இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் இந்த வருடத்திற்கான போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
புதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி
இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை..
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில் தெற்காசிய கால்பந்து சம்மேளனக் கிண்ணப் போட்டித் தொடர் (SAFF Championship) இடம்பெறவுள்ளது. எனவே, இலங்கை தேசிய அணி அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபடவுள்ளதன் காரணமாகவே ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருந்த டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனமானது, DCL தொடரில் பங்குகொள்ளும் அணிகளுடன் இம்மாதம் 5ஆம் திகதி சந்திப்பொன்றை நடாத்தியுள்ளது. இதன்போது, தேசிய அணிக்கு தெரிவாகியுள்ள தமது கழகத்தின் திறமைமிக்க வீரர்களது பங்களிப்பு அணிக்கு மிகவும் அவசியம் என கழகங்கள் வலியுறுத்தியுள்ளன. அதன் காரணமாகவே செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் மிகப் பெரிய கால்பந்து தொடரை ஆரம்பிப்பதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலியின் கண்காணிப்பின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவின் முடிவில், நேற்று (09) தேசிய அணி வீரர்களின் விபரத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருந்தது.
அதிகமான இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கான பயிற்சிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து தேசிய அணி வீரர்களுக்கான பயிற்சிப் போட்டிகள் மற்றும் வீரர்களுக்கான தயார்படுத்தல்கள் வெளிநாடுகளிலும் இடம்பெறவுள்ளன.
இவ்வாறான நீண்ட திட்டத்தைக் கொண்டுள்ள தேசிய அணியின் தயார்படுத்தல்களுக்காக வீரர்கள் தம்மை முழுமையாக ஒழுங்குபடுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
SAFF சம்பியன்ஷிப் தொடரை அடுத்து ஆரம்பமாகும் இந்த வருடத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் இம்முறை புதிதாக இரண்டு அணிகள் உள்வாங்கப்படும் அதேவேளை, இரண்டு அணிகள் இத்தொடரில் இருந்து தரமிறக்கம் செய்யப்படுகின்றன.
இறுதியாக இடம்பெற்ற பிரிவு ஒன்றுக்கான தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற தர்கா நகர் ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகமும், குறித்த தொடரில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கையின் பழமை வாய்ந்த கழகமான ரட்னம் விளையாட்டுக் கழகமும் இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளன.
அதேபோன்று, கடந்த பருவகாலப் போட்டித் தொடரில் இறுதி 2 இடங்களையும் பெற்ற மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் என்பன தரமிறக்கம் செய்யப்பட்டு பிரிவு ஒன்று தொடரில் விளையாடவுள்ளன. அந்த வகையில் இம்முறையும் 18 அணிகள் மோதுகின்றன.
கடந்த வருடம் இடம்பெற்ற தொடர், ஏனைய வருடங்களை விட மாற்றமான முறையில், அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் விதத்தில் இருந்தது.
வடக்கு கிழக்கின் கால்பந்து மேலும் முன்னேற வேண்டும் : சுனில்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கால்பந்து வீரர்களை..
குறித்த தொடரில் இறுதி வாரம் வரை நிலவிய கடும் போட்டியின் பின்னர், இறுதி வாரப் போட்டியில் ரினௌன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கொழும்பு கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையும் சம்பியன் பட்டத்தை வென்றது.
எனினும், இம்முறை பல கழகங்களும் தமது குழாமை பலப்படுத்தும் நோக்குடன் பல முன்னணி வீரர்களை ஏனைய கழகங்களில் இருந்து தம்மகப்படுத்தியுள்ள அதேவேளை, புதிய இளம் வீரர்களையும் இணைத்துக்கொண்டுள்ளன.
இம்முறை பங்கு கொள்ளும் அணிகள்
கொழும்பு கால்பந்துக் கழகம் – ரினௌன் விளையாட்டுக் கழகம் – நியு யங்ஸ் கால்பந்துக் கழகம் – சுபர் சன் விளையாட்டுக் கழகம் – பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் – விமானப்படை விளையாட்டுக் கழகம் – மாத்தறை சிடி விளையாட்டுக் கழகம் – சொலிட் விளையாட்டுக் கழகம் – இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – கடற்படை விளையாட்டுக் கழகம் – அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் – புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – நிகம்பு யூத் விளையாட்டுக் கழகம் – ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் – ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகம் – ரட்னம் விளையாட்டுக் கழகம்
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<