலந்து கொண்ட உபமாலி ரத்னகுமாரி, 53.31 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தையும், நதீஷா ராமநாயக்க, 54.18 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். அதேநேரம் இவ்விரு வீராங்கனைகளும் தமது சிறந்த காலங்களையும் இதன்போது பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், அண்மைக்காலமாக இலங்கைக்கு பரா மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை வென்று கொடுக்கின்ற அமரா இந்துமதியும் இப்போட்டியில் கலந்துகொண்டார். குறித்த போட்டியை 1 நிமிடமும் 02.92 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், தனது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.
- அதிவேக வீரர்களாக ஹிமாஷ, சுகந்தி முடிசூடல்
ஆசிய விளையாட்டு விழாவுக்கு மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டத்தில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை நட்சத்திர குறுந்தூர ஹிமாஷ ஏஷான் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை 10.53 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
எனினும், குறித்த போட்டிப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதல் 3 இடங்களில் உள்ள சுரன்ஜய டி சில்வா, மொஹமட் அஷ்ரப் ஆகியோர் இத்தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவில்லை.
இதேநேரம், பெண்கள் பிரிவில், ஹெப்டத்லன் (7 அம்சப் போட்டிகள்) போட்டிகளின் நடப்பு சம்பியனான லக்ஷானி சுகந்தி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். குறித்த போட்டியை 11.98 செக்கன்களில் அவர் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- தட்டெறிதலில் ஆஷிக் அபாரம்
இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ZTM ஆஷிக், 42.87 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 42.28 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை கடற்படையைச் சேர்ந்த பி. ஜயவர்தன 51.10 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தையும், இலங்கை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த எஸ். நிரோஷன 42.05 மீற்றர் தூரத்தை எறிந்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
- பாசிலுக்கு ஆறுதல் வெற்றி
ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் பாசில் உடையார் பங்குபற்றியிருந்தார்.
போட்டிகளில் முதல் நாளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பாசில் உடையார், 22.01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் கலந்துகாண்ட அவர், போட்டியை 22.10 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், போட்டிகளின் 2ஆவது நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றிய பாசில், தகுதிகாண் சுற்றில் 10.89 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடத்தையும், இறுதிப் போட்டியில் 10.76 செக்கன்களில் ஓடி முடித்து 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், குறித்த போட்டித் தொடரின் 2ஆவது கட்டம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் அல்லது ஜுன் மாதம் முற்பகுதியில் இதே விளையாட்டரங்கில் நடைபெறும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.