லங்கன் பிரீமியர் லீக் தொடரின் அவசியத்தை விளக்கும் ரசல் ஆர்னோல்ட்

879
Sri Lanka have fallen
Photo - dnaindia.com

கடந்த காலங்களில் திறமைமிக்க வெளிநாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கும் உள்ளூர் போட்டிகள் இலங்கையில் போதியளவு நடைபெறாது போனமையே, இந்நாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள தடையாக இருந்தது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் லங்கன் பிரீமியர் லீக் T20 போட்டிகளின் இயக்குனருமான ரசல் ஆர்னோல்ட் தெரிவித்திருக்கின்றார்.

லங்கன் ப்ரீமியர் லீக் தொடரில் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஆர்னோல்ட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒத்தவிதத்தில் இலங்கையில் இந்த ஆண்டு…

கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளில் வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் பங்கெடுக்கும் T20 தொடர்கள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரேத்தியேகமாக இருக்கும் இவ்வகைப் போட்டிகள் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிக்காட்ட சிறந்த களத்தினை ஏற்படுத்தி தருவதுடன், கிரிக்கெட் இரசிகர்களுக்கு விருந்து படைக்கும் நிகழ்ச்சிகளாகவும் அமைகின்றது. இப்போட்டிகளினை ஒத்தவிதத்தில் இலங்கை கிரிக்கெட் சபையும் (SLC) “ லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ” என்ற பெயரிலமைந்த T20 தொடரினை இந்த ஆண்டின் ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடாத்த தீர்மானித்துள்ளது.

இலங்கையின் இந்த T20 தொடருக்கு பிரதான இயக்குனராக, 44 வயதான முன்னாள் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரசல் ஆர்னோல்ட் இம்மாத ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.   

ஆசியாவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபல்யமாக காணப்படும் நாடுகள் அனைத்தும் தமக்கென உள்ளூர் T20 தொடர்களை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தி வருகின்ற வேளையில், இலங்கையில் மாத்திரம் இது மாதிரியான தொடர்கள் எதுவும் இல்லாமல் இருப்பது கிரிக்கெட் இரசிகர்களினை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இலங்கையும் தமக்கென தனித்துவமாக அமைந்த ஒரு கிரிக்கெட் தொடரை உருவாக்கி அதில் வெற்றியடையும் என ரசல் ஆர்னோல்ட் கூறியிருக்கின்றார்.

“எங்களுக்கும் இப்படியான தொடர் ஒன்று தேவை. நாங்கள் எங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளில தோல்வியடைந்திருக்கின்றோம். இங்கே அனைத்து நாட்டு வீரர்களும் பங்கெடுக்கும் ஒரு (கிரிக்கெட்) தொடரில் ஆர்வம் காட்டும் கலாச்சாரம் உள்ளது. இப்படியான தொடர், வீரர்களுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்டும் ஒரு களமாக அமைவதோடு, அவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியில் விளையாடி திறமைகளை வளர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தினையும் ஏற்படுத்தி தருகின்றது. “ என கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் கூறிய ஆர்னோல்ட் எல்.பி.எல். போட்டிகளின் அவசியத்தினை சுட்டிக்காட்டியிருந்தார்.  

இலங்கை கிரிக்கெட் சபை 2011ஆம் ஆண்டு இதே மாதிரியான ஒரு T20 தொடரினை ஏற்பாடு செய்திருந்தும், அனுசரணையாளர்கள் போதியளவு கிடைக்காத காரணத்தினால் அப்போதைய தொடர் வெற்றியளிக்கவில்லை.

“இத்தொடர் இடம்பெற்றால் இதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சி அடையவேண்டும் என்பதே எமக்குத் தேவை. நாம் அப்படியாகவே இத் தொடரினை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இத்தொடரினால் மகிழ்ச்சி அடைபவர்களாக வீரர்கள் மாத்திரமின்றி கிரிக்கெட் இரசிகர்கள், அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அனைவரும் இருக்க வேண்டும். எனக்கு இதனை வெற்றிகரமாக நடாத்த முடியும் என்கிற உறுதியான நம்பிக்கை இருக்கின்றது. அதோடு, இப்போட்டிகள் மீதுள்ள ஆர்வம் எனக்கு இன்னும் எதிர்பார்ப்புக்களை உருவாக்குகின்றது. “ என ஆர்னோல்ட் மேலும் கூறினார்.

தற்போது ஆசிய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் பங்கேற்க மலேசியா சென்றிருக்கும் ஆர்னோல்ட் அங்கிருந்து வந்த பின், மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் எல்.பி.எல். போட்டிகளின் இயக்குனர் பதவியினை பொறுப்பெடுத்துக் கொள்கின்றார்.

இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு அரசியல்வாதிகளே காரணம் – முரளிதரன்

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது…

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகத்தர்கள் இந்த எல்.பி.எல். போட்டிகளில் விளையாட இந்திய வீரர்கள் சிலரை விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறியிருந்தனர். இந்திய வீரர்கள் இலங்கையின் இந்த உள்ளூர் தொடரில் பங்கேற்பது அனுசரணையாளர்களை ஈர்க்கவும், தொலைக்காட்சி உரிமத்தை அதிக ஏலத்துக்கு பெற்றுக் கொள்ளவும் உதவும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரையில் தமது வீரர்கள் வெளிநாட்டு T20 தொடரொன்றில் விளையாடுவதற்கு சரியான சம்மதம் ஒன்றினை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த எல்.பி.எல். T20 தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால முன்னதாக கூறியிருந்தார். எனினும், தற்போதைய நிலவரத்தின்படி அது ஐந்து அணிகளாக மாற சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அடுத்தடுத்த பருவகாலங்களில் ஆறு அணிகள் கொண்ட தொடராக எல்.பி.எல். போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் பருவகாலத்திற்கான எல்.பி.எல். போட்டித் தொடரை இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 10ஆம் திகதி வரை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதோடு, இலங்கை கிரிக்கெட் சபை அடுத்த ஐந்து வருடங்களிலும் இந்த காலப்பகுதியினை (ஒகஸ்ட் – செப்டம்பர்) எல்.பி.எல். போட்டிகளை நடாத்த ஒதுக்கி வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<