இலங்கை அஞ்சலோட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

1363

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா 9 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றதுடன், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் குத்துச்சண்டை மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் இன்றைய தினம் (13) இடம்பெற்றன.

இதில் ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்ட தகுதிச் சுற்றில் கலந்து கொண்ட இலங்கை அணி, 39.47 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, சுமார் 68 வருடங்களுக்குப் பிறகு பொதுநலவாய விளையாட்டு விழா அஞ்சலோட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த ஹிமாஷ ஏஷான், சுரன்ஜய டி சில்வா, மொஹமட் அஷ்ரப் மற்றும் ஷெஹான் அம்பேப்பிட்டிய ஆகிய வீரர்களைக்  கொண்ட அணிதான் இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவிலும் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இலங்கை அணியுடன் தகுதிச் சுற்றில் போட்டியிட்ட தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகள் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்டதுடன், 2ஆவது தகுதிச் சுற்றில் போட்டியிட்ட இங்கிலாந்து, ஜமைக்கா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தேசிய சாதனையுடன் பதக்கம்

இதன்படி, ஆண்களுக்கான 4×100 இறுதிப் போட்டி நாளை (14) காலை (இலங்கை நேரப்படி 10.10 மணிக்கு) கராரா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

 

இறுதிப் போட்டிக்கு சம்பத் தகுதி

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஏ மற்றும் பி பிரிவுகளாக இன்று (13) நடைபெற்றது. இதன் ஏ பிரிவில் பங்கேற்ற இலங்கை வீரர் சம்பத் ரணசிங்க, முறையே 74.72, 71.75 மற்றும் 73.93 மீற்றர் தூரங்களைப் பதிவுசெய்து 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், ஒட்டுமொத்த வீரர்களின் அடிப்படையில் 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், நாளை (14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இதேநேரம், கடந்த ஜனவரி மாதம் தியகமவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 81.22 மீற்றர் தூரத்தை எறிந்து தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து தகுதியை பெற்றுக்கொண்ட சம்பத் ரணசிங்க, கடந்த வருடம் இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 75.39 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.