சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

723
SAFF Championship

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) சாப் சுசுகி கிண்ண கால்பந்து தொடரில் இலங்கை அணி பலம் மிக்க இந்தியா மற்றும் மாலைதீவுகள் அணிகளுடன் குழு B யில் இடம்பெற்றுள்ளது.

தெற்காசியாவில் இடம்பெறும் மிகப்பெரிய போட்டித் தொடர்களில் ஒன்றான சாப் சுசுகி கிண்ண கால்பந்து தொடருக்கான அணிகளைக் குழுநிலைப்படுத்துவதற்கான குலுக்கல் நிகழ்வு இன்று (18), போட்டிகள் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பற்றது.

புதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை..

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர், தெற்காசிய நாடுகளின் கால்பந்து அதிகாரிகள் மற்றும் போட்டித் தொடருக்கான அனுசரணையாளர்களான சுசுகி நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளடங்கலாக பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இம்முறை போட்டித் தொடரில் இந்தியா, மாலைதீவுகள், நேபால், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய 6 நாடுகள் பங்கு கொள்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் ஏழாவது நாடாக பாகிஸ்தானும் தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

குலுக்கல் முறையில் அணிகளை குழுநிலைப்படுத்தும் நிகழ்வு தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் காஸி மொஹமட் சலாஹுடின் மற்றும் சுசுகி மோட்டார் நிறுவனத்தின் ஆலோசகர் சீஜி ஹமாசா ஆகியோர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.  

இதன்போது, ஏழு அணிகளுக்கான குழுநிலைப்படுத்தலில் போட்டிகளை நடாத்தும் பங்களாதேஷ் அணி குழு A இலும், நடப்புச் சம்பியன் இந்திய அணி குழு B இலும் குலுக்கல் இன்றி பெயரிடப்பட்டன.

2013ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சாப் கிண்ண போட்டிகளில் அணிகள் வெளிப்படுத்திய திறமைகளுக்கு அமைய இந்த குலுக்கலுக்கான அணிகள் தரநிலைப்படுத்தப்பட்டிருந்தன.  

அதில் மாலைதீவுகள் மற்றும் நேபால் அணிகள் ஒரு தரத்திலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு தரத்திலும், பூட்டான் அணி மாத்திரம் ஒரு தரத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான குலுக்களின்போது பாகிஸ்தான் அணி A குழுவிற்கும், இலங்கை அணி B குழுவிற்கும் தெரிவாகின. அதேபோன்று, அடுத்த குலுக்கலில் நேபால் அணி A குழுவிற்கும், மாலைதீவுகள் அணி B குழுவிற்கும் தெரிவாகின. பூட்டான் அணிக்கான குழுத் தெரிவின்போது, அவ்வணி குழு A யில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றது.  

குழு A
பங்களாதேஷ்
நேபாளம்
பாகிஸ்தான்
பூட்டான்

குழு B
இந்தியா
மாலைதீவுகள்
இலங்கை

இதன்படி செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறும் இத்தொடரில் இலங்கை அணி பலம் மிக்க அணிகளாகக் கருதப்படும் இந்தியா மற்றும் மாலைதீவுகள் அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தொழில்முறை கால்பந்து விளையாட்டுக்கு தயாராகும் உசைன் போல்ட்

8 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை..

இதில் இந்திய அணி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தரப்படுத்தலில் 97ஆவது இடத்திலும் மாலைதீவுகள் அணி 147ஆவது இடத்திலும் இருக்கும் அதேவேளை, இலங்கை அணி 200ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு தமது சொந்த நாட்டில் இடம்பெற்ற தொடரில் இந்திய அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதுடன், 2013ஆம் ஆண்டு நேபாலில் இடம்பெற்ற தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. எனினும், ஆப்கானிஸ்தான் அணி தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தில் இருந்து விலகி, தற்பொழுது மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தில் இணைந்து விளையாடுகின்றது.

மேலும், இதுவரை இடம்பெற்ற 11 போட்டித் தொடர்களில் இந்தியா அதிகமாக 7 முறை சம்பியனாகியுள்ள அதேவேளை, மாலைதீவுகள், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறை சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<