பளுதூக்கலில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

275
Dinusha Gomes

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்றைய தினம் பளுதூக்கல் போட்டிகளில் இலங்கை அணிக்காக 2ஆவது பதக்கத்தை தினூஷா கோமஸ் வென்று கொடுத்தார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தேசிய சாதனையுடன் பதக்கம்

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான..

பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தினூஷா கோமஸ், ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் மற்றும் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 85 கிலோகிராம் உள்ளடங்கலாக 155 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அத்துடன், பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான பளுதூக்கலில் இலங்கைக்காக முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்த வீராங்கனையாகவும் இவர் மாறியுள்ளார்.

இந்நிலையில், போட்டியின் பிறகு தினூஷா கோமஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது முதலாவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்று நாட்டுக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொடுக்க முடிந்தமை பெருமையாக உள்ளது. எனினும், நான் பயிற்சிகளின் போது வெளிப்படுத்திய திறமைகளை இதன்போது பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. அவ்வாறு செய்திருந்தால் வெள்ளிப் பதக்கமொன்றைப் பெற்றிருப்பேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மற்றும் ஓஷியானா பளுதூக்கல் போட்டித் தொடரில் பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்ற தினூஷா கோமஸ், ஸ்னெச் முறையில் 63 கிலோகிராம் மற்றும் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 86 கிலோகிராம் உள்ளடங்கலாக 149 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் ஹங்சனி புதிய தேசிய சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இன்றைய போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு, 196 கிலோகிராம் எடையைத் தூக்கி, போட்டியில் சாதனையை முறியடித்ததுடன் இந்தியாவுக்காக முதலாவது தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுத்தார்.

பரா மெய்வல்லுனரில் உலக சாதனையை நெருங்கிய இலங்கை வீரர்

பூட்டானில் இன்று (27) இடம்பெற்று முடிந்திருக்கும்….

இந்தியாவின் மனிப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயதான சாய்கோம், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனையும் படைத்திருந்தார். எனினும், கடந்த 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மொரிஸியஸ் நாட்டின் ரொய்லியா ரனய்வொசோவா, 170 கிலோகிராம் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர் சதுரங்க லக்மால் ஜயசூரிய வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்திருந்தார்.

இதன்படி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி, பளுதூக்கல் போட்டிப் பிரிவில் 3ஆவது இடத்தையும், ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.