இங்கிலாந்துடன் மோதும் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி

1105

இங்கிலாந்தின் உள்ளக கிரிக்கெட் அணி (Indoor Cricket Team) இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியுடன் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் இலங்கை மண்ணை வந்தடையவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான குறித்த டெஸ்ட் போட்டிகள் யாவும் தலவத்துகொடையிலுள்ள, ஓளஸ்டேசியா (Austasia) சர்வதேச மைதானத்தில் ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இங்கிலாந்தின் உள்ளக கிரிக்கெட் அணி, இத்தொடர் மூலம் இலங்கைக்கு மூன்றாவது தடவையாக சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றது. இதற்கு முன்னர், 2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரு தரப்பு டெஸ்ட் தொடர் ஒன்றுக்காக இலங்கை வந்திருந்த இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணி, அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளக கிரிக்கெட் உலக கிண்ணத்திற்காகவும் இலங்கை வந்திருந்தது. இரண்டு அணிகளுக்கும் இடையில் 2003 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த டெஸ்ட் தொடரை இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 3-0 என கைப்பற்றியிருந்தது.

இங்கிலாந்தின் இறுதி இரண்டு சுற்றுப் பயணங்களின் போதும் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியினை தலைமை தாங்கிய, அசேல பத்திரன தற்போது இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இலங்கை உள்ளக கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றார்.

இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள்

இத்தொடரில் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியினை அனுபவமிக்க கமால் குருப்பு தலைமை தாங்குவதுடன், கோகித்த ஹப்பு ஆராச்சி உப தலைவராக செயற்படுகின்றார்.

உலக உள்ளக கிரிக்கெட் சம்மேளனத்தின் (WICF) மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்ட உள்ளக ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியா சென்றிருந்த இலங்கை அணி, அத்தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பி பெப்ரவரி மாதம் தொடக்கம் இந்த டெஸ்ட் தொடருக்காக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.  

இங்கிலாந்து தேசிய உள்ளக கிரிக்கெட் அணியுடன், அவர்களது மாஸ்டர்ஸ் உள்ளக கிரிக்கெட் அணியும், அபிவிருத்தி உள்ளக கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு வரவிருக்கின்றன. இவ் அணிகள் இரண்டும் இலங்கையின் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணியுடனும், அபிவிருத்தி உள்ளக அணியுடனும் இலங்கை மற்றும் இங்கிலாந்து உள்ளக டெஸ்ட் அணிகள் இடையிலான தொடர் நடக்கின்ற அதே நேரத்தில் மோதுகின்றன.  

இலங்கை குழாம் 

கமால் குருப்பு (அணித்தலைவர்), ஹப்பு ஆராச்சி (உப தலைவர்), தரிந்து மெண்டிஸ், கிரிஷாந்த பீரிஸ், என்டி சோலமன்ஸ், ருவான் தலகலகே, இரோஷன் டி சில்வா, ருமேஸ் பெரேரா, சல்மான் பாரீஸ், மல்ஷான் ரொட்ரிகோ, கிஹான் குணத்திலக்க, ஹரேஷ் டி சில்வா, செவோன் பொன்சேக்கா, அசேல பத்திரன (பயிற்றுவிப்பாளர்), அசித்த தேவ்புர (அணி முகாமையாளர்)