மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில்

1248
Image Courtesy - Getty Images

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி ஆகியவற்றுக்கு இடையில் மே மாதம் 31 ஆம் திகதி விஷேட T20 போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 13 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். அத்தோடு இப்போட்டியை உலகம் பூராகவும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல நோக்கம் ஒன்றுக்காக விளையாடப்படவுள்ள இப்போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோரோடு அன்ட்ரே ரசலும் அடங்குகின்றார். ரசல், இந்தப் பருவகாலத்திற்கான ஐ.பி.எல். தொடரில் வெறும் நான்கு போட்டிகளில் மாத்திரம் விளையாடி இதுவரையில் 19 சிக்ஸர்கள் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஏற்பட்ட இர்மா மற்றும் மரியா புயல்களின் காரணமாக, கரீபியன் தீவுகளில் ஐந்து முக்கிய கிரிக்கெட் மைதானங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்த மைதானங்களை புணரமைப்பு செய்வதற்காகவும் ஏனைய கிரிக்கெட் வசதிகளை உருவாக்கி கொடுப்பதற்காகவுமே இந்த விஷேட T20 போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கை பயிற்றுவிப்பாளர் குழாமில் மீண்டும் இடம்பெறவுள்ள அதிரடி மாற்றங்கள்

இப்போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் ஜோனி கிரேவ், “நாங்கள் இப்போட்டி மூலம் கணிசமான அளவு பணத்தை சேகரித்துக் கொள்வோம் என எதிர்பார்க்கின்றோம். இப்போட்டியை எம்.சி.சி (Marylebone Cricket Club), ஈ.சி.பி. (England Cricket Board) மற்றும் ஐ.சி.சி. ஆகியவை ஒழுங்கமைத்து தந்தது மகிழ்ச்சி. இவர்களின் பங்களிப்பு இல்லாவிடின் இப்படி ஒரு போட்டியை ஏற்பாடு செய்திருக்க முடியாது“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட ஐந்து மைதானங்களும் தற்போது இர்மா புயலின் தாக்கத்துக்கு உள்ளான பார்புடா பொதுமக்களின் தற்காலிக முகாம்களாக பயன்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மைதானங்கள்: ரொனால்ட் வெப்ஸ்டெர் பார்க் மைதானம் -அங்கியூலா, வின்ஸ்டோர் பார்க் மைதானம் – டொமினிகா, ஏ.ஓ. செர்லி ரெக்ரேசன் மைதானம் – பிரிட்டிஷ் வெர்ஜினியா தீவுகள், கெரிப் லும்பர் பார்க் மைதானம் – சென்.மார்டீன், சேர். விவியன் ரிச்சார்ட்ஸ் அரங்கு — அன்டிகுவா

மேற்கிந்திய தீவுகள் குழாம் 

கார்லோஸ் பரத்வைட் (அணித்தலைவர்), சாமுவேல் பத்ரி, றயாத் எம்ரிட், அன்ட்ரூ பிளெச்சர், கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ், எஷ்லி நேர்ஸ், கீமோ போல், ரொவ்மன் பவல், தினேஷ் ராம்டின், அன்ட்ரே ரசல், மார்லோன் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்