இந்தியாவோடு சேர்த்து உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கோடை காலத்தில் விருந்து படைக்கும், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) T20 போட்டிகள் 11 ஆவது தடவையாக இந்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்தப்பருவகாலத்திற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த தொடர்களை விட தனித்துவமிக்க ஒன்றாக அமைகின்றது. பணத்தை அள்ளிக் கொட்டுகின்ற இந்த கிரிக்கெட் தொடர் இம்முறை தனித்துவமாக அமைய பல காரணங்கள் இருக்கின்றன.
அதிக விலை கொடுத்து தொலைக்காட்சி/டிஜிடல் உரிமம் கோரப்பட்ட தொடர்
2008 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர், இந்தளவுக்கு பிரபல்யமான ஒன்றாக மாறும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அப்போது, இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை இந்தியாவின் சோனி வலையமைப்பு இந்திய நாணய மதிப்பின்படி 8200 கோடி ரூபாய்களை செலுத்தி ஏலம் எடுத்திருந்தது.
இந்த உரிமம் 2017 ஆம் ஆண்டுக்கான தொடருடன் முடிவடைந்ததன் பின்னர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் (2018-2022) ஐ.பி.எல். போட்டிகளை தொலைக்காட்சிகளிலும், டிஜிடல் வலைத்தளங்களிலும் உலகம் பூராகவும் ஒளிபரப்புச் செய்யும் உரிமையை தனியொரு அமைப்பாக இந்தியாவின் ஸ்டார் தனியார் நிறுவனம் பெற்றிருக்கின்றது. இதற்காக, அவர்கள் இந்திய நாணய மதிப்பில் 16347.5 கோடி ரூபாய்களை (இலங்கை நாணய மதிப்பில் கிட்டத்தட்ட 400,000 கோடி ரூபாய்) செலவிட்டிருக்கின்றனர்.
இறுதித் தருணத்தில் IPL வாய்ப்பை இழந்த கிரிக்கெட் வீரர்கள்
வரலாற்றில் கிரிக்கெட் தொடர் ஒன்றை ஒளிபரப்புச் செய்ய அதிக பணம் செலவிடப்பட்ட தருணம் இதுவாகும்.
சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் ராஜாஸ்தான் றோயல்ஸ் அணிகளின் மீள் வருகை
ஐ.பி.எல். தொடரில் மிகவும் பிரபல்யமான அணியான சென்னை சுபர் கிங்ஸ் அதன் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் மீது சுமத்தப்பட்டிருந்த பந்தயக் குற்றச்சாட்டினால் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் விளையாடாது போயிருந்தது.
இப்போது இந்தச் சிக்கல்களில் இருந்து விலகியிருக்கும் அவ்வணி இந்த ஆண்டுக்கான தொடர் மூலம் மீண்டும் கலக்க வருகின்றது. சென்னை சுபர் கிங்ஸ் அணியினர் இந்த ஆண்டுக்கான தொடரில் பங்கேற்பதற்கான, பயிற்சிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரம் ஈடுபட்டிருந்தனர். குறித்த பயிற்சி ஆட்டத்தை ரசிக்க கிட்டத்தட்ட 15,000 இற்கும் மேலான ரசிகர்கள் வந்திருந்தது சென்னை சுபர் கிங்ஸ் அணியை கடந்த இரண்டு பருவகாலங்களிலும் அவர்கள் எந்தளவுக்கு தவறவிட்டிருந்தனர் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தது.
தாம் இறுதியாக பங்கேற்றிருந்த ஐ.பி.எல் (2015) தொடரின் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை மும்பையிடம் பறிகொடுத்திருந்த சென்னை அணி, இந்த முறை கிண்ணத்தை வெல்ல மிகவும் அனுபவம் கொண்ட வீரர்களை தன்னகத்தே வைத்திருக்கின்றது.
வழமை போன்று சென்னை அணியை “தல” என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் மஹேந்திர சிங் தோனி வழிநடாத்த ரவிந்திர ஜடேஜா, வேய்ன் ப்ராவோ, சுரேஷ் ரெய்னா மற்றும் பாப் டு பிளேசிஸ் போன்றவர்கள் அவ்வணியின் துருப்புச் சீட்டு வீரர்களாக காணப்படுகின்றனர்.
சென்னை சுபர் கிங்ஸ் அணி போன்று உரிமையாளர் (ராஜ் குந்த்ரா) ஒருவர் மீது பந்தயக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனை அடுத்து, ராஜாஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இலங்கை வரவிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி
ராஜாஸ்தான் றோயல்ஸ் அணியும் தடைகள் ஏதுமின்றி இந்தப்பருவ காலத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கின்றது. ராஜாஸ்தான் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஒரு வருடகால போட்டித்தடையைப் பெற்ற காரணத்தினால் ஐ.பி.எல். போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார். இதன் காரணமாக, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அஜிங்கியா ரஹானேவினால் ராஜாஸ்தான் றோயல்ஸ் அணி இம்முறை வழிநடாத்தப்படவுள்ளது.
புதிய தலைவர்களின் கீழ் அணிகள்
இதுவரை T20 போட்டிகளில் எந்தவொரு அணியையும் வழிநடாத்திய அனுபவத்தினைக் கொண்டிராத, சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். சென்னை அணிக்காக நீண்ட காலம் விளையாடி வந்த அஷ்வினுக்கு இந்த தலைமைப் பொறுப்பு சவால் தரும் ஒரு விடயமாக இருக்கின்றது.
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஏனைய அவுஸ்த்திரேலியா அணியின் வீரரான டேவிட் வோர்னருக்கும், இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாது போயுள்ள நிலையில் அவரின் தலைமையில் கீழ் இருந்த சன்ரைஸர்ஸ் அணியை வழிநடாத்தும் பொறுப்பு கேன் வில்லியம்சனிடம் சென்றிருக்கின்றது. நியூசிலாந்து அணியின் தலைவரான வில்லியம்சன் இப்போது டேவிட் வோர்னர் போன்ற துடுப்பாட்ட வீரர் ஒருவரின் இடத்தையும் ஹைதரபாத் அணியில் பிரதியீடு செய்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது தரப்பினை வெற்றிப்பாதையிலும் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
அண்மையில் இலங்கையில் இடம்பெற்று சுதந்திரக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் கதாநாயகனான தினேஷ் கார்த்திக் இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
2010 தொடக்கம் 2014 ஆண்டு காலப்பகுதியில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணியை சில போட்டிகளில், தலைமை தாங்கிய கார்த்திக் இந்தியாவின் உள்ளூர் தொடரான செய்யத் முஸ்தாக் அலி கிண்ணத்தில் தமிழ்நாட்டு அணியையும் வழிநடாத்திய அனுபவத்தினையும் வைத்திருக்கின்றார். எனவே, கார்த்திக்கிற்கு கொல்கத்தா அணியை வழிநடாத்துவது பெரிய அழுத்தங்கள் எதனையும் தரப்போவதில்லை எனலாம்.
முதல் தடவையாக DRS தொழில்நுட்பம்
ஐ.பி.எல். தொடரின் கடந்த பருவகாலப் போட்டிகளில் கள நடுவர்களின் தீர்ப்புக்கள் சில நேரங்களில் சந்தேகத்தினை ஏற்படுத்தும் விதமாக காணப்பட்டிருந்தன. இந்த குழப்பங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க தொழில்நுட்ப உதவிகளுடன் நடுவர்களின் தீர்ப்பை மாற்றும் முறை (DRS) இந்தப்பருவகாலத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றது.
19 வயதின் கீழான இந்திய அணி வீரர்களின் மீது அதிக பண முதலீடு
முன்னைய பருவகாலங்களில் ஐ.பி.எல். போட்டிகள் இடம்பெற்ற போதும் இந்திய 19 வயதின் கீழான உலகக் கிண்ணத்தை 2 தடவைகள் வெற்றி கொண்டிருந்தது. அப்போதைய உலகக் கிண்ணங்களை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்த வீரர்களுக்கு கிடைக்காத மதிப்பினை 2018 ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத்தினை வென்ற வீரர்களுக்கு ஐ.பி.எல். அணிகள் கொடுத்திருக்கின்றன.
இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள்
இளையோர் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களான மனோஜ் கல்ரா, ப்ரீத்வி சா, சுப்மான் கில், கம்லேஷ் நகர்கோட்டி மற்றும் சிவாம் மாவி போன்றவர்களை ஏலத்தில் எடுக்க ஐ.பி.எல். அணிகள், இந்திய நாணயப்படி 9.2 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கின்றன. இது அவ்வணிகள் இளம் வீரர்களின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருப்பதனையும் எடுத்துக் காட்டுகின்றது. இந்த இளம் வீரர்கள் இந்த நம்பிக்கையைக் காப்பற்றுவர்களாக என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எனவே, புதிய விடயங்களோடு எங்களைச் சந்திக்கவிருக்கும் இந்தியாவின் இந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர் என்னென்ன சுவாரசியங்களை எங்களுக்கு தரப்போகின்றது என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம்.